பாடல் #1751: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம் பகுந்திட்ட நாடிலத்
தார மிரண்டுந் தரணி முழுதுமாய்
மாறி யெழுந்திடு மோசைய தாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம பகுநதிடட நாடிலத
தார மிரணடுந தரணி முழுதுமாய
மாறி யெழுநதிடு மொசைய தாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆரும் அறியார் அகாரம் அது ஆவது
பாரும் உகாரம் பகுந்து இட்ட நாடில் அத்
தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே.
பதப்பொருள்:
ஆரும் (சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும்) அறியார் (அறிந்து கொள்ள மாட்டார்கள்) அகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும்) அது (அருளாக) ஆவது (இருப்பது எது என்று)
பாரும் (உலகத்திலும்) உகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை) பகுந்து (பிரித்து) இட்ட (வகுத்துக் கொடுத்த இறை சக்தியை) நாடில் (தமக்குள் தேடி உணர்ந்தால்) அத் (அது)
தாரம் (பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும் வெளியிலும் இறை சக்தியாகவும் என்று) இரண்டும் (இரண்டுமாக) தரணி (உலகம்) முழுதும் (முழுவதற்கும் நிறைந்து) ஆய் (நிற்பதாய்)
மாறி (தமக்குள்ளிருந்தே மாறி) எழுந்திடும் (எழுந்திடும்) ஓசை (நாதம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).
விளக்கம்:
சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும் அருளாக இருப்பது எது என்று அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகத்திலும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை பிரித்து வகுத்துக் கொடுத்த இறை சக்தியை தமக்குள் தேடி உணர்ந்தால் அது பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும், வெளியிலும் இறை சக்தியாகவும், என்று இரண்டுமாக உலகம் முழுவதற்கும் நிறைந்து நிற்பதாய் தமக்குள்ளிருந்தே மாறி எழுந்திடும் நாதம் ஆகும்.
கருத்து:
ஓங்காரத்தில் ‘அ’காரமாக உள்ளுக்குள் இருந்து இயக்குகின்ற சக்தியும் ‘உ’காரமாக வெளி உலகத்தை இயக்குகின்ற சக்தியும் நாத வடிவமாக இருக்கின்ற நடராஜ தத்துவத்தை குறிப்பதாகும். நடராஜ தத்துவத்தை தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களே இந்த ஓங்கார தத்துவத்தை அறிந்து சதாசிவ இலிங்கத்தின் நாத வடித்தை உணர்ந்து கொள்வார்கள். ஓங்காரத்தில் இருக்கின்ற இந்த இரண்டு சக்திகளே இறைவனுக்கு இரண்டு சக்திகளாக அனைத்து தெய்வ வடிவங்களிலும் காட்டப் படுகின்றது.