பாடல் #1752: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
இலிங்க நற்பீட மிசையு மோங்கார
மிலிங்கம் நற்கண்டம் நிறையு மகார
மிலிங்கத்து வட்ட முறையு முகார
மிலிங்க வுகாரம் நிறைவிந்து நாதமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இலிஙக நறபீட மிசையு மொஙகார
மிலிஙகம நறகணடம நிறையு மகார
மிலிஙகதது வடட முறையு முகார
மிலிஙக வுகாரம நிறைவிநது நாதமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்கம் நல் கண்டம் நிறையும் அகாரம்
இலிங்கத்து வட்டம் உறையும் உகாரம்
இலிங்க உகாரம் நிறை விந்து நாதமே.
பதப்பொருள்:
இலிங்க (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) பீடம் (பீடப் பகுதியானது) இசையும் (அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற) ஓங்காரம் (ஓங்காரத்தின் தத்துவமாகும்)
இலிங்கம் (இலிங்க வடிவத்தில்) நல் (நன்மை தருகின்ற) கண்டம் (நடுவில் இருக்கின்ற பாணமானது) நிறையும் (அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) அகாரம் (‘அ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்கத்து (இலிங்க வடிவத்தில் இருக்கின்ற) வட்டம் (வட்டமானது) உறையும் (அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின்) உகாரம் (‘உ’கார எழுத்தின் தத்துவமாகும்)
இலிங்க (இலிங்க வடிவத்தில்) உகாரம் (‘உ’கார எழுத்தாக) நிறை (நிறைந்து இருப்பதுவே) விந்து (வெளிச்சமும்) நாதமே (சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்).
விளக்கம்:
அரூபமாக இருக்கின்ற சதாசிவ மூர்த்தியின் இலிங்க வடிவத்தில் நன்மை தருகின்ற பீடப் பகுதியானது அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஓங்காரத்தின் தத்துவமாகும். அதில் நடுவில் இருக்கின்ற பாணமானது அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘அ’கார எழுத்தின் தத்துவமாகும். அதில் இருக்கின்ற வட்டமானது அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘உ’கார எழுத்தின் தத்துவமாகும். இலிங்க வடிவத்தில் ‘உ’கார எழுத்தாக நிறைந்து இருப்பதுவே வெளிச்சமும் சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும்.
கருத்து:
நன்மையே வடிவான இலிங்க வடிவத்தில் மேல் பாகம், நடுப் பாகம், கீழ் பாகம் என்று மூன்று பாகங்களாக பிரிந்து இருப்பது நாத வடிவாகிய நடராஜ தத்துவமாகும். அதில் மேல் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘அ’காரத்தையும், நடுப் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘உ’காரத்தையும், கீழ் பாகம் ஓங்காரத்தில் உள்ள ‘ம’காரத்தையும் குறிக்கின்றது. ஓங்காரத்தின் எழுத்து வடிவமே விந்து தத்துவமாகும். ஓங்காரத்தின் ஒலி வடிவமே நாத தத்துவமாகும்.