பாடல் #569

பாடல் #569: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.

விளக்கம்:

பாடல் #568 இல் உள்ள பிராணாயம முறைப்படி மூச்சுக்காற்றை வயிற்றில் அடக்கி வைத்திருந்தால் உடம்புக்கு அதன் வயதுக்கு ஏற்ப ஏற்படும் முதுமை வெளியே தெரிந்தாலும் உள்ளே முதுமைத் தன்மை சிறிதும் இல்லாமல் இளமையாக பளிங்கு போன்ற வலிமைப் பெற்று இருக்கும். அந்த உணர்வு தெளிவை பெற்று ஞான குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட இலேசாகி மிதக்கும் நிலையை உடல் பெற்றுவிடும்.

பாடல் #570

பாடல் #570: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கவும் தலைவனு மாமே.

விளக்கம்:

எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திலேயே பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சுக்காற்றை இழுத்து பூரகத்தை செய்தால் உடலுக்கு அழிவு இல்லை. அப்படி இழுத்த மூச்சுக்காற்றை கும்பக முறைப்படி அடக்கி வைத்து இரேசக முறைப்படி அளவாக வெளியே விட்டால் உள்ளுக்குள் ஓங்காரமாகிய ஓம் எனும் ஒலி கேட்டு மேன்மையை அடையலாம்.

பாடல் #571

பாடல் #571: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியுமது வாமே.

விளக்கம்:

பிராணாயம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) பூரக முறையில் மூச்சுக்காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்து இரேசக முறையில் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விட்டு கும்பக முறையில் வயிற்றில் அடக்கி வைத்திருக்கும் அளவுகளைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு மூன்று முறைகளின்படி மூச்சுக்காற்றை இழுத்து அடக்கி வெளியே விடும் அளவுகளைத் தெரிந்தவர்களுக்கு எமனையே காலால் எட்டி உதைக்கும் ஆற்றல் உண்டாகும்.

பாடல் #572

பாடல் #572: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தானுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டானின் அருள்பெற லாமே.

விளக்கம்:

  1. தலை, கண், காதுகள், கழுத்து வரை உள்ளவை மேல் பகுதியாகும். 2. கழுத்திலிருந்து அடிவயிறு வரை, நெஞ்சு, தொப்புள் முதலானவை நடுப் பகுதியாகும். 3. அடிவயிறு முதல் கால் பெருவிரல் வரை உள்ளவை கீழ் பகுதியாகும். பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) மூச்சுக்காற்றை பூரக முறைப்படி உள்ளிழுத்து அந்தக் காற்றை கும்பக முறைப்படி உள்ளே அடக்கிவைத்து மேலே கூறிய மூன்று பகுதிகளுக்கும் அந்த மூச்சுக்காற்றைச் செலுத்தி அந்த மூன்று பகுதிகளுக்குள் வியாபிக்க (நிறைத்து) வைத்திருந்தால் நாம் செய்யும் தீய செயல்களால் வரும் கர்ம வினையாகிய நஞ்சை அழித்து நம்மைக் காப்பாற்றும். சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

பாடல் #573

பாடல் #573: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

விளக்கம்:

இடகலை (மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) வழியாக பூரக முறைப்படி ஒரு பங்கு (பதினாறு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து கும்பக முறைப்படி நான்கு பங்கு (அறுபத்து நான்கு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை அடக்கிவைத்து பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) வழியாக இரேசக முறைப்படி இரண்டு பங்கு (முப்பத்து இரண்டு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை மெதுவாக வெளியே விடுவதன் மூலம் பாதுகாப்பான பிராணாயாமத்தின் உண்மை கூறப்படுகின்றது. கும்பக முறை 64 வினாடிகள் வரை மட்டுமே பாதுகாப்பானது. அதற்கு மேல் செய்தால் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்து தலைச் சுற்றல் மயக்கம் போன்றவை ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் 64 வினாடி நேரத்திற்கு மேல் கும்பகம் செய்யக்கூடாது என்பதையே இப்பாடல் விளக்குகின்றது.

பிராணாயமத்தைக் கற்றுக்கொள்ளும் முறை:

மூச்சுப் பயிற்சி செய்யத் துவங்கும் ஆரம்ப கால கட்டங்களில் இந்த 16:64:32 என்ற காலக் கணக்கில் பயிற்சி செய்வது இயலாத காரியமாக இருக்கும். தொடர்ந்த பயிற்சிகளின் மூலமே இது கைகூடும். பயிற்சியைத் துவங்கும்போது 8:32:16 என்ற கால அளவில் துவங்கி படிப்படி யாக நேரத்தை அதிகரிக்கலாம். திருமூலர் கூறும் 16:64:32 என்ற கால அளவை எட்டிப் பிடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையில் ஆகலாம். ஒரு குருவின் மேற்பார்வையில் இந்த பயிற்சியைத் துவங்கினால் எளிதில் கைகூடும்.

பாடல் #574

பாடல் #574: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

விளக்கம்:

இறைவன் வழங்கிய இந்த உடல் சோர்வாக இல்லாத போது இரேசக முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிட்டு பத்து நாடிகளும் (1. இடகலை – (இடப்பக்க நரம்பு), 2. பிங்கலை – (வலப்பக்க நரம்பு), 3. சுமுழுனை – (நடுநரம்பு), 4. சிகுவை – (உள்நாக்கு நரம்பு), 5. புருடன் – (வலக்கண் நரம்பு), 6. காந்தாரி – (இடக்கண் நரம்பு), 7. அத்தி – ( வலச்செவி நரம்பு), 8. அலம்புடை – (இடச்செவி நரம்பு), 9. சங்கினி – (கருவாய் நரம்பு), 10. குகு – (மலவாய் நரம்பு)) நிரம்புமாறு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அந்த மூச்சை அடக்கி மலவாயையும் சுருக்கி அக்காற்றை கும்பக முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) வைத்து உடலை நேராக நிமிர்த்தி வைத்திருந்தால் இறப்பு என்றும் இல்லை.

பாடல் #575

பாடல் #575: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

புறப்பட்டுப் புக்குத் திரியும் வாயுவை
நெறிப்படவே உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

விளக்கம்:

வெளியில் சுற்றித் திரியும் பிராணவாயுவை பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) உள்ளே இழுத்து வைத்திருந்தால் அந்தக் காற்று உள்ளே சுத்தமாகி விடும். உடலுறுப்புக்கள் சிவப்பாகி முடிகள் கருப்பாகி அழகாக விளங்குவதோடு மட்டுமின்றி முறைப்படி பிராணாயாமத்தைச் செய்பவரின் உள்ளத்திலிருக்கும் கயிறு போல் முறுக்கிய சடையணிந்த சிவபெருமான் வெளியே செல்லாமல் இருப்பான்.

பாடல் #576

பாடல் #576: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிறில்கோல அஞ்செழுத் தாமே.

விளக்கம்:

முறைப்படி பிராணாயாமம் செய்பவர்களின் ஆரம்பகாலத்தில் உடலை இடமாகக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை (பாடல் #567 இல் உள்ளபடி) ஆகிய பிராண சக்திகள் பன்னிரண்டு அங்குல அளவிற்கு உள்ளுக்குள் வந்தும் வெளியே சென்றும் இருக்கும். பிற்காலத்தில் அந்த சக்திகள் இரண்டும் தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை இருக்கின்ற நான்கு அங்குல அளவிற்குச் செல்லாமல் கழுத்துக்குக் கீழே எட்டு அங்குல அளவிற்கு மட்டுமே சென்றுகொண்டு இருக்கும். தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை உள்ள இடத்துக்குச் செல்லாமல் இருக்கும் மூச்சுக்காற்றை அந்த இடத்திற்கும் செல்லுமாறு மொத்தம் பன்னிரண்டு அங்குல அளவிற்கும் பிராணாயாமம் செய்பவர்கள் பஞ்சாக்கர மந்திரத்தின் (நமசிவாய) வடிவாக மாறுவார்கள்.

பாடல் #577

பாடல் #577: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

பன்னிரண் டானைக்குப் பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.

விளக்கம்:

நமது உடலின் மூக்குத்துவாரத்திலிருந்து அடிவயிறு வரை பன்னிரண்டு அங்குல அளவிற்குச் சென்று வரும் மூச்சுக்காற்று உள்ளே வருவதும் வெளியே செல்லுவதுமாகிய இரண்டு செயல்களை மட்டுமே செய்து வருகின்றது. இச்செயல்களை ஆன்மா அறியவில்லை. மூக்கிலிருந்து வயிற்றை நோக்கிக் கீழ்ச் செல்லும் மூச்சுக்காற்றை மூக்கிலிருந்து தலை உச்சி நோக்கி மேலே செல்ல பிராணாயாமத்தின் மூலம் முயற்சித்தால் நமது உடலுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.

This image has an empty alt attribute; its file name is om-namah-shivaya-puja-room-lord-mahadev-shiva-shakti-Ea20b209395422468d137f86a1f393bf0-1.jpg

பாடல் #558

பாடல் #558: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகத் தின்மிகத்
தங்க இருப்பவர் தலைவனு மாமே.

விளக்கம்:

பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசனங்கள் முக்கியமானவை ஆகும். அந்த எட்டில் முதலானது சுவத்திகாசனம் ஆகும் (இதை சுகாசனம் என்றும் கூறுவர்). இதைத் தவறாமல் தினம் செய்து உணர்ந்து இருப்பவர் எட்டு ஆசனங்களின் தலைவராவார்.