பாடல் #881: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழிக்கத் தற்சுட ரைந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.
விளக்கம்:
உடலில் புருவ மத்திக்குக் கீழே இருக்கும் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்நாக்கில் பொழியும் அமிர்தத்தோடு புருவ மத்திக்கு மேலே இருக்கின்ற அறிவு, ஆற்றல், ஓசை, ஒளி, உயிர் ஆகிய ஐந்து சுடர்களையும் ஒன்று படுத்தி அதனுடன் மூலாதாரத்திலிருந்து எழுப்பிய குண்டலினி சக்தியை நடு நாடியாகிய சுழுமுனையின் வழியே மேலேற்றிக் கொண்டு வந்து ஒன்றாகக் கலந்து அதிலேயே எண்ணங்களை வைத்து தியானத்தில் இருக்கக் கூடிய யோகியர்களுக்கு என்றும் இறப்பு இல்லை. அவர்களுக்கு ஆயுளின் மூச்சுக்காற்று அளவுகளும் நாள் கணக்குகளும் இல்லை.