பாடல் #1543

பாடல் #1543: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அரனெறி யப்பனை யாதிப் பிரானை
யுரநெறி யாகிவந் துள்ளம் புகுந்தான்
பரனெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகை தூரமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அரனெறி யபபனை யாதிப பிரானை
யுரநெறி யாகிவந துளளம புகுநதான
பரனெறி தெடிய பததரகள சிததம
பரனறி யாவிடிற பலவகை தூரமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரன் நெறி அப்பனை ஆதி பிரானை
உர நெறி ஆகி வந்து உள்ளம் புகுந்தான்
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியா விடில் பல் வகை தூரமே.

பதப்பொருள்:

அரன் (தங்களை காத்து அருளுகின்ற) நெறி (வழி முறையில்) அப்பனை (அப்பனாகவும்) ஆதி (ஆதிப் பரம்பொருளாகவும்) பிரானை (அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே)
உர (தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து முயற்சி செய்ய வைக்கின்ற) நெறி (வழி முறைகளாகவே) ஆகி (ஆகி) வந்து (வந்து) உள்ளம் (தங்களின் உள்ளத்திற்குள்) புகுந்தான் (புகுந்து வீற்றிருப்பான்)
பரன் (பரம் பொருளை அடைகின்ற) நெறி (வழி முறைகளை) தேடிய (தேடி அலைகின்ற) பத்தர்கள் (பக்தர்கள்) சித்தம் (தங்களின் எண்ணத்தினால்)
பரன் (அந்தப் பரம் பொருளை) அறியா (அறிந்து கொள்ளாமல்) விடில் (போய் விட்டால்) பல் (இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத) வகை (அளவிற்கு) தூரமே (தூரமாகவே இருப்பான்).

விளக்கம்:

தங்களை காத்து அருளுகின்ற வழி முறையில் அப்பனாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து முயற்சி செய்ய வைக்கின்ற வழி முறைகளாகவே ஆகி வந்து தங்களின் உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருப்பான். பரம் பொருளை அடைகின்ற வழி முறைகளை தேடி அலைகின்ற பக்தர்கள் தங்களின் எண்ணத்தினால் அந்தப் பரம் பொருளை அறிந்து கொள்ளாமல் போய் விட்டால் இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத அளவிற்கு தூரமாகவே இருப்பான்.

பாடல் #1544

பாடல் #1544: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

பரிசறி வானவர் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேரிற் றிகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ண
னரிதவன் வைத்த வரனெறி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பரிசறி வானவர பணபன பகலொன
பெரிசறி வானவர பெரிற றிகழுந
துரிசற நீநினை தூயமணி வணண
னரிதவன வைதத வரனெறி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பரிசு அறி வானவர் பண்பன் பகலோன்
பெரிசு அறி வானவர் பேரில் திகழும்
துரிசு அற நீ நினை தூய் மணி வண்ணன்
அரிது அவன் வைத்த அரன் நெறி தானே.

பதப்பொருள்:

பரிசு (கிடைப்பதற்கு மேலான பரிசு அவனே) அறி (என்று அறிந்து கொண்ட) வானவர் (தேவர்களுக்கு) பண்பன் (பெருங் கருணையோடு அருளுபவனும்) பகலோன் (பிரகாசமான சூரியனைப் போல் வெளிச்சத்தை கொடுத்து வழிகாட்டுபவனும்)
பெரிசு (அடையக் கூடிய அனைத்தையும் விட பெரியதானவன் அவனே) அறி (என்று அறிந்து கொண்ட) வானவர் (தேவர்கள்) பேரில் (அழைக்கின்ற பலவிதமான பெயர்களிலும்) திகழும் (அப்படியே திகழ்பவனும் ஆகிய இறைவனை)
துரிசு (ஒரு குற்றமும்) அற (இல்லாமல்) நீ (சாதகர்கள்) நினை (நினைத்து வழிபட்டால்) தூய் (தூய்மையான) மணி ( மாணிக்கத்தில் நுழைகின்ற வெளிச்சம் அப்படியே எதிரொலிப்பது போல) வண்ணன் (அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற தன்மையைக் கொடுத்து அருளுவது)
அரிது (கிடைப்பதற்கு மிகவும் அரியதானது) அவன் (அவன்) வைத்த (வகுத்து கொடுத்த) அரன் (சாதகர்களை காத்து அருளுகின்ற இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறைகளே) தானே (ஆகும்).

விளக்கம்:

கிடைப்பதற்கு மேலான பரிசு அவனே என்று அறிந்து கொண்ட தேவர்களுக்கு பெருங் கருணையோடு அருளுபவனும் பிரகாசமான சூரியனைப் போல் வெளிச்சத்தை கொடுத்து வழிகாட்டுபவனும் அடையக் கூடிய அனைத்தையும் விட பெரியதானவன் அவனே என்று அறிந்து கொண்ட தேவர்கள் அழைக்கின்ற பலவிதமான பெயர்களிலும் அப்படியே திகழ்பவனும் ஆகிய இறைவனை ஒரு குற்றமும் இல்லாமல் சாதகர்கள் நினைத்து வழிபட்டால் தூய்மையான மாணிக்கத்தில் நுழைகின்ற வெளிச்சம் அப்படியே எதிரொலிப்பது போல அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற தன்மையைக் கொடுத்து வழி காட்டி அருளுகின்றான். சாதகர்களை காத்து அருளுகின்ற இறைவனை அடைகின்ற வழி முறைகளே கிடைப்பதற்கு மிகவும் அரியதாக அவன் வகுத்து கொடுத்த அருளிய அந்த வழி முறைகள் ஆகும்.

பாடல் #1545

பாடல் #1545: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆன சமைய மதுவிது நன்றெனு
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமி
னூனங் கடந்த வுருவது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆன சமைய மதுவிது நனறெனு
மாய மனிதர மயகக மதுவொழி
கானங கடநத கடவுளை நாடுமி
னூனங கடநத வுருவது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆன சமையம் அது இது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடுமின்
ஊனம் கடந்த உரு அது ஆமே.

பதப்பொருள்:

ஆன (பலரால் சொல்லப்படுவதான) சமையம் (சமயங்களில்) அது (அதுவும்) இது (இதுவும்) நன்று (நல்லது என்று) எனும் (பல விதமான சமயங்களைப் பற்றி)
மாய (மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கின்ற) மனிதர் (மனிதர்கள்) மயக்கம் (தங்களை மயக்கி விட முயற்சி செய்வார்கள்) அது (அதில்) ஒழி (சென்று மயங்குவதை ஒழித்து விட்டு)
கானம் (நாதங்களை) கடந்த (கடந்து நிற்கின்ற) கடவுளை (இறைவனை) நாடுமின் (தேடுங்கள்)
ஊனம் (அவ்வாறு தேடினால் அழிவை) கடந்த (கடந்து நிற்கின்ற) உரு (என்றும் அழியாத உருவமாகிய) அது (இறைவனை) ஆமே (காணலாம்).

விளக்கம்:

பலரால் சொல்லப்படுவதான சமயங்களில் அதுவும் இதுவும் நல்லது என்று பல விதமான சமயங்களைப் பற்றி மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கின்ற மனிதர்கள் தங்களை மயக்கி விட முயற்சி செய்வார்கள். அதில் சென்று மயங்குவதை ஒழித்து விட்டு நாதங்களை கடந்து நிற்கின்ற இறைவனை தேடுங்கள். அவ்வாறு தேடினால் அழிவை கடந்து நிற்கின்ற என்றும் அழியாத உருவமாகிய இறைவனை காணலாம்.

பாடல் #1546

பாடல் #1546: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அன்னெறி நாடி யமரர் முனிவருஞ்
சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றபின்
முன்னெறி நாடி முதல்வ னருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அனனெறி நாடி யமரர முனிவருஞ
செனனெறி கணடார சிவனெனப பெறறபின
முனனெறி நாடி முதலவ னருளிலார
செனனெறி செலலார திகைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அந் நெறி நாடி அமரர் முனிவரும்
செல் நெறி கண்டார் சிவன் என பெற்ற பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

அந் (இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறையை) நாடி (தேடி) அமரர் (அமரர்களும்) முனிவரும் (முனிவர்களும்)
செல் (தாங்கள் செல்ல வேண்டிய) நெறி (வழி முறையை) கண்டார் (கண்டு கொண்டு அதிலேயே சிறிதும் மாறாமல் சென்று) சிவன் (சிவம்) என (என்கின்ற பரம் பொருளை) பெற்ற (பெற்று அடைந்தார்கள்) பின் (ஆனால் அவர்கள் சென்ற வழி முறையை அறியாத மற்றவர்களோ தமக்கு பின்னாலும்)
முன் (முன்னாலும் இருக்கின்ற) நெறி (வழி முறைகள் என்று பலவாறாக) நாடி (தேடி அலைந்து எந்த வழியையும் நிலையாக கடை பிடிக்காததால்) முதல்வன் (அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனின்) அருள் (திருவருளை) இலார் (இல்லாதவர்களாக அவர்கள் ஆகி விடுகிறார்கள்)
செல் (அமரர்களும் முனிவர்களும் சென்று அடைந்த) நெறி (வழி முறையில்) செல்லார் (செல்லாமல்) திகைக்கின்ற (எந்த வழியில் சென்று அடைவது என்று அறியாத மாயையில் திகைத்துக் கொண்டே) ஆறே (அலைகின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழி முறையை தேடி அமரர்களும் முனிவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய வழி முறையை கண்டு கொண்டு அதிலேயே சிறிதும் மாறாமல் சென்று சிவம் என்கின்ற பரம் பொருளை பெற்று அடைந்தார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழி முறையை அறியாத மற்றவர்களோ தமக்கு பின்னாலும் முன்னாலும் இருக்கின்ற வழி முறைகள் என்று பலவாறாக தேடி அலைந்து எந்த வழியையும் நிலையாக கடை பிடிக்காததால் அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனின் திருவருளை இல்லாதவர்களாக அவர்கள் ஆகி விடுகிறார்கள். அமரர்களும் முனிவர்களும் சென்று அடைந்த வழி முறையில் செல்லாமல் எந்த வழியில் சென்று அடைவது என்று அறியாத மாயையில் திகைத்துக் கொண்டே அலைகின்றார்கள்.

பாடல் #1547

பாடல் #1547: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உறுமா றறிவது முண்ணின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்று மில்லை
யறுமா றதுவான தங்கியு ளாங்கே
யிறுமா றறிகில ரேழைக டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறுமா றறிவது முணணினற சொதி
பெறுமா றறியிற பிணககொனறு மிலலை
யறுமா றதுவான தஙகியு ளாஙகெ
யிறுமா றறிகில ரேழைக டாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆனது அங்கி உள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.

பதப்பொருள்:

உறும் (இறைவனை அடைகின்ற) ஆறு (வழி முறையை) அறிவதும் (அறிந்து கொள்வதும் அதன் மூலம்) உள் (தமக்கு உள்ளே) நின்ற (நிற்கின்ற) சோதி (ஜோதியாகிய இறைவனை)
பெறும் (பெறுகின்ற) ஆறு (வழி முறையை) அறியில் (அறிந்து கொண்டால்) பிணக்கு (குழப்பமானது) ஒன்றும் (என்று ஒன்றும்) இல்லை (இல்லாமல் போய்விடும்)
அறும் (அப்போது இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் அறுக்கின்ற) ஆறு (வழியாக) அது (அதுவே) ஆனது (ஆகிவிடும்) அங்கி (நன்மை செய்கின்ற ஜோதியாக) உள் (உள்ளே) ஆங்கே (இருக்கின்ற இறைவனை அடைந்து)
இறும் (தான் எனும் அகங்காரத்தை நீக்குகின்ற) ஆறு (வழி முறையை) அறிகிலர் (அறியாதவர்கள்) ஏழைகள் (மாயையில் சிக்கிக் கொண்டு இறைவனின் அருளைப் பெறாத ஏழைகளாகவே) தாமே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழி முறையை அறிந்து கொள்வதும் அதன் மூலம் தமக்கு உள்ளே நிற்கின்ற ஜோதியாகிய இறைவனை பெறுகின்ற வழி முறையை அறிந்து கொண்டால் குழப்பமானது என்று ஒன்றும் இல்லாமல் போய்விடும். அப்போது இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் அறுக்கின்ற வழியாக அதுவே ஆகிவிடும். இதை கடை பிடித்து நன்மை செய்கின்ற ஜோதியாக உள்ளே இருக்கின்ற இறைவனை அடைந்து தான் எனும் அகங்காரத்தை நீக்குகின்ற வழி முறையை அறியாதவர்கள் மாயையில் சிக்கிக் கொண்டு இறைவனின் அருளைப் பெறாத ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.

பாடல் #1548

பாடல் #1548: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழிநடக குமபரி சொனறுணடு வையங
கழிநடக குணடவர கறபனை கெடபர
சுழிநடக குநது யரமது நீககிப
பழிநடப பாரககுப பரவலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடைகின்ற வழியில்) நடக்கும் (நடக்கும் போது) பரிசு (கிடைக்கின்ற பலன்) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது) வையம் (இந்த உலகத்தில்)
கழி (தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில்) நடக்கு (செல்பவர்கள்) உண்டவர் (மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பி கூறுகின்ற) கற்பனை (கற்பனையான விஷயங்களை) கேட்பர் (நம்பி கேட்கிறார்கள்)
சுழி (இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே) நடக்கும் (மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பி செல்லுவதால்) துயரம் (பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர்) அது (இதற்கு காரணமாக இருக்கின்ற வினைகளை) நீக்கி (நீக்குவதற்கு)
பழி (உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியை சுமத்தினாலும் அதனால் கவலை படாமல்) நடப்பார்க்கு (இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு) பரவலும் (இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும் அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும்) ஆமே (கிடைக்கும்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழியில் நடக்கும் போது கிடைக்கின்ற பலன் ஒன்று இருக்கின்றது. இந்த உலகத்தில் தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில் செல்பவர்கள் மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பி கூறுகின்ற கற்பனையான விஷயங்களை நம்பி கேட்கிறார்கள். இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பி செல்லுவதால் பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதற்கு காரணமாக இருக்கின்ற வினைகளை நீக்குவதற்கு உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியை சுமத்தினாலும் அதனால் கவலை படாமல் இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும் அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும் கிடைக்கும்.

பாடல் #1549

பாடல் #1549: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழிசென்று மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழிசெனறு மாதவம வைகினற பொது
பழிசெலலும வலவினைப பறறறுத தாஙகெ
வழிசெலலும வலவினை யாரதிறம விடடிட
டுழிசெலலி லுமபர தலைவனமுன னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி சென்று மா தவம் வைகின்ற போது
பழி செல்லும் வல் வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல் வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல்) சென்று (சென்று புரிகின்ற) மா (மாபெரும்) தவம் (தவமானது) வைகின்ற (அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற) போது (போது)
பழி (ஞானிகள் பழிக்கின்ற) செல்லும் (உலக வழிகளில் செல்லும் போது) வல் (வலிமையான) வினை (வினைகளினால்) பற்று (கட்டி இருக்கின்ற பற்றை) அறுத்து (அறுத்து விட்டு) ஆங்கே (தாம் இருக்கின்ற இடத்திலேயே)
வழி (இறைவனை நோக்கிய வழியில்) செல்லும் (செல்லுகின்றவர்) வல் (வலிமையான) வினையார் (வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின்) திறம் (உறுதியான பந்த பாசங்களை) விட்டிட்டு (விட்டு விட்டு)
உழி (இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி) செல்லில் (அவனை அடைகின்ற வழியில் சென்றால்) உம்பர் (தேவர்களுக்கு எல்லாம்) தலைவன் (தலைவனாகிய இறைவனின்) முன் (முன்பு) ஆமே (சென்று நிற்பார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல் சென்று புரிகின்ற மாபெரும் தவமானது அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற போது, ஞானிகள் பழிக்கின்ற உலக வழிகளில் செல்லும் போது வலிமையான வினைகளினால் கட்டி இருக்கின்ற பற்றை அறுத்து விட்டு, தாம் இருக்கின்ற இடத்திலேயே இறைவனை நோக்கிய வழியில் செல்லுகின்றவர்கள், வலிமையான வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின் உறுதியான பந்த பாசங்களை விட்டு விட்டு, இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி அவனை அடைகின்ற வழியில் சென்றால், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவனின் முன்பு சென்று நிற்பார்கள்.

பாடல் #1527

பாடல் #1527: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இருவினை நேரொப்பி லின்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருவினை நெரொபபி லினனருட சததி
குருவென வநது குணமபல நீககித
தருமெனு ஞானததாற றனசெய லறறால
திரிமலந தீர்நது சிவனவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரு வினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.

பதப்பொருள்:

இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) நேர் (சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள்) ஒப்பு (தனக்கு ஒப்பானது என்று) இல் (ஒன்றும் இல்லாதவளாகிய) இன் (இனிமையான) அருள் (பேரருளைக் கொண்ட) சத்தி (இறைவியானவள்)
குரு (குரு) என (எனும் நிலையில்) வந்து (வந்து) குணம் (சாதகருக்குள் நன்மை தீமை ஆகிய தன்மைகள்) பல (பல விதமாக இருப்பவை அனைத்தையும்) நீக்கி (நீக்கி விட்டு)
தரும் (அவளது பெரும் கருணையினால் தரப்படுவது) எனும் (என்று அறியப்படுகின்ற) ஞானத்தால் (பேரறிவு ஞானத்தால்) தன் (சாதகர் தன்னுடைய) செயல் (செயல் என்று ஒன்றும்) அற்றால் (இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால்)
திரி (சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான) மலம் (மலங்களும்) தீர்ந்து (நீங்கப் பெற்று) சிவன் (சிவம் எனும் பரம் பொருளாகவே) அவன் (சாதகரும்) ஆமே (ஆகி விடுவார்).

விளக்கம்:

நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள் தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள் குரு எனும் நிலையில் வந்து சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற அனைத்து தன்மைகளையும் நீக்கி விட்டு, அவளது பெரும் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தை தந்து அருளுவாள். அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால் சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று சிவம் எனும் பரம் பொருளாகவே சாதகரும் ஆகி விடுவார்.

பாடல் #1528

பாடல் #1528: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இரவும் பகலு மிறந்த விடத்தே
குரவன் செய்கின்ற குழலியை யுன்ன
யரவஞ் செய்யாம லவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இரவும பகலு மிறநத விடததெ
குரவன செயகினற குழலியை யுனன
யரவஞ செயயாம லவளுடன செரப
பரிவொனறி லாளும பராபரை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவன் செய்கின்ற குழலியை உன்ன
அரவம் செய்யாமல் அவளுடன் சேர
பரிவு ஒன்றில் ஆளும் பரா பரை தானே.

பதப்பொருள்:

இரவும் (இரவு) பகலும் (பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும்) இறந்த (உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற) இடத்தே (சாதகரின் உள்ளத்தில்)
குரவன் (குரவம் எனும் மலரை) செய்கின்ற (பின்னியிருக்கின்ற) குழலியை (கூந்தலைக் கொண்ட இறைவியை) உன்ன (அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே)
அரவம் (எந்த விதமான ஆரவாரமும்) செய்யாமல் (செய்யாமல்) அவளுடன் (அவளோடு) சேர (சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால்)
பரிவு (தனது மாபெரும் கருணை எனும்) ஒன்றில் (அருளினால்) ஆளும் (சாதகரை ஆட்கொண்டு அருளுவாள்) பரா (பராவாகிய இறைவனும்) பரை (பரையாகிய இறைவியும்) தானே (சேர்ந்து இருக்கும் அருள் சக்தி).

விளக்கம்:

இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற சாதகரின் உள்ளத்தில் குரவம் எனும் மலரை பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால் தனது மாபெரும் கருணை எனும் அருளினால் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள் பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் அருள் சக்தி.

பாடல் #1529

பாடல் #1529: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்
சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்
தூனை விளக்கி யுடனிருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாலை விளககு மதியமு ஞாயிறுஞ
சால விளககுந தனிசசுட ரணணலும
ஞாலம விளககிய நாதனென னுளபுகுந
தூனை விளககி யுடனிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனி சுடர் அண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே.

பதப்பொருள்:

மாலை (அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற) விளக்கும் (விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும்) மதியமும் (இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும்) ஞாயிறும் (பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும்)
சால (இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற) விளக்கும் (தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும்) தனி (தனிப் பெரும்) சுடர் (சுடராக இருக்கின்ற) அண்ணலும் (இறைவனின் ஜோதி உருவமாகவே பார்த்து உணர்ந்தால்)
ஞாலம் (உலகத்தை) விளக்கிய (விளக்கி அருளுகின்ற) நாதன் (தலைவனாகிய இறைவன்) என் (எமது) உள் (உடலுக்குள்) புகுந்து (புகுந்து வந்து)
ஊனை (எமது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும்) விளக்கி (விளக்கி யாம் அறியும் படி செய்து) உடன் (எம்முடன் எப்போதும்) இருந்தானே (இருப்பான்).

விளக்கம்:

அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும், இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால், உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து, அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும் விளக்கி அவர் அறியும் படி செய்து அவருடன் எப்போதும் இருப்பான்.