பாடல் #109

பாடல் #109: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

விளக்கம்:

தேவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் ஆன்மாக்கள் இருப்பது தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடியிருக்கும் சிவபெருமானின் திருவருளினாலன்றி வேறில்லை. அச்சிவபெருமானின் அருள் இல்லாமல் தானாகவே இருந்தவர்கள் என்றும் தனியொரு தெய்வம் என்றும் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இறைவனே உயிர்களின் உடலுக்குள்ளும் இருக்கின்றான் என்பதை உணர்வதுதான் பிறவியின் உண்மையான பயனாகும்.

பாடல் #110

பாடல் #110: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

விளக்கம்:

ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பான சிவமே படைத்தலில் பிரம்மன் காத்தலில் திருமால் அழித்தலில் உருத்திரன் என்கின்ற மூவராகவும் அவர்களோடு அருளலில் மகேசுவரன் மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் நின்று அந்தத் தொழில்களை செய்துவருவதும் அந்தச் சிவமே ஆதியிலிருந்து இருக்கின்ற பரம்பொருள் என்பதை அறியாத மூடர்கள் அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அவர்களை வேறு வேறு தெய்வங்களாகக் கருதிக்கொண்டு அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று வீணாகச் சண்டையிட்டுக்கொண்டு புலம்புகின்றார்கள்.

பாடல் #111

பாடல் #111: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அயன் ஆகித்
தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

விளக்கம்:

பரம்பொருள் என்பதில் ஒன்றானவனாகவும் உயிர்களுக்குள்ளும் வெளியிலும் இருப்பவனும் ஆன்மா மாதவம் செய்து பெற்ற வரத்தினால் திருமாலாகவும் பிரம்மனாகவும் தவம் செய்த தகுதிக்கேற்ப வெவ்வேறு விதமான தரங்களில் பலவித தன்மைகள் கொண்ட தெய்வங்களாகவும் செய்கின்ற தொழில்களில் பலவிதமாக நின்று அருளுகின்றவன் சதாசிவமூர்த்தியாகிய ஒருவனே.

பாடல் #112

பாடல் #112: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளன்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

விளக்கம்:

எமது இறைவனாகிய சிவமே ஞானசக்தியை ஒரு பகுதியாகச் சேர்த்து சதாசிவமாக இருக்கின்றான். (சதாசிவம் அசையும் சக்தியாகவும் அசையா சக்தியாகவும் இரு பகுதியாக உள்ளான்) அவனே வானத்தில் இருக்கும் அனைத்து தெய்வங்களின் உருவங்களாகவும் மருவி அங்கு இருக்கின்றான். உலகங்கள் அனைத்திற்கும் தலைவனான அவனே அவ்வுலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களின் உடலுக்குள்ளும் ஒரு பாகமாக இருந்து கொண்டு உள்ளிருந்து அந்த உடலை இயக்கும் உயிர்சக்தியாகவும் இருக்கின்றான். இப்படி அனைத்திலும் ஒரு பாகமாக இருக்கும் சிவமே அனைத்தின் தன்மைகளிலும் கலந்து நின்று அனைத்துமாகவும் இருக்கின்றான்.

பாடல் #101

பாடல் #101: பாயிரம் – 8. குருமட வரலாறு

வந்த மடமேழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

விளக்கம்:

இறைவனை அடையும் உண்மையான வழிகளை உயிர்களுக்கு எடுத்துக்கூற இவ்வுலகத்திற்கு வந்த இறைவனை உணர்ந்து இறை நிலையை அடைந்த ஏழு நாதர்களில் முதலில் தோன்றியவனாகிய திருமூலன் எனும் யான் அந்த வழிகள் அனைத்தையும் ஒன்பது தந்திரங்களாகவும் அந்தத் தந்திரங்களைச் சார்ந்த மூவாயிரம் பாடல்களாகவும் இறைவன் வழங்கிய அழகிய ஆகமங்களின் பொருளை அழகான தமிழ்ச் சொற்களில் வழங்கியருளியதே இந்தத் திருமந்திர மாலை எனும் நூலாகும்.

பாடல் #102

பாடல் #102: பாயிரம் – 8. குருமட வரலாறு

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

விளக்கம்:

திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்) அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர் நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர் அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர் புலன்களை வென்ற பரமானந்தர் மற்றும் போக தேவர் (போகர்) இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச்செய்த திருமூலர் ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சுமநிலை பெற்றவர்கள்.

பாடல் #99

பாடல் #99: பாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.

விளக்கம்:

திருமூலனாகிய யான் வழங்கிய இந்த மூவாயிரம் தமிழ் மந்திரங்களும் யான் பெற்ற இன்பம் இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்ற அன்பினாலேயே எம் குருநாதன் இறைவனின் அருளால் வழங்கப் பெற்றது. இந்த மந்திரங்களைக் காலையில் எழுந்து அவற்றின் பொருளை ஓதி உணர்ந்து அதில் உள்ள கருத்துக்களை கடைபிடித்து வந்தால் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய சதாசிவமூர்த்தியைச் சென்று அடைந்து யான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெறலாம்.

பாடல் #100

பாடல் #100: பாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.

விளக்கம்:

உயிர்கள் அனைத்தும் இறைவனை உணர்ந்து வீடு பேறு அடைய வேண்டும் என்கின்ற அன்பினால் யாம் உயிர்களுக்கு வைத்த பேரின்ப பரிசு திருமந்திரம் என்னும் பேரின்ப நன்மை தரும் நூலாகும். இந்த நூலிலுள்ள மூவாயிரம் பாடல்களில் யாம் வழங்கியிருப்பது இறைவனை அடைந்து முக்தி பெறும் வழிகளும் அதன் முடிவில் இறைவனோடு என்றும் கலந்து இருக்கும் பேரின்பத்தின் விளக்கங்களும் ஆகும். இறைவனின் அருளால் அறிவுப்பூர்வமாக இயற்றப்பெற்ற இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானவையாகும். இந்த மூவாயிரம் பாடல்களையும் தமது சிந்தையில் வைத்து, அவற்றின் பொருளுணர்ந்து போற்றி வருபவர்களுக்கு அனைத்துவிதமான சிறப்புகளையும் கொடுக்கும் இந்த திருமந்திரப் பாடல்கள்.

பாடல் #95

பாடல் #95: பாயிரம் – 6. அவையடக்கம்

ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

விளக்கம்:

எவராலும் அறிய முடியாத அளவிற்கு பெருமைகளை உடையவனும் எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவனும் எவராலும் அறிந்து கொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்கு பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும் தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனுமான எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

பாடல் #96

பாடல் #96: பாயிரம் – 6. அவையடக்கம்

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேட கில்லேனே.

விளக்கம்:

இறைவனைத் துதித்து பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை உண்மையான அன்போடு நாடிச் சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். அப்படிப்பட்ட எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் பேரருளே.