பாடல் #1756: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)
தானே ரெழுகின்ற சோதியைக் காணலாம்
பானே ரெழுகின்ற வைம்பதம் வந்திடிற்
பூனே ரெழுகின்ற பொற்கொடி தன்னுடன்
றானே யெழுந்த வகாரமது ஆமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானெ ரெழுகினற சொதியைக காணலாம
பானெ ரெழுகினற வைமபதம வநதிடிற
பூனெ ரெழுகினற பொறகொடி தனனுடன
றானெ யெழுநத வகாரமது ஆமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
பான் நேர் எழுகின்ற ஐம்பதம் வந்திடில்
பூ நேர் எழுகின்ற பொற் கொடி தன்னுடன்
தானே எழுந்த அகாரம் அது ஆமே.
பதப்பொருள்:
தான் (தமக்குள் இருக்கின்ற) நேர் (சுழுமுனை நாடியின் வழியே நேராக) எழுகின்ற (மூலாதாரத்திலிருந்து எழுந்து மேலே வருகின்ற) சோதியைக் (ஜோதியை) காணலாம் (காணலாம்)
பான் (அண்டம் எங்கும் பரவி) நேர் (அனைத்திற்கும் அதனதன் தன்மைக்கு ஏற்ப சரிசமமாக) எழுகின்ற (எழுந்து இருக்கின்ற) ஐம்பதம் (இறைவனின் ஐந்து பூதங்கள்) வந்திடில் (தமக்குள்ளும் இருக்கின்றது என்கின்ற உணர்வு வந்து விட்டால்)
பூ (சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில்) நேர் (சுழுமுனை நாடிக்கு நேராக) எழுகின்ற (எழுகின்ற) பொற் (பொன் போல பிரகாசிக்கும்) கொடி (கொடியாக வீற்றிருக்கும்) தன்னுடன் (இறைவியுடன்)
தானே (தாமாகவே எப்போதும் சேர்ந்தே) எழுந்த (எழுந்தருளும் இறைவனை உணரலாம்) அகாரம் (ஓங்காரத்தில் ‘அ’கார எழுத்தாக இருக்கின்ற) அது (ஆத்ம இலிங்கத்தின் தத்துவம் அதுவே) ஆமே (ஆகும்).
விளக்கம்:
தமக்குள் இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து நேராக எழுந்து மேலே வருகின்ற ஜோதியை பாடல் #1755 இல் உள்ளபடி தாமாகவே இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்து கொண்டவர்கள் காணலாம். அப்போது அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் அதனதன் தன்மைக்கு ஏற்ப சரிசமமாக எழுந்து இருக்கின்ற இறைவனின் ஐந்து பூதங்கள் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மற்றும் நிலம்) தமக்குள்ளும் இருக்கின்றது என்கின்ற உணர்வு வந்து விட்டால், சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் சுழுமுனை நாடிக்கு நேராக எழுகின்ற பொன் போல பிரகாசிக்கும் கொடியாக வீற்றிருக்கும் இறைவியுடன் தாமாகவே எப்போதும் சேர்ந்தே எழுந்தருளும் இறைவனை உணரலாம். ஓங்காரத்தில் ‘அ’கார எழுத்தாக இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தின் தத்துவம் இதுவே ஆகும்.