பாடல் #1521

பாடல் #1521: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

எய்திய காலங்க ளெத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநாயக மென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் கோட்டது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயதிய காலஙக ளெததனை யாயினுந
தையலுந தானுந தனிநாயக மெனபர
வைகலுந தனனை வணஙகு மவரகடகுக
கையிற கருமஞசெய கொடடது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனி நாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு
கையில் கருமம் செய் கோட்டு அது ஆமே.

பதப்பொருள்:

எய்திய (சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் தாம் எடுத்துக் கொண்ட எந்த சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற) காலங்கள் (காலங்கள்) எத்தனை (எத்தனை எத்தனை வருடங்களாக) ஆயினும் (இருந்தாலும்)
தையலும் (ஒன்றோடு ஒன்று தைப்பது போல பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியும்) தானும் (இறைவனும்) தனி (சாதகர்கள் வணங்கக் கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்து தன்மைக்கும் ஒரே) நாயகம் (தலைவராக இருக்கின்றார்) என்பர் (என்பதை தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள்)
வைகலும் (ஆகவே தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும்) தன்னை (இறைவனை) வணங்கும் (வணங்குகின்ற) அவர்கட்கு (சாதகர்களுக்கு)
கையில் (அவர்களின் கைகளினால்) கருமம் (சாதகங்கள்) செய் (செய்த வழிபாட்டிற்கு) கோட்டு (அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள்) அது (போலவே உடனுக்குடன் பலன்களை) ஆமே (தருபவனாக இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் தாம் எடுத்துக் கொண்ட எந்த சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற காலங்கள் எத்தனை எத்தனை வருடங்களாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்று தைப்பது போல பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியும் இறைவனும் சாதகர்கள் வணங்கக் கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்து தன்மைக்கும் ஒரே தலைவராக இருக்கின்றார் என்பதை தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள். ஆகவே தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் இறைவனை வணங்குகின்ற சாதகர்களுக்கு அவர்களின் கைகளினால் சாதகங்கள் செய்த வழிபாட்டிற்கு அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள் போலவே உடனுக்குடன் பலன்களை தருபவனாக இறைவன் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.