பாடல் #535: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை
சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.
விளக்கம்:
உண்மையான ஞான வழியைக் கூறிய குருவின் முன்பாகப் பொய் பேசினால் இருக்கும் நல்லொழுக்கம் குறைந்து போவது மட்டுமன்றி அவர் கொடுத்த ஞானமும் அழிந்துவிடும். தொன்றுதொட்டு (பழங்காலத்திலிருந்து) வருகின்ற ஞானத்தை அடையும் வழிகளும் மறந்துபோய் ஆத்ம வளர்ச்சிக்கான பிற வழிகளும் அழிந்து போய் வறுமையும் உண்டாகும்.