பாடல் #500

பாடல் #500: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

ஆணவத் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி அடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத்துவ மாமே.

விளக்கம்:

ஆணவம் முதலான 5 மலங்களும் இருப்பதினால் கண்ணால் பார்த்தும் அறியாமையால் அதில் உள்ள உண்மை தெரிந்து கொள்ளாதவர்கள் ஒளி ஒலி முதலான அனைத்து இறை தத்துவங்களையும் உணர முடியாது. ஆணவம் முதலான 5 மலங்களும் கடந்தவர்கள் உயர்வான இடத்தில் இருக்கும் சிவசக்தி தத்துவத்தை உணரலாம்

உட்கருத்து:

ஆணவம் என்கிற மலத்தை விட்டு நீங்காத வரை இறைவனை முழுவதுமாக உணர முடியாது. ஐந்து மலங்களையும் இறையருளால் வென்றவர்கள் மட்டுமே ஆதிப்பரம்பொருளாக இருக்கும் சிவம் (அசையா சக்தி) சக்தி (அசையும் சக்தி) எனும் இரண்டு தத்துவங்களையும் உணர முடியும்.

பாடல் #451

பாடல் #451: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.

விளக்கம்:

உயிர்கள் உலகத்தில் பிறவி எடுக்கும் முன்பு அவற்றின் முன் ஜென்மத்தில் அவற்றை விட்டும் பிரிந்து இருந்த இருபத்தைந்து தத்துவங்களை ஒன்றாகச் சேர்த்து ஆதியாக இருக்கும் எமது ஆருயிரான இறைவன் உயிரை உருவாக்குகின்றான். உடலுடன் கூடிய உயிர் இந்த உலகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து அந்தக் கரு உருவாகும் போதே அதற்கு ஏற்றவாறு அந்தக் கர்ப்பப் பையின் உள்ளிருந்தே உடலுடன் கூடிய உயிரை உருவாக்கி அருளுகின்றான் இறைவன்.

இருபத்தைந்து தத்துவங்கள்:

5 பூதங்கள்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். 5 புலன்கள்: கண்களால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், மூக்கால் நுகருதல், தோலால் தொடுதல். 5 ஞானேந்திரியங்கள்: ஓசை – கேட்பது, ஊறு – உணர்தல், ஒளி – பார்ப்பது, சுவை – உண்பது, நாற்றம் – முகர்வது. 5 கன்மேந்திரியங்கள்: வாய் – பேச்சு, கைகள் – செயல், கால்கள் – போக்குவரவு, எருவாய் – கழிவு நீக்கம் பகுதி, கருவாய் – இன்பமும் பிறப்பும். 4 அந்தக்கரணங்கள்: மனம் – எண்ணங்கள், புத்தி – அறிவு, சித்தம் – சிந்தனை, அகங்காரம் – நான் எனும் நினைப்பு. 1 புருடன்: ஆன்மா.

பாடல் #452

பாடல் #452: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துறை நாடப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

விளக்கம்:

தியானத்தின் மூலம் உயிர்கள் அறியக்கூடிய ஆறு ஆதார சக்கரங்களில் முதலாவதான மூலாதரத்திற்கு மேல் இருக்கின்ற சுவாதிட்டான சக்கரத்தின் அருகில் மூச்சுக்காற்றின் வெப்பமும் பித்த நீரும் கலந்து இருக்கின்ற கர்ப்பப் பைக்குள் செக்கச் சிவந்த சிறு கால்களோடு தலையையும் சேர்த்து உடலை வைத்திருக்கின்ற கருவை உடலில் இருக்கின்ற வெப்பமும் நீரும் சிதைத்துவிடாத படி பொறுமையோடு உயிருக்கு உயிராய் உடன் இருந்து பாதுகாக்கும் இறைவன் அந்தக் கரு வெளியே போக வழி தேடும் போது அது இன்னமும் வளர்ச்சி பெற்று முழுமையடைந்த பிறகே வெளியே போக வேண்டும் என்று அதற்கான தேவையாக பத்து மாதங்களை காலக் கெடுவாக வைத்து அந்தக் காலக் கெடு முடியும் வரை கருவையும் காத்து அதைத் தாங்கிக் கொண்டு இருக்கின்ற தாய்க்கும் அதன் பாரம் பாதிக்காத படி பாதுகாத்து அருளுகின்றான் இறைவன்.

பாடல் #453

பாடல் #453: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.

விளக்கம்:

ஆணும் பெண்ணும் சிற்றின்பத்தில் மகிழ்ந்து கூடுகின்ற போதே அவர்களின் முன் ஜென்ம வினைகளாலும் புதிதாக பிறக்கும் உயிரின் முன் ஜென்ம வினைகளாலும் இவர்களுக்கு இந்த உயிர் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அந்த உயிரினால் பெற்றவர்களும் பெற்றவர்களால் அந்த உயிரும் அடையும் துன்பத்திற்கு காரணமாக இருக்கும் பாசம் எனும் துயரமாகிய பந்தத்தால் கட்டி வைத்து அந்த உயிர் உலகத்தில் எத்தனைக் காலம் வாழ வேண்டும் என்பதையும் அந்த உயிரின் பண்புகளையும் அந்த உயிரின் வாழ்க்கை முறையையும் முன்பே முடிவு செய்து ஆணும் பெண்ணும் அன்பாக சேர்ந்த போதே அதற்கு ஏற்றவாறு கருவை அமைத்து முடிக்கின்றான் இறைவன்.

பாடல் #454

பாடல் #454: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாய் ஓடி விழுந்ததே.

விளக்கம்:

இருபத்தைந்து தத்துவங்களும் (பாடல் #451 இல் காண்க) ஒன்றாகச் சேர்ந்து ஆணும் பெண்ணும் சேரும் பொழுது உருவாகும் கருமுட்டை கருவாக மாறி அதுவே ஆண் பெண் என்கிற இரண்டுவித உருவங்களாகவும் மாறுகின்ற உண்மையை பிறவி இல்லாத நிலையை அடைந்த ஞானிகள் கண்டு உணர்ந்திருக்கின்றார்களே தவிர மற்றவர்கள் அறியவில்லை.

பாடல் #455

பாடல் #455: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதலைந்தும் ஈரைந்தோ டேறிப்
பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

விளக்கம்:

ஆணும் பெண்ணும் சேர்ந்த போது இருபத்தைந்து தத்துவங்களில் (பாடல் #451 இல் காண்க) ஐந்து புலன்களைத் தவிர்த்து ஆணிடமிருந்து ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து கன்மேந்திரியங்களும் சேர்ந்து பெண்ணின் கருப்பைக்குள் பனிக்குட நீரில் உருவான கருமுட்டைக்குள் ஐந்து பூதங்களும் நான்கு அந்தக் கரணங்களும் சேர்த்து கருவாகி அதன்பின் உருவம் பெறும் போது ஐந்து புலன்களும் சேர்ந்து விட மீதி இருக்கும் புருடன் மட்டும் அந்தக் கருவுடம்பின் நெற்றி உச்சியின் உள்ளே சென்று ஒளிந்து கொண்டது.

உட்கருத்து: கரு உற்பத்தியில் இருபத்தைந்து தத்துவங்களும் அடங்கியிருக்கும் முறையில் முதலில் ஆணிடமிருந்து ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் சேர்ந்து பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செல்லும் போது ஐந்து பூதங்களும் அந்தக் கரணங்களும் சேர்ந்து கருவிலிருந்து குழந்தையாகும் போது ஐந்து புலன்களும் சேர்ந்து அந்தக் குழந்தை பிறக்கும் போது ஆன்மா புருவ மத்தியில் சென்று மாயையால் தன்னை மறைத்துக் கொள்கின்றது. மற்ற இருபத்து நான்கு தத்துவங்களையும் உயிர்கள் அறியவும் உணரவும் முடியும். கருவில் ஐந்து புலன்கள் கிடையாது உடல் முழுமையடைந்து பிறந்த பின்பே ஐந்து புலன்களும் தன் வேலைகளை செய்யும்.

பாடல் #456

பாடல் #456: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்
கூவியே அவிழுங் குறிக்கொண்ட போதே.

விளக்கம்:

பூக்களின் மகரந்தத்தில் கலந்த காற்று உலகத்தில் பூவின் நறுமணத்தை பரப்பி காற்றிலேயே தங்க வைத்து அந்தக் காற்றை மற்ற உயிர்கள் சுவாசிக்கும் போது பூவின் நறுமணத்தை நுகரச் செய்வது போல தாயின் கருப்பைக்குள் இருக்கும் கருவிற்குள் புகுந்து இருக்கும் உயிரில் கலந்து இருக்கும் தனஞ்சயன் என்கிற காற்று அது குறிப்பிட்ட காலத்தில் குழந்தையாகப் பிறந்து முதன் முதலில் கூவி அழும் போது வெளிவந்து குழந்தையை முதன்முதலில் சுவாசிக்கச் செய்கிறது.

அறிவியல் விளக்கம்:

கருப்பைக்குள் இருக்கும் சிசு சுவாசிப்பது இல்லை. அதற்கு நுரையீரல்கள் உருவானாலும் அந்த நுரையீரல்களுக்குள் அமிலம் கலந்த நீரே நிரம்பியிருக்கும். கரு வளர்வதற்குத் தேவையான காற்றுக்களையும் சத்துக்களையும் தாயின் தொப்புள் கொடியின் மூலம்தான் எடுத்துக் கொள்கிறது. தொப்புள் கொடியில் இரண்டு நரம்புகள் இருக்கின்றது. அதில் முதலாவது நரம்பின் வழியே வரும் இரத்தத்தில் தாயின் மூச்சுக் காற்றும் தாய் சாப்பிட்ட உணவிலிருந்த சத்துக்களும் குழந்தைக்கு கிடைக்கின்றன. குழந்தை வெளிவிடும் நச்சுக் காற்றும் மற்ற கழிவுகளும் அமில நீரோடு சேர்ந்து இரண்டாவது நரம்பின் வழியே தாயிடம் வந்து தாயின் உடல் கழிவுகளோடும் மூச்சோடும் கலந்து வெளியேறுகின்றது. ஆகவே குழந்தையின் உடலில் காற்று இருந்தாலும் அது பிறந்த பிறகு வாய்விட்டு கூவி அழும்போதுதான் மூச்சுக்காற்றை முதன் முதலில் சுவாசிக்கின்றது. இதற்குக் காரணமாக இருப்பது தனஞ்சயன் எனும் காற்றாகும்.

பாடல் #457

பாடல் #457: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விரட்டானெனிற் பன்றியு மாமே.

விளக்கம்:

கரு உருவாகும் போது அதனுடன் போகின்ற எட்டுவிதமான சூட்சும உருவங்களும் பத்துவிதமான வாயுக்களும் எட்டுவிதமான குணங்களும் இவற்றில் மூழ்கி இருக்கின்ற ஆன்மாவும் அது உயிராக உடலெடுக்கும் போது உருவாகும் ஒன்பது வாயில்களும் உடலின் மூலாதாரத்தில் இருக்கும் நாகமாகிய குண்டலினியும் பன்னிரண்டு அங்குலம் (கழுத்துக்குக் கீழே எட்டு அங்குலம் மனிதர்களுக்கும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம் யோகிகளுக்கும்) ஓடிக் கொண்டிருக்கும் மூச்சுக் காற்றும் இவை அனைத்தையும் அடக்கி ஆளும் இறைவன் தனது அருளால் பாதுகாத்து வழி நடத்தாமல் இருந்தால் கருவில் பிறக்கும் குழந்தை இழி பிறப்பாக போய் விடும்.

சூட்சும உருவங்கள் 8 – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், புத்தி, மனம், அகங்காரம்.
வாயுங்கள் 10 – பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்.
குணங்கள் 8 – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், துன்பம், அகங்காரம்.
உடலின் வாயில்கள் 9 – 2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத் துவாரங்கள், வாய், நீர்வாய், ஆசனவாய்.

உட்கருத்து: கருவைப் பாதுகாத்து அதற்கு வேண்டிய அனைத்தையும் செயல்படுத்துபவன் இறைவன். அப்படி அவன் செயல்படுத்தாமல் விட்டுவிட்டால் பிறக்கும் குழந்தை எதற்கும் உபயோகமில்லாத சதைப் பிண்டமாகப் பிறக்கும்.

பாடல் #458

பாடல் #458: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.

விளக்கம்:

ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தை எதிர்த்துச் சென்றால் பிறக்கும் குழந்தை உருத்திரனை ஒத்த தாமச குணம் உடையதாக இருக்கும். பெண்ணின் சுரோணிதத்தை ஆணின் சுக்கிலம் எதிர்த்து சென்றால் பிறக்கும் குழந்தை திருமாலை ஒத்த சத்துவ குணம் உடையதாக இருக்கும். ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சமமாக எதிர்த்து இணைந்தால் பிறக்கும் குழந்தை பிரம்மனை ஒத்த இராசத குணம் உடையதாக இருக்கும். ஆணும் பெண்ணும் சமமான இன்பத்தில் இணைந்திருந்தால் பிறக்கும் குழந்தை மாபெரும் அரசன் போல ஆளும் தன்மையைக் கொண்டு இருக்கும்.

குணங்களின் விளக்கம்:

தாமச குணம் (தாமசம்) – காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வது, பகட்டுக்காக செயல்கள் செய்வது.

சத்துவ குணம் (சாத்விகம்) – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை.

இராசத குணம் (இராட்சதம்) – ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.

பாடல் #459

பாடல் #459: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

விளக்கம்:

எத்தனையோ பிறவிகளை எடுத்து முடிந்த பின் எடுத்த இந்த பிறவியில் வினைப் பயனால் ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் கலந்து அவர்களது உருவங்களிலிருந்தும் அவர்களின் முன்னோர்களது உருவங்களிலிருந்தும் பலவிதமான அம்சங்களை எடுத்துக் கொண்டு அந்த அம்சங்களின் சாயலிலேயே உருவம் கொண்டு கரு உருவாகின்றது. ஆணும் பெண்ணும் இன்பத்தில் கலந்து பின் பெண்ணிடம் உருவான அந்தக்கரு புதிதாக உருவானதாக அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்டாலும் அந்தக் கரு உருவாகுவதற்கு முன்பே இந்த ஆணுக்கும் இந்த பெண்ணுக்கும் தான் இந்தக் கரு உருவாக வேண்டும் என்பது வினைப் பயனால் முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பதை உணராத ஆணும் பெண்ணும் மாயையில் ஒருவரோடு ஒருவர் கலந்து கரு உருவாகக் காரணமாகி அந்தக் கருவுக்கும் தங்களது மாயையோடு சேர்த்து தங்களது பலவித குணங்களையும் கொடுத்து விடுகின்றார்கள்.