பாடல் #1444

பாடல் #1444: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

உயிர்க்குயி ராய்நிற்ற லொண்ஞான பூசை
யுயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
யுயிர்பெறு மாவா கனம்புறப் பூசை
செயற்கிடை நேசஞ் சிவபூசை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயிரககுயி ராயநிறற லொணஞான பூசை
யுயிரககொளி நொககல மகாயொக பூசை
யுயிரபபெறு மாவா கனமபுறப பூசை
செயறகிடை நெசஞ சிவபூசை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறும் ஆவாகனம் புற பூசை
செயற்கு இடை நேசம் சிவ பூசை தானே.

பதப்பொருள்:

உயிர்க்கு (உயிர்களுக்குள்) உயிராய் (ஆன்மாவாக இறைவன்) நிற்றல் (நிற்கின்ற விதத்தை) ஒண் (தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்) ஞான (ஆத்ம விசாரமாகிய / நான் யார் என்று அறிந்து கொள்வதாகிய ஞான) பூசை (பூசையாகும்)
உயிர்க்கு (உயிர்களுக்குள்) ஒளி (ஒளியாக இருக்கும் இறைவனை) நோக்கல் (தமக்குள்ளே தரிசித்தல்) மகா (மாபெரும்) யோக (சாதனையாகிய யோக) பூசை (பூசையாகும்)
உயிர் (உருவச் சிலைகள் இறை சக்தியை) பெறும் (பெறும்படி) ஆவாகனம் (மந்திரங்கள் சொல்லி கிரியைகள் செய்து சக்தியூட்டி) புற (அந்த சிலைகளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்வது வெளிப்புற) பூசை (பூசையாகும்)
செயற்கு (எந்தவிதமான பூசைகளை செய்தாலும்) இடை (அந்த பூசைக்கான செயல்களை) நேசம் (இறைவன் மேல் கொண்ட பேரன்போடு செய்வது) சிவ (மானசீகமாகிய சிவ) பூசை (பூசை) தானே (ஆகும்).

விளக்கம்:

உயிர்களுக்குள் ஆன்மாவாக இறைவன் நிற்கின்ற விதத்தை தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் ஆத்ம விசாரமாகிய (நான் யார் என்று அறிந்து கொள்வது) ஞான பூசையாகும். உயிர்களுக்குள் ஒளியாக இருக்கும் இறைவனை தமக்குள்ளே தரிசித்தல் மாபெரும் சாதனையாகிய யோக பூசையாகும். உருவச் சிலைகள் இறை சக்தியை பெறும்படி மந்திரங்கள் சொல்லி கிரியைகள் செய்து சக்தியூட்டி அந்த சிலைகளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்வது வெளிப்புற பூசையாகும். எந்தவிதமான பூசைகளை செய்தாலும் அந்த பூசைக்கான செயல்களை இறைவன் மேல் கொண்ட பேரன்போடு செய்வது மானசீகமாகிய சிவ பூசையாகும். இந்த நான்கு விதமான பூசைகளே சரியை ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.