பாடல் #328: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்துஅறி யாரே.
விளக்கம்:
புத்தியை மயக்கும் மதுவை அருந்தி அதில் மயங்கிக் கிடப்பவர்கள் இறைவனை அடையும் வழிகளைச் சொல்லும் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்பவற்றில் உள்ள உட்பொருளை அவர்கள் உணர்வதில்லை. உயிர்களுக்கு பெருங்கருணையோடு அருளை வாரி வழங்கும் வள்ளலாகிய இறைவனின் அருள் பெற்று வாழும் பேரானந்த வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள், அறிவிற்கு தெளிவைக் கொடுக்கும் உண்மையான ஞானத்தைத் தரும் சிவயோகம் செய்பவர்களுடன் சேரவும் மாட்டார்கள் தானும் சிவயோகம் செய்ய மாட்டார்கள். மதுவை அருந்துபவர்கள் உண்மை கருத்துக்கள் எதையும் அறிந்து கொள்ளும் தகுதி இல்லாதவர்கள் ஆகின்றனர்.
குறிப்பு : பேரொளியாக இருக்கும் பதி என்ற இறைவனிடம் இருந்து வந்த ஆத்மா தான் பசு இந்த பசு மீண்டும் பதியாகிய இறைவனிடம் சென்று சேர்ந்து பிறவி இல்லா முக்தி அடைய வேண்டும். ஆனால் பதியிடம் இந்த பசு சென்று சேரவிடாமல் தடுப்பது பாசம் எண்ணும் கயிறு. சிவயோகம் செய்து உண்மை ஞானத்தை அடைந்தால் பாசம் என்னும் கயிற்றை அறுத்து பதியிடம் சென்று சேர்ந்து விடலாம். இந்த உண்மை ஞானத்தை அறிந்து கொள்ளும் அறிவை மது அழித்துவிடும்.