பாடல் #1522

பாடல் #1522: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)

கண்டுகொண் டோமிரண்டுந் தொடர்ந் தாங்கொளி
பண்டுகண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும வளர்சடை யண்ணலைக்
கண்டுகொண் டோர்க்கிருள் நீங்கிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடுகொண டொமிரணடுந தொடரந தாஙகொளி
பணடுகண டொயும பரமன பரஞசுடர
வணடுகொண டாடும வளரசடை யணணலைக
கணடுகொண டொரககிருள நீஙகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டு கண்டு ஓயும் பரமன் பரம் சுடர்
வண்டு கொண்டு ஆடும் வளர் சடை அண்ணலை
கண்டு கொண்டோர்க்கு இருள் நீங்கி நின்றானே.

பதப்பொருள்:

கண்டு (கண்டு) கொண்டோம் (கொண்டோம்) இரண்டும் (இறைவியும் இறைவனும் பிண்ணிப் பிணைந்து) தொடர்ந்து (தொடர்ச்சியாக) ஆங்கு (விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற) ஒளி (ஒளியை)
பண்டு (ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியை) கண்டு (கண்டு) ஓயும் (அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால்) பரமன் (பரம்பொருளாகிய இறைவனே) பரம் (அந்த பரம்) சுடர் (ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும்)
வண்டு (வண்டுகள்) கொண்டு (நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு) ஆடும் (களிப்பில் ஆடுவது போல அடியவர்களை தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற) வளர் (நீண்டு வளருகின்ற) சடை (பிண்ணிய சடையை) அண்ணலை (அணிந்து இருக்கின்ற தலைவனும் அடியவனுமாகிய இறைவனை)
கண்டு (தமக்குள் இருக்கும் ஜோதியாக கண்டு) கொண்டோர்க்கு (உணர்ந்து கொண்டவர்களுக்கு) இருள் (மாயையை) நீங்கி (நீங்கி) நின்றானே (இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்).

விளக்கம்:

கண்டு கொண்டோம் இறைவியும் இறைவனும் பிண்ணிப் பிணைந்து தொடர்ச்சியாக விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற ஒளியை. ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியை கண்டு அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால் பரம்பொருளாகிய இறைவனே அந்த பரம் ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும். வண்டுகள் நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு களிப்பில் ஆடுவது போல அடியவர்களை தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற நீண்டு வளருகின்ற பிண்ணிய சடையை அணிந்து இருக்கின்ற தலைவனும் அடியவனுமாகிய இறைவனை தமக்குள் இருக்கும் ஜோதியாக கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு மாயையை நீங்கி இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்.

One thought on “பாடல் #1522

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.