பாடல் #1647: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)
புண்ணிய பாவ மிரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிக
ளெண்ணி யிரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணலி ருந்திட மாய்ந்து கொள்ளீரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
புணணிய பாவ மிரணடுள பூமியில
நணணும பொழுதறி வாரசில ஞானிக
ளெணணி யிரணடையும வெரறுத தபபுறத
தணணலி ருநதிட மாயநது கொளளீரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இரும் இடம் ஆய்ந்து கொள்ளீரே.
பதப்பொருள்:
புண்ணியம் (புண்ணியம்) பாவம் (பாவம்) இரண்டு (என்று இரண்டு விதமான வினைகளும் அவற்றின் பயன்களுமே) உள (இருக்கின்றன) பூமியில் (இந்த உலகத்தில்)
நண்ணும் (இறைவனின் திருவருள் கிடைக்கும்) பொழுது (பொழுது) அறிவார் (அவற்றை அறிந்து கொள்வார்கள்) சில (சில) ஞானிகள் (ஞானிகள்)
எண்ணி (அறிந்த பிறகு அவற்றை நினைத்து பார்த்து) இரண்டையும் (புண்ணியம் பாவம் ஆகிய இரண்டு வினைகளையுமே) வேர் (வேரோடு) அறுத்து (அறுத்து எடுத்து) அப்புறத்து (தம்மை விட்டு அப்புறப் படுத்தி விட்டால்)
அண்ணல் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன்) இரும் (இருக்கின்ற) இடம் (இடம்) ஆய்ந்து (தமக்குள்ளேயே இருப்பதை ஆராய்ந்து) கொள்ளீரே (அறிந்து கொள்வார்கள்).
விளக்கம்:
புண்ணியம் பாவம் என்று இரண்டு விதமான வினைகளும் அவற்றின் பயன்களுமே இருக்கின்றன இந்த உலகத்தில். இறைவனின் திருவருள் கிடைக்கும் பொழுது அவற்றை அறிந்து கொள்வார்கள் சில ஞானிகள். அவ்வாறு அறிந்த பிறகு அவற்றை நினைத்து பார்த்து புண்ணியம் பாவம் ஆகிய இரண்டு வினைகளையுமே வேரோடு அறுத்து எடுத்து தம்மை விட்டு அப்புறப் படுத்தி விட்டால், அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன் இருக்கின்ற இடம் தமக்குள்ளேயே இருப்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள்.