பாடல் #1449: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)
சரிதாதி நான்குந் தகுஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சரிதாதி நானகுந தகுஞான நானகும
விரிவான வெதாநத சிததாநத மாறும
பொருளா னதுநநதி பொனனகர பொநது
மருளாகு மாநதர வணஙகவைத தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சரிதை ஆதி நான்கும் தகு ஞானம் நான்கும்
விரிவு ஆன வேத அந்தம் சித்த அந்தம் ஆறும்
பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.
பதப்பொருள்:
சரிதை (சரியை) ஆதி (முதலாகிய) நான்கும் (இறைவனை அடைவதற்கான நான்கு வித வழிமுறைகளையும்) தகு (அவற்றை முயன்று செய்வதற்கு தேவையான) ஞானம் (அறிவாகிய) நான்கும் (நான்கு விதமான ஞானத்தையும்)
விரிவு (அந்த ஞானங்களின் விரிவாக) ஆன (இருக்கின்ற) வேத (வேதத்தின்) அந்தம் (எல்லையாகிய ஆறும்) சித்த (சித்தத்தின்) அந்தம் (எல்லையும் ஆகிய) ஆறும் (ஆறும் ஆகிய வழிமுறைகளையும்)
பொருள் (இவை அனைத்து முறைகளுக்கும் உண்மைப் பொருளாக) ஆனது (இருக்கின்றவனும்) நந்தி (குருநாதனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவன்) பொன் (தான் வீற்றிருக்கும் தங்கம் போன்ற) நகர் (தில்லை சிற்றம்பலத்தில்) போந்து (வந்து நுழையும் படி செய்து)
மருள் (அவனை அடையும் வழிமுறையை அறியாமல் மாயையில் சிக்கி சுழன்று கொண்டு) ஆகும் (இருக்கின்ற) மாந்தர் (மனிதர்களை) வணங்க (தம்மை வணங்கும் படி) வைத்தானே (செய்து அவர்களை ஆட்கொள்கிறான்).
விளக்கம்:
இறைவனை அடைவதற்கான சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான வழிமுறைகளுக்கும் அவற்றை செய்வதற்கு தேவையான அறிவாகிய நான்கு விதமான ஞானங்களுக்கும் அந்த ஞானங்களின் விரிவாக இருக்கின்ற வேதத்தின் எல்லையாக இருக்கின்ற காபிலம் காணாதம் பாதஞ்சலம் அட்சபாதம் வியாசம் ஜைமினியம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் உண்மைப் பொருளாக இருக்கின்ற குருநாதனாகிய இறைவன் தம்மை அடையும் இந்த வழிமுறைகளை அறியாமல் மாயையில் சிக்கி சுழன்று கொண்டு இருக்கின்ற மனிதர்களை தான் வீற்றிருக்கும் தங்கம் போன்ற தில்லை சிற்றம்பலத்திற்குள் நுழைய வைத்து தம்மை வணங்கும் படி செய்து அவர்களை ஆட்கொள்கிறான்.
கருத்து: மாயையில் இருக்கின்ற மனிதர்களை சரியை முறையில் தான் வீற்றிருக்கும் கோயில்களுக்கு வரவைத்து தம்மை வணங்கும் படி செய்து அதன் பயனால் மாயையை நீக்கி ஞானத்தை கொடுத்து இறைவன் ஆட்கொள்கின்றான்.