அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #28

5-8-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

யாம் இறைவனை நல்வழியில் நாடுகின்றோம் பூஜிக்கின்றோம் பல வழியில் சேவிக்கின்றோம் இருந்த போதிலும் இறைவன் எம்மைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்னும் மனக்குறை பலரிடம் உள்ளது. உண்மை என்னவென்றால் உண்மையாக நாம் இறைவனை நாடுவதில்லை. மண் படிந்த ஒரு குழந்தையை நீராட்ட வரும் தாயைக் கண்டு அந்தக் குழந்தை ஓடுகின்றதே அதுபோலவே நாமும் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். நமது லெளகீக (உலக) எதார்த்த பாசங்களை நாடி நாமும் பின் தொடர்ந்து செல்கின்றோம். அந்த தாயைப்போல் ஆண்டவன் என்றும் நம்மைத் தேடிக்கொண்டே இருக்கின்றான். நாம் ஒளிந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை மறவாது இருத்தல் வேண்டும். அந்தத் தாயிடம் சரணடைந்து நாமும் நமது அழுக்குகளை நீக்கிக் கொண்டால் எளிதாக இறைவனடி சேர்ந்திட இயலும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #27

9-7-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மந்திரங்கள் ஜெபிக்கும் காலங்களில் எண்ணிக்கை வைப்பது அவசியம்தானா?

ஆன்மீக நிலையில் இவ்வித எண்ணிக்கை வைப்பது அவசியமற்றது ஆகும். எண்ணிக்கையை விட மன ஒரு நிலைப்பாடு முக்கியமாகின்றது. இருப்பினும் மந்திரங்கள் சித்தி (பயன்) பெற்று பிரயோகம் (செயல்படுத்த) காண விரும்பும் சிலர் எண்ணிக்கை வைப்பதும் உண்டு. குறிப்பாக ஒரு இலட்சம், இருபத்தி ஐந்தாயிரங்கள் ஜெபித்தால் சித்தி (பயன்) என கூறுவர். ஐம்பது இலட்சம் ஜெபித்தாலும் மன ஒரு நிலைப்பாடு இல்லையேல் சித்தி ஆகாது (பயன் தராது) என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். எண்ணிக்கைதனை மன சிரத்தையுடன் மனதினை ஒரு நிலைப்படுத்தி ஜெபித்து வர சிறு நற்பலன் தரும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #26

11-6-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பயம் என்பது என்ன? அது எவ்விதம் உருவாகிறது? அதை எவ்விதம் வெல்வது?

பயம் என்பது ஒரு மனநிலை என்பதை முதலில் உணர வேண்டும். இது நாமாக உருவாக்கும் ஒரு மானசீக பூதமென்பதை அறிய வேண்டும். பொதுவாக மனிதன் பயப்பட வேண்டியது இல்லை. இப்பயம் எதனால் வருகின்றது என்பதை நன்கு சிந்தித்தோம் என்றால் பயம் என்பது நமது என்கின்ற அந்தச் சொல்லினால் அந்த மனத் தன்மையால் நமது சொத்து, நமது சொந்தம், நமது பிள்ளைகள், நமது உயிர் என்றெல்லாம் சிந்திக்கும் போது பயம் ஏற்படுகின்றது. இவை இழந்து விடுவோமோ என்கின்ற அந்தப் பயமானது நம்மை முழுமையாகக் கவர்ந்து ஒருவித கிலியை (அச்சத்தை) உண்டாக்குகின்றது. அதாவது ஓர் மனநிலை இழப்போமோ என்கின்ற பயமாக மாறுகின்றது. இந்தப் பயத்தை எவ்விதம் வெல்வது என்பது ஓர் விளக்கத்தில் உண்டு. கீதையின் சாரமதை நன்கு உணர்ந்து கொண்டால் பயத்தை எவ்விதம் நீக்குவது என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். வரும்பொழுது ஒன்றுமில்லை செல்லும்பொழுதும் ஒன்றுமில்லை இடையிலிருப்பது அவன் அளித்தது என முழுமையாக உணர்ந்து கொண்டால் உயிரும் அவ்விதமே என உணர்ந்து கொண்டால் எதுவும் நஷ்டப்படுவதற்கில்லை. எதுவும் தொலைப்பதற்கில்லை. எதுவும் இழப்பதற்கும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்பு பயமும் இல்லை அச்சமும் இல்லை. இந்நிலை மாறுவதற்கு மன உறுதி வேண்டும். பொதுவாக இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் தானாக தைரியம் உருவாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #25

15-5-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வாழ்வுதனில் இறைநாட்டம் கொண்டும் இவ்வாழ்வில் இறைவனை அடையவும் சித்திகள் வேண்டுமா? இது உதவுமா?

சித்திகள் கிடைக்க ஓர் அளவிற்கு ஓரிரு படிகள் முன்னேற உதவும் என்பது மட்டுமல்லாது சித்திகள் மற்றொன்றிற்கும் ஆகாது என்றும் இங்கு முன்னதாக கூறியுள்ளோம். பறக்கும் திறன் இருந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் பறவைகள் யாவும் முக்தி அடைந்திருக்க வேண்டும். நீரில் வாழ்ந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். ஆடையில்லாமல் திரிந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் காட்டில் வாழும் பிராணிகள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். இவையாவும் முக்தி அடையவில்லையே இவையாவும் இறைவனை அடைய உதவாது. இறைவனை அடைய வேண்டுமென்றால் அசையாத நம்பிக்கையும் அன்றாட வழிபாடும் சதா அவன் நினைவும் இருக்க வேண்டும் என்பது விதியாகும் அர்ஜீனன் பெரும் பூஜைகள் செய்தும் ஓர் அளவிற்கு கர்வம் வந்த போது கிருஷ்ணன் அவனை கூட்டிச் சென்று பீமன் மானசீகமாக வில்வத்தை அளித்து உருவாக்கிய ஓர் வில்வ மலையை காட்டினார். இதன் வழியாக அர்ஜீனனின் அகந்தையை ஒழித்தான் என்பது மட்டுமல்லாது மானசீக பூஜையின் முக்கியத்துவத்தை இங்கு எடுத்துரைத்தோமே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #24

18-4-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இங்கு இறைநாமம் பாடிட பலர் பயப்படுகின்றனர். இங்கு இறைநாமம் கூற பலர் பயப்படுகின்றனர். அனைவரின் மனதிலும் பயம் உள்ளது பயத்தைவிட நாணமே (வெட்கமே) அதிகம் உள்ளது.

நல்துணை என்பது இறைநாமமே. நல்துணை என்பது நமச்சிவாயமே. நல்துணை என்பது இறையருளே. நல்துணை இதையன்றி வேறு ஒன்றுமில்லையே. இறைவனுக்கு கூட்டு பிரார்த்தனை செய்யும் காலங்களில் தியானம் செய்தல் வேண்டாம். தியானம் செய்ய வேறு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். தியானம் செய்ய நேரம் தனியாகவும் பூஜை செய்யும் நேரம் தனியாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு சொல்வது உங்கள் மனது வருத்தப்பட அல்ல. நீங்கள் அனைவரும் மேன்மை அடைவதற்க்காக உங்கள் நாணத்தை போக்கிடவே அனைவரும் நலம் பெறுவதற்கே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #23

22-2-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பிள்ளைக்கு மேலாம் தென்னங்கன்று என்று அக்காலத்தில் உள்ள பழமொழிக்கு விளக்கம் என்ன?

பிள்ளைகள் ஈன்றிட பின்பு பருவமடைந்தும் தனியாக வாழ்வது பெற்றவர்களுக்கு உபயோகம் உள்ள நிலையோ அற்ற நிலையோ என்பதை இறைவன் அறிவான் என்பதே விடையாம். மாறாக தென்னங்கன்று உறுதியாக வளர்ந்து விட்டால் இளநீர் முதல் தேங்காய் மற்றும் அதன் ஒவ்வோரு பாகமும் மனிதனுக்கு உபயோகமாகின்றது. இதன் உள் அர்த்தத்தை நன்கு ஆராய்ந்தால் நாம் படைத்ததை விட இறைவனின் படைப்பே மேலானது என்பதே பொருளாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #22

26-1-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மாற்றான் குழந்தைக்கும் யாம் உணவு அளிக்க நமது குழந்தை தானென வளரும் என்பதற்கு பொருள் என்ன?
(ஊரார் பிள்ளை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்ன?)

பொதுவாக அன்னதானம் சிறப்பானது பொதுவாக மற்றவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு அன்னம் அளித்திட நமது குழந்தைகள் செல்வங்களோடு இருப்பார்கள் என்ற கருத்து உண்டு. இருப்பினும் இது முழுமையான அர்த்தம் ஆகாது. மாற்றான் குழந்தைக்கு உணவு நன்கென அளித்தால் என்பது கர்ப்பம் தரித்துள்ள பெண்ணுக்கு (மனைவிக்கு) நாம் நன்கென உணவு அளித்தால் நம் குழந்தை நன்றாக செழிக்கும் என்பதே பொருளாகின்றது. அதாவது நம் வீட்டில் இருக்கும் கர்பிணிக்கு (மனைவிக்கு) நன்றாக உணவு அளித்தால் நம் குழந்தை வயிற்றில் நன்றாக வளரும் என்பதே பொருளாகும். இதை மற்ற குழந்தைக்கு உணவளித்தால் நம் குழந்தை செழிக்கும் என ஒப்பிட்டு உள்ளனர். இதில் தவறில்லை என்கின்ற போதிலும் உண்மையான அர்த்தம் முன்பு கூறியது ஆகும்.

இறைவன் அனைத்தும் அறிவான் நாம் அவனை ஒன்று வேண்டும் என்று கேட்பதோ வேண்டுவதோ தவறாகுமா?

பொதுவாக பத்து குழந்தைகள் இருக்கும் இடத்தில் அழுகின்ற குழந்தையை நாம் தூக்குவோம் இல்லை என்ன என்று கேட்போம். ஓர் வீட்டில் இந்நிலை என்றால் இத்தனை குழந்தைகள் வைத்திருக்கும் இறைவனை யாம் வேண்டுதல் நன்றே தவறாகாது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #21

29-12-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அகங்காரம் என்பது தனித்தனி மனிதர்களுக்கு மட்டும் அல்லாது நடுகளுக்கு இடையையும் உள்ளது. இதற்கு மூலகாரணம் தனிப்பட்ட மனிதனின் அகங்காரமே. விளைவு போர்கள். இதுமட்டுமல்லாது அக்னி பூமியில் அதிகமாக காணக்கூடும். பெரிதாக நம்நாட்டில் பாதிக்கா போதிலும் மற்ற நாடுகளில் சேதம் உண்டாக வாய்ப்புகள் பெரிதாக உள்ளது. இந்த அகங்காரத்தை நீக்கிட வேண்டுமென்றால் இயன்ற அளவிற்கு அன்னம் அளிக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு. அன்னம் அளிப்பதோடு அதன் பலனை உலக நன்மைக்கு சமர்பிப்பது நலம் தரும். இது எவ்விதம் செய்வது என்றால் வழி எளிது அன்னதானங்கள் செய்த பின்பு நீர் எடுத்து அப்புண்ணியத்தை எங்கும் செல்லட்டும் நாடு நலம் பெறட்டும் என்று பூமிக்கு செலுத்த வேண்டும். இதுவே இதற்கு சிறந்த வழி ஆகும். அனைவருக்கும் சினம் உண்டு யாதேனும் ரூபத்தில் அது பதுங்கி உள்ளிருக்கும் என்பது பொது அறிவாம் இதனை ஓங்காது தடுத்தல் வேண்டும். ஏனெனில் வருகின்ற ஆண்டில் பிரச்சனைகள் நேரிட்டால் அதற்கு காரணம் வீண் சினமும் அகங்காரமே ஆகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #20

5-11-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

திருமந்திர நூலின் நோக்கம் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறுதல் வேண்டும் என்பதேயாகும். இவ்விதம் திருமந்திரம் அனைவருக்கும் எடுத்துரைத்த போதிலும் மறு இன்பங்களை நாடுவோர் பலர் திருமந்திரம் கூறும் யாம் பெற்ற இன்பத்தை நாடுவோர் சிலர் என்பது உலக விதியாகி விட்டது இருந்த போதிலும் இக்காலத்தில் ஆன்மீகம் இறைசிந்தனை என்பது இளைஞர்களிடத்தில் அதிகரித்து இருக்கிறது. இது ஓர் பாரட்டத்தக்க காரியமாகிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்கின்றது போல் இத்தகைய சிறு சிறு மாற்றங்கள் முழுமையான நலன்களை அளிக்கும். இல்வாழ்க்கையில் பணம் பொருளை நாடுகின்றோம் இறை அருள்தனை மறக்கின்றோம். இத்தகைய செல்வங்கள் நம்முடன் இறுதியில் வராது என்றும் நலம் நல்காரியங்கள் செய்வதின் விளைவாக வருவது இறைஅருள் மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #19

8-10-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கல்லது அசையும் நாராயனா
கல்லது பாவமும் காட்டுமது நாராயணா
கல்லென கண்டோர்க்கும் கல்லாம் நாராயணா
இங்கும் கல்லும் செப்புமே நாராயணா.

இப்பாடலுக்கான விளக்கம் என்ன?

அவரவர் ஆன்மீக நிலைகள் குறித்து மூர்த்திகளும் மூர்த்திகளின் அசைவும் காணக்கூடும். இது மனப்பிரமை என பலரும் எண்ணுவதுண்டு. அவ்விதம் இல்லை கல்லும் செப்பும் நாராயணா என்பது ஓசையாகவே காதில் விழும் என்பதில் எவ்வித அச்சமும் வேண்டாம். இது மட்டும் அல்லாது மானிடர் துயரம் கண்டு மூர்த்திகளின் கண்ணில் நீர் வருவதும் உண்டு. இக்காலத்தில் மனிதர்களுக்கு வரும் வேதனைகளுக்கு ஆனந்த பைரவரும், லிங்கமும் சீராக்கும். பலர் அகம்தனிலும் தெய்வங்கள் வந்து தட்டி எழுப்புவதும் கலியுகத்தில் ஓர் சாதாரண நிலையாகி விட்டது. இதை ஏன் செய்கின்றனர் என்றால் நம்பிக்கை ஊட்டுவதற்கே கலியில் தோன்றும் கடினங்கள் இருந்த போதிலும் யாமும் உன்னை காக்கின்றோம் எமது பக்கம் திரும்புங்கள் என்கின்றதை உணர்த்திடவே இருப்பினும் மானிடர்கள் பெரும்பாலும் பணத்தை நாடுகின்றனர். இறைவனை பார்ப்பதில்லை. லட்சுமி தேவியை செல்வம் வர வேண்டும் என்று வணங்குகின்றனரே தவிர ஓர் முக்தி நிலை வர வேண்டும் என வணங்குவதில்லை. எவ்வித தெய்வத்தை வணங்கிய போதிலும் எந்த நாமம் இட்டு வணங்கிய போதிலும் செல்வது ஓரிடத்திற்கே என்பதை மனதில் வைக்க வேண்டும். எந்த ரூபமாக இருந்த போதிலும் பெறுவது அப்பரம்பொருளே என்பதை மறக்காமல் செயல்பட நன்மை உண்டாகும். தேன் எவ்வித பாட்டிலிலும் ஜாடியிலும் கண்ணாடியில் இருந்த போதிலும் தேனின் தன்மை மாறுவதில்லை. இது போல் இறைவனின் தன்மையும் மாறுவதில்லை. நீங்கள் இந்த சக்தியை எந்த பெயரை கொண்டு அழைத்தாலும் அழைத்தவுடன் உங்களுக்கு நல்வழிகாட்ட அச்சக்தி நிற்கிறது. இறைவனும் நாமும் வேறில்லை என்கின்ற எண்ணம் வளர்த்து எமக்குள் இருக்கும் இறைவன் உமக்குள்ளும் இருக்கின்றான் என்ற அப்பெரும் வாக்கியத்தினை உணர்தல் வேண்டும். பல பல இன்னல்கள் தோன்றும் பல பல குறைகள் காணும் இவையாவும் நம் முன் வினைகள் தீரும் வழியாகின்றது என மனதில் நிறுத்தி இறைவன் பாதத்தை பிடித்த வண்ணமாகவே இருத்தல் வேண்டும். எக்காலத்திலும் அவன் பாதத்தை விடுவது சீராகாது. இந்நிலையில் எம்மை இவன் விட மாட்டான் போலிருக்கிறது என ஆண்டவனும் அவனுக்கு நல்வழி அளிப்பான்.