திருமந்திரம் – அறிமுகம்

திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 1,92,000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம், எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.

வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம், சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமூலர் திருமந்திரத்தில் மூன்று அதிமுக்கியமான வாக்கியங்களை, இன்றளவும் நாம் பயன்படுத்தும் விதமாக அருளியுள்ளார், அவையாவன:

  1. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
  2. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
  3. அன்பே சிவம்

இவரது திருநூலுக்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளதால், பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது.

திருமந்திரத்தில் “ஐந்து கரத்தினை” என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில்தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற, பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கும், சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியத்திலும் காட்சி அளிக்கின்றது.

One thought on “திருமந்திரம் – அறிமுகம்

Leave a Reply to Dr. Subas ChandranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.