பாடல் #1760: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)
பராபர னெந்தை பனிமதி சூடித்
தராபரன் தன்னடி யார்மனங் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னு
மராமரன் மன்னி மனத்துறைந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பராபர னெநதை பனிமதி சூடிற
றராபரன றனனடி யாரமனங கோயில
சிராபரன றெவரகள செனனியில மனனு
மராமரன மனனி மனததுறைந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பராபரன் எந்தை பனி மதி சூடி
தராபரன் தன் அடியார் மனம் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
அராமரன் மன்னி மனத்து உறைந்தானே.
பதப்பொருள்:
பராபரன் (அனைத்திற்கும் மேலான பரம்பொருளானவனும்) எந்தை (எமது தந்தையானவனும்) பனி (தன் தலையில் குளிர்ச்சியான) மதி (நிலவை) சூடி (சூடிக் கொண்டு இருப்பவனும்)
தராபரன் (உலகங்களுக்கு எல்லாம் தலைவனாவனும்) தன் (தமது) அடியார் (அடியார்களின்) மனம் (மனதையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருப்பவனும்)
சிராபரன் (தேவர்களுக்கும் மேலான தேவனும்) தேவர்கள் (விண்ணுலக தேவர்களின்) சென்னியில் (தலையில்) மன்னும் (நிலை பெற்று வீற்றிருப்பவனும்)
அராமரன் (உருவமில்லாமல் இருக்கின்ற பரம்பொருளுமாகிய இறைவன்) மன்னி (எமக்குள் நிலை பெற்று) மனத்து (எமது மனதிற்குள்) உறைந்தானே (எப்போதும் வீற்றிருந்தான்).
விளக்கம்:
அனைத்திற்கும் மேலான பரம்பொருளானவனும், எமது தந்தையானவனும், தன் தலையில் குளிர்ச்சியான நிலவை சூடிக் கொண்டு இருப்பவனும், உலகங்களுக்கு எல்லாம் தலைவனாவனும், தமது அடியார்களின் மனதையே தமக்கு விருப்பமான கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருப்பவனும், தேவர்களுக்கும் மேலான தேவனும், விண்ணுலக தேவர்களின் தலையில் நிலை பெற்று வீற்றிருப்பவனும், உருவமில்லாமல் இருக்கின்ற பரம்பொருளுமாகிய இறைவன் எமக்குள் நிலை பெற்று எமது மனதிற்குள் எப்போதும் வீற்றிருந்தான்.
நன்றி.