பாடல் #379: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பமுங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானதடி சாரகி லாரே.
விளக்கம்:
ஒளிபொருந்திய உடலைக் கொடுத்த இறைவனை வழிபடுகின்ற தேவர்கள் எம்மைப் போல இறைவனிடம் தம்மையே ஒப்படைத்தாலும் இறைவனின் தன்மையை அறிய மாட்டார்கள். இறைவனிடம் தன்னைக் கொடுத்தால் இறைவனை அறியலாம். தன்னைக் கொடுத்தவர்க்கு இறைவனும் தன்னையும் தந்து பேரின்பத்தையும் தருவான். அந்த இன்பத்திலேயே மூழ்கித் தம்மை மறந்துவிடாதபடி வலிமை பெறும் பொருட்டு தம் திருவடியையும் தருகிறான் இறைவன். ஆனால் தேவர்கள் யாம் இறைவனின் திருவடியை சார்ந்திருப்பதைப்போல தேவர்கள் இறைவனின் திருவடியைச் சார்ந்திருக்கவில்லை.