பாடல் #1426: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையு முழுவெண்ணெண் சித்தியு
மேனை நிலமு மெழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஞானி புவியெழு நனனூ லனைததுடன
மொன திசையு முழுவெணணெண சிததியு
மெனை நிலமு மெழுதா மறையீறுங
கொனொடு தனனையுங காணுங குணததனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஞானி புவி எழு நன் நூல் அனைத்துடன்
மோன திசையும் முழு எண் எண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோன் ஓடு தன்னையும் காணும் குணத்தனே.
பதப்பொருள்:
ஞானி (ஞானியாகிய சாதகர்) புவி (உலகத்திலுள்ள உயிர்கள்) எழு (எழுச்சி பெற) நன் (நன்மையை தருகின்ற) நூல் (நூல்கள்) அனைத்துடன் (அனைத்தையும் அறிந்து கொள்பவராகவும்)
மோன (பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும்) திசையும் (அனைத்து திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும்) முழு (தமது முழு) எண் (எண்ணத்திலும் இறைவனை வைத்து) எண் (எட்டு விதமான) சித்தியும் (சித்திகளையும் பெற்றவராகவும்)
ஏனை (இந்த உலகம் தாண்டி இருக்கின்ற) நிலமும் (அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும்) எழுதா (அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக) மறை (மறைத்து வைத்து இருக்கும் வேதங்களையும்) ஈறும் (அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும்)
கோன் (அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற) ஓடு (இறைவனோடு) தன்னையும் (தன்னையும்) காணும் (சரிசமமாக பாவிக்கும்) குணத்தனே (குணத்தை கொண்டவராகவும் இருப்பார்).
விளக்கம்:
பாடல் #1425 இல் உள்ளபடி சக்தி மயங்களாகிய இறையை இந்த உலகிலேயே உணர்ந்து கொண்ட ஞானியாகிய சாதகர் உலகத்திலுள்ள உயிர்கள் எழுச்சி பெற நன்மையை தருகின்ற நூல்கள் அனைத்தையும் அறிந்து கொள்பவராகவும் பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும் அனைத்து திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும் தமது எண்ணம் முழுவதிலும் இறைவனையே வைத்து எட்டு விதமான சித்திகளையும் பெற்றவராகவும் இந்த உலகம் தாண்டி இருக்கின்ற அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும் அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக மறைத்து வைத்து இருக்கும் வேதங்களையும் அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும் அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற இறைவனோடு தன்னையும் சரிசமமாக பாவிக்கும் குணத்தை கொண்டவராகவும் இருப்பார்.