பாடல் #1447: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)
சார்ந்தமெஞ் ஞானத்தோர் தானவ னாயற்றோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோ
ராய்ந்த கிரிகையோ ரர்சனை தப்பாதோர்
நேர்ந்த சரிதையோர் நீணிலத் தோர்களே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சாரநதமெஞ ஞானததொர தானவ னாயறறோர
செரநதவெண யொகததர சிததர சமாதியொ
ராயநத கிரிகையொ ரரசனை தபபாதொர
நெரநத சரிதையொர நீணிலத தொரகளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சார்ந்த மெய் ஞானத்தோர் தான் அவன் ஆய் அற்றோர்
சேர்ந்த எண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோர்களே.
பதப்பொருள்:
சார்ந்த (இறைவனை சார்ந்து இருந்து) மெய் (உண்மை) ஞானத்தோர் (ஞானத்தை அடைந்தவர்கள்) தான் (தாமே) அவன் (இறைவனாக) ஆய் (ஆகி) அற்றோர் (தான் எனும் தன்மை இல்லாதவர்கள் ஆகின்றார்கள்)
சேர்ந்த (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும்) எண் (எண்ணங்களால்) யோகத்தர் (யோகத்தில் மேல் நிலை பெற்ற யோகியர்கள்) சித்தர் (சித்தர்களாக ஆகி) சமாதியோர் (சமாதி நிலையில் இருக்கின்றார்கள்)
ஆய்ந்த (இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு) கிரியையோர் (அதன் படியே கிரியையை செய்கின்றவர்கள்) அருச்சனை (பூசைகளை) தப்பாதோர் (முறைப்படி தவறாமல் செய்கின்றார்கள்)
நேர்ந்த (இறைவனை அடைவதையே குறிக்கோளாக கொண்டு) சரியையோர் (சரியையை செய்கின்றவர்கள்) நீள் (நீண்ட காலம்) நிலத்தோர்களே (இந்த உலகத்திலேயே இருக்கின்றார்கள்).
விளக்கம்:
இறைவனை சார்ந்து இருந்து உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் தாமே இறைவனாக ஆகி தான் எனும் தன்மை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் எண்ணங்களால் யோகத்தில் மேல் நிலை பெற்ற யோகியர்கள் சித்தர்களாக ஆகி சமாதி நிலையில் இருக்கின்றார்கள். இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் படியே கிரியையை செய்கின்றவர்கள் அதற்காக செய்கின்ற பூசைகளை முறைப்படி தவறாமல் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இறைவனை அடைவதையே குறிக்கோளாக கொண்டு சரியையை செய்கின்றவர்கள் நீண்ட காலம் இந்த உலகத்திலேயே இருக்கின்றார்கள்.