பாடல் #1733: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
அத்திசைக் குள்ளே யமர்ந்தன வாறங்க
மத்திசைக் குள்ளே யமர்ந்தன நால்வேத
மத்திசைக் குள்ளே யமர்ந்த சரிதையோ
டத்திசைக் குள்ளே யமைந்த சமையமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அததிசைக குளளெ யமரநதன வாறஙக
மததிசைக குளளெ யமரநதன நாலவெத
மததிசைக குளளெ யமரநத சரிதையொ
டததிசைக குளளெ யமைநத சமையமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அத் திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம்
அத் திசைக்கு உள்ளே அமர்ந்தன நால் வேதம்
அத் திசைக்கு உள்ளே அமர்ந்த சரிதையோடு
அத் திசைக்கு உள்ளே அமைந்த சமையமே.
பதப்பொருள்:
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்தன (அமர்ந்து இருக்கின்றது) ஆறு (வேதத்தின் ஆறு) அங்கம் (அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவை)
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்தன (அமரந்து இருக்கின்றது) நால் (ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகிய நான்கு) வேதம் (வேதங்களும்)
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்த சரிதையோடு
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமைந்த சமையமே.
விளக்கம்:
அண்ட சராசரங்களில் உள்ள பத்து திசைகளுக்கு உள்ளே பாடல் #55 இல் உள்ளபடி வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவையும், நான்கு வேதங்களாகிய ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகியவையும், இறைவனை அடையும் நான்கு வழிமுறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும், பாடல் #994 இல் உள்ளபடி இறைவனை அடையும் ஆறு சமயங்களாகிய தியானம், செபம், பூஜை, சக்கரம், ஞானம், புத்தி ஆகியவையும் அமர்ந்து இருக்கின்றன.
வேதத்தின் ஆறு அங்கங்கள்:
சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.
நான்கு வேதங்கள்:
ரிக்கு – தெய்வங்களை போற்றி வணங்குகின்ற மந்திரங்களைக் கொண்டது.
யஜூர் – தெய்வங்களை யாகம் செய்து வழிபடும் முறைகளைக் கொண்டது.
சாமம் – இசை மூலம் இறைவனை போற்றும் பாடல்களைக் கொண்டது.
அதர்வணம் – தெய்வ சக்திகளை உபயோகித்து பாதுகாத்துக் கொள்கின்ற மந்திரங்களைக் கொண்டது.
இறைவனை அடையும் நான்கு வித வழிகள்:
சரியை – கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது. (பக்தி யோகம்)
கிரியை – மந்திரம் சொல்லி சக்கரங்கள் வைத்து வழிபடுவது. (கர்ம யோகம்)
யோகம் – தியானம், தவம் செய்வது. (இராஜ யோகம்)
ஞானம் – அனைத்திற்கும் மேலான நிலையில் சலனங்கள் இன்றி இருப்பது. (ஞான யோகம்)
இறைவனை அடையும் ஆறு வித சமயங்கள்:
தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்.
செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்.
பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்.
சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்.
ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்.
புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்.