பாடல் #1671: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)
கத்தித் திரிவர் கழுவடி நாய்போலக்
கொத்தித் திரிவர் குரக்கறி ஞானிக
ளொத்துப் பொறியு முடலு மிருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானியார் களே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கததித திரிவர கழுவடி நாயபொலக
கொததித திரிவர குரககறி ஞானிக
ளொததுப பொறியு முடலு மிருககவெ
செததுத திரிவர சிவஞானியார களெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கத்தி திரிவர் கழு அடி நாய் போல
கொத்தி திரிவர் குரக்கு அறி ஞானிகள்
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே
செத்து திரிவர் சிவ ஞானியார்களே.
பதப்பொருள்:
கத்தி (தாம் அறிந்த கொண்டவற்றை ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்கு அதையே எடுத்து சொல்லி) திரிவர் (திரிகின்ற பொய்யான ஞானிகள்) கழு (கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு) அடி (அடியில்) நாய் (எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயை) போல (போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள்)
கொத்தி (கழு மரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே எப்போது இறைச்சியை கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருப்பதை பிடுங்கி உண்ணலாம் என்று) திரிவர் (திரிவார்கள்) குரக்கு (தமது குரலின் பேச்சுத் திறமையே) அறி (அறிவு என்று எண்ணுகின்ற) ஞானிகள் (பொய்யான ஞானிகள்)
ஒத்து (ஒன்றாக இருக்கின்ற) பொறியும் (ஐந்து புலன்களும்) உடலும் (உடலும்) இருக்கவே (அதனதன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவற்றை தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்கும் வல்லமையோடு)
செத்து (செத்த பிணத்தைப் போலவே) திரிவர் (எந்த இடத்திலும் கிடப்பார்கள்) சிவ (உண்மையான சிவ) ஞானியார்களே (ஞானிகள்).
விளக்கம்:
தாம் அறிந்த கொண்டவற்றை ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்கு அதையே எடுத்து சொல்லி திரிகின்ற பொய்யான ஞானிகள் கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு அடியில் எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயை போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள். தமது குரலின் பேச்சுத் திறமையே அறிவு என்று எண்ணுகின்ற பொய்யான ஞானிகள் கழு மரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே எப்போது இறைச்சியை கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருப்பதை பிடுங்கி உண்ணலாம் என்று திரிவார்கள். உண்மையான சிவ ஞானிகள் ஒன்றாக இருக்கின்ற ஐந்து புலன்களும் உடலும் அதனதன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவற்றை தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்கும் வல்லமையோடு செத்த பிணத்தைப் போலவே எந்த இடத்திலும் கிடப்பார்கள்.