பாடல் #1750

பாடல் #1750: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

தன்மேனி தான்சிவ லிங்கமாய் நின்றிடுந்
தன்மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்
தன்மேனியில் தானாகுந் தற்பரந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனமெனி தானசிவ லிஙகமாய நினறிடுந
தனமெனி தானுஞ சதாசிவமாய நிறகுந
தனமெனி தறசிவன தறசிவா னநதமாந
தனமெனியில தானாகுந தறபரந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் மேனி தான் சிவ இலிங்கம் ஆய் நின்றிடும்
தன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும்
தன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம்
தன் மேனியில் தான் ஆகும் தற் பரம் தானே.

பதப்பொருள்:

தன் (அடியவரின்) மேனி (உடல்) தான் (தானே) சிவ (சிவ) இலிங்கம் (இலிங்கம்) ஆய் (ஆக) நின்றிடும் (நிற்கும்)
தன் (அடியவரின்) மேனி (உடல்) தானும் (தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும்) சதா (சதா) சிவம் (சிவப் பரம் பொருள்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கும்)
தன் (அடியவரின்) மேனி (உடல்) தன் (தனது) சிவன் (சிவனாகவும்) தன் (தன்னுடைய) சிவ (சிவ) ஆனந்தம் (பேரின்பமாகவும்) ஆம் (ஆகும்)
தன் (அடியவரின்) மேனியில் (உடலில்) தான் (தானே) ஆகும் (ஆகி நிற்பது) தற் (தானாகவே எப்போதும் இருக்கின்ற) பரம் (பரம்பொருள்) தானே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1749 இல் உள்ளபடி அண்ட சராசரங்களாகவும் அனைத்துமாகவும் இருக்கின்ற நடராஜ தத்துவத்தை தமக்குள்ளே உணர்ந்து கொண்ட அடியவரின் உடலானது தானே சிவ இலிங்கமாக நிற்கும். அடியவர் தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும் சதாசிவப் பரம் பொருளாகவே நிற்பார். அடியவர் தனது உடலே சிவனாகவும், தன்னுடைய உடலுக்குள்ளேயே சிவ பேரின்பமாகவும் ஆகி விடுவார். இவ்வாறு அடியவரின் உடல் தானே ஆகி நிற்பது தானாகவே எப்போதும் இருக்கின்ற பரம்பொருள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.