பாடல் #1630: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)
அமைச்சரு மானைக் குழாமு மரசும்
பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவே
யமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கி
யிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அமைசசரு மானைக குழாமு மரசும
பகைததெழு பூசலுட படடன னடுவெ
யமைதததொர ஞானமு மாககமு நொககி
யிமைததழி யாதிருப பாரவர தாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அமைச்சரும் ஆனை குழாமும் அரசும்
பகைத்து எழு பூசல் உள் பட்டு அந் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆக்கமும் நோக்கி
இமைத்து அழியாது இருப்பார் அவர் தாமே.
பதப்பொருள்:
அமைச்சரும் (நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக் கொண்டு) ஆனை (வலிமை மிக்க யானைப்) குழாமும் (படைகளுடன்) அரசும் (உயர்ந்த பேரரசர்களாக)
பகைத்து (இருந்தாலும் ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மேல் கொண்ட விரோதத்தால்) எழு (எழுகின்ற) பூசல் (போருக்கு) உள் (உள்ளே) பட்டு (அகப் பட்டுக் கொண்டு அழிந்து போகின்றார்கள்) அந் (அப்படி அழிகின்றவர்களுக்கு) நடுவே (நடுவில்)
அமைத்தது (இறைவன் தமது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய) ஓர் (ஒரு) ஞானமும் (உண்மை ஞானத்தையும்) ஆக்கமும் (அதனால் கிடைக்கின்ற முக்தி பேறையும்) நோக்கி (குறிக்கோளாகக் கொண்டு)
இமைத்து (ஒரு கணப் பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து) அழியாது (எப்போதும் அழிந்து போகாத நிலையில்) இருப்பார் (இருப்பவர்களே) அவர் (தவசிகள்) தாமே (ஆவார்கள்).
விளக்கம்:
நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக் கொண்டு வலிமை மிக்க யானைப் படைகளுடன் உயர்ந்த பேரரசர்களாக இருந்தாலும் ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மேல் கொண்ட விரோதத்தால் எழுகின்ற போருக்கு உள்ளே அகப் பட்டுக் கொண்டு அழிந்து போகின்றார்கள். அப்படி அழிகின்றவர்களுக்கு நடுவில் இறைவன் தமது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய ஒரு உண்மை ஞானத்தையும் அதனால் கிடைக்கின்ற முக்தி பேறையும் குறிக்கோளாகக் கொண்டு ஒரு கணப் பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து எப்போதும் அழிந்து போகாத நிலையில் இருப்பவர்களே தவசிகள் ஆவார்கள்.