பாடல் #1551

பாடல் #1551: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியி னேரொப்பர்
நீங்கிய வண்ண நினைவு செய்யாதவ
ரேங்கி யுலகி லிருந்தழு வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாஙகமர கொனறைப படரசடை யானடி
தாஙகு மனிதர தரணியி னெரொபபர
நீஙகிய வணண நினைவு செயயாதவ
ரெஙகி யுலகி லிருநதழு வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி
தாங்கும் மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே.

பதப்பொருள்:

பாங்கு (அழகாக) அமர் (அமைக்கப் பட்ட) கொன்றை (கொன்றை மலர்கள்) படர் (படர்ந்து இருக்கின்ற) சடையான் (திருச் சடையைத் தரித்து இருக்கின்ற இறைவனின்) அடி (திருவடிகளை எப்போதும் நினைக்கின்ற எண்ணங்களை)
தாங்கும் (நெஞ்சத்தில் தாங்கி இருக்கின்ற) மனிதர் (மனிதர்கள்) தரணியில் (இந்த உலகத்திலேயே) நேர் (இறைவனின் திருவடிகளுக்கு) ஒப்பர் (இணையானவர்களாக இருப்பார்கள்)
நீங்கிய (அவ்வாறு இல்லாமல் இறைவன் வேறு தாம் வேறு) வண்ணம் (என்று நினைத்துக் கொண்டு) நினைவு (இறைவனை எப்பொழுதும் நினைத்து இருப்பதை) செய்யாதவர் (செய்யாதவர்கள்)
ஏங்கி (தாம் விரும்பிய எதுவும் கிடைக்காமல் ஏக்கத்திலேயே) உலகில் (இந்த உலகத்தில்) இருந்து (இருந்து) அழுவாரே (துன்பப் படுவார்கள்).

விளக்கம்:

அழகாக அமைக்கப் பட்ட கொன்றை மலர்கள் படர்ந்து இருக்கின்ற திருச் சடையைத் தரித்து இருக்கின்ற இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைக்கின்ற எண்ணங்களை தமது நெஞ்சத்தில் தாங்கி இருக்கின்ற மனிதர்கள் இந்த உலகத்திலேயே இறைவனின் திருவடிகளுக்கு இணையானவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இறைவன் வேறு தாம் வேறு என்று நினைத்துக் கொண்டு இறைவனை எப்பொழுதும் நினைக்காமல் இருப்பவர்கள் தாம் விரும்பிய எதுவும் கிடைக்காமல் ஏக்கத்திலேயே இந்த உலகத்தில் இருந்து எப்போது இந்த பிறவி முடியும் என்று துன்பப் படுவார்கள்.

பாடல் #1552

பாடல் #1552: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

இருந்தழு வாரு மியல்பு கெட்டாரு
மருந்தவ மேல்கொண்டங் கண்ணலை யெண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநதழு வாரு மியலபு கெடடாரு
மருநதவ மெலகொணடங கணணலை யெணணில
வருநதா வகைசெயது வானவர கொனும
பெருநதனமை நலகும பிறபபிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அரும் தவம் மேல் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இலி தானே.

பதப்பொருள்:

இருந்து (பிறவி எனும் துன்பத்தில் இருந்து) அழுவாரும் (அழுகின்றவர்களும்) இயல்பு (மனித இனத்திற்கான ஒழுக்கங்கள்) கெட்டாரும் (கெட்டவர்களும்)
அரும் (செய்வதற்கு அரியதான) தவம் (தவங்களை) மேல் (செய்வதையே குறிக்கோளாக) கொண்டு (மேற் கொண்டு) அங்கு (அந்த தவங்களை செய்யும் போதும்) அண்ணலை (தலைவனாகவும் அடியவனாகவும் இருக்கின்ற இறைவனை) எண்ணில் (எண்ணிக் கொண்டே இருந்தால்)
வருந்தா (அவர்களின் துன்பம் நீங்கி இனி எப்போதும் வருந்தாமல் இருப்பதற்கான) வகை (வழி முறையை) செய்து (செய்து கொடுத்து) வானவர் (வானவர்களின்) கோனும் (அரசனாகியவன்)
பெரும் (மாபெரும்) தன்மை (கருணையோடு) நல்கும் (அருளுவான்) பிறப்பு (பிறப்பு) இலி (இல்லாதவனாகிய) தானே (இறைவன்).

விளக்கம்:

பாடல் #1551 இல் உள்ளபடி பிறவி எனும் துன்பத்தில் இருந்து அழுகின்றவர்களும், மனித இனத்திற்கான ஒழுக்கங்கள் கெட்டவர்களும், செய்வதற்கு அரியதான தவங்களை செய்வதையே குறிக்கோளாக மேற் கொண்டு அந்த தவங்களை செய்யும் போதும் தலைவனாகவும் அடியவனாகவும் இருக்கின்ற இறைவனை எண்ணிக் கொண்டே இருந்தால், அவர்களின் துன்பம் நீங்கி இனி எப்போதும் வருந்தாமல் இருப்பதற்கான வழி முறையை செய்து கொடுத்து வானவர்களின் அரசனாகியவன் மாபெரும் கருணையோடு அருளுவான் பிறப்பு இல்லாதவனாகிய இறைவன்.

கருத்து:

பிறவி எனும் துன்பத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் இறைவனை நினைத்து தவமிருந்தால் இறைவன் மாபெரும் கருணையோடு அவர்களுக்கு வழி காட்டி பிறவி இல்லாத நிலையை கொடுத்து அருளுவான்.

பாடல் #1553

பாடல் #1553: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலாப்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூரறி வாளர துணைவர நினைபபிலாப
பாரறி வாளர படுபயன றானுணபர
காரறி வாளர கலநது பிறபபரகள
நீரறி வாரநெடு மாமுகி லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலா
பார் அறிவாளர் படு பயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பர்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே.

பதப்பொருள்:

தூர் (மும் மலங்களை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) துணைவர் (தன்னுடன் துணையாகவே நிற்கின்ற இறைவனை பற்றிய) நினைப்பு (நினைவே) இலா (இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்)
பார் (உலக அறிவை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) படு (அதற்குள்ளேயே விழுந்து கிடந்து) பயன் (அதன் பயன்களை) தான் (தானே) உண்பர் (அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்)
கார் (மாயை எனும் இருளால் அறிந்து கொள்ளக் கூடியதை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) கலந்து (வினைகளோடு கலந்து) பிறப்பர்கள் (மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள்)
நீர் (இறைவன் எனும் மேகத்தில் இருந்து ஆன்மா எனும் நீராக தாம் வந்து இருக்கின்றோம் என்பதை) அறிவார் (உணர்ந்து கொண்டவர்களுக்கு) நெடு (நீண்ட) மா (மாபெரும்) முகில் (மேகத்தை போல அருளை மழையாகப் பொழிபவனாக) ஆமே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

மும் மலங்களை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் தன்னுடன் துணையாகவே நிற்கின்ற இறைவனை பற்றிய நினைவே இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். உலக அறிவை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் அதற்குள்ளேயே விழுந்து கிடந்து அதன் பயன்களை தானே அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். மாயை எனும் இருளால் அறிந்து கொள்ளக் கூடியதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் வினைகளோடு கலந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள். இறைவன் எனும் மேகத்தில் இருந்து ஆன்மா எனும் நீராக தாம் வந்து இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு நீண்ட மாபெரும் மேகத்தை போல அருளை மழையாகப் பொழிபவனாக இறைவன் இருக்கின்றான்.

பாடல் #1554

பாடல் #1554: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

அறிவுடன் கூடிய ழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிவுடன கூடிய ழைதததொர தொணி
பறியுடன பாரம பழமபதி சிநதுங
குறியது கணடுங கொடுவினை யாளர
செறிய நினைககிலர செவடி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம் பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடு வினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பதப்பொருள்:

அறிவுடன் (இறைவனிடமிருந்தே தாம் வந்திருக்கின்றோம் என்பதை அறிந்தவர்களின் அறிவோடு) கூடி (கூடி) அழைத்தது (அழைத்தது) ஓர் (ஒரு ஓடக்காரணும்) தோணி (படகுமாக வந்து)
பறியுடன் (உடலுடன் சேர்ந்து) பாரம் (பாரமாக இருக்கின்ற பற்றுக்களையும் கர்மங்களையும்) பழம் (பழமையான) பதி (தலைவனாகிய இறைவன்) சிந்தும் (அழித்து பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவுகின்றான்)
குறி (இந்த வழி முறை) அது (அதனை) கண்டும் (தெரிந்து கொண்டும்) கொடு (கொடுமையான) வினையாளர் (வினைகளைக் கொண்டு இருப்பதால் அதை உணராமல் இருப்பவர்கள்)
செறிய (பிறவியை கடப்பதற்காக) நினைக்கிலர் (நினைக்காமல் இருக்கின்றார்கள்) சேவடி (இறைவனின் செம்மையான திருவடிகளை) தானே (தாங்களே).

விளக்கம்:

இறைவனிடமிருந்தே தாம் வந்திருக்கின்றோம் என்பதை அறிந்தவர்களின் அறிவோடு கூடி அழைக்கின்ற பழமையான தலைவனாகிய இறைவன் ஒரு ஓடக்காரணும் படகுமாக வந்து உடலுடன் சேர்ந்து பாரமாக இருக்கின்ற பற்றுக்களையும் கர்மங்களையும் அழித்து பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவுகின்றான். இந்த வழி முறையை தெரிந்து கொண்டும் கொடுமையான வினைகளைக் கொண்டு இருப்பதால் அதை உணராமல் இருப்பவர்கள் பிறவியை கடப்பதற்காக இறைவனின் செம்மையான திருவடிகளை நினைக்காமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1555

பாடல் #1555: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

மன்னு மொருவன் மருவு மனோமய
னென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்
துன்னி மனமே தொழுமின் றுணையிலி
தன்னையு மங்கே தலைப்பட லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனனு மொருவன மருவு மனொமய
னெனனில மனித ரிகழவரி வெழைகள
துனனி மனமெ தொழுமின றுணையிலி
தனனையு மஙகெ தலைபபட லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன்
என்னில் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணை இலி
தன்னையும் அங்கே தலை படல் ஆமே.

பதப்பொருள்:

மன்னும் (எப்போதும் நிலையாக இருக்கின்ற) ஒருவன் (ஒருவனாகிய இறைவன்) மருவும் (நினைக்கும் வடிவமாகவே கலந்து) மனோ (மனதின்) மயன் (தன்மைக்கு ஏற்றவாறு இருக்கின்றான்)
என்னில் (இதை எடுத்துக் கூறினால்) மனிதர் (அறியாமையில் இருக்கின்ற மனிதர்கள்) இகழ்வர் (இகழ்ந்து சிரிப்பார்கள்) இவ் (இந்த) ஏழைகள் (அறிவுக் குறைபாடுள்ள ஏழைகள்)
துன்னி (எண்ணத்திற்கு ஏற்றபடி பொருந்தி இறைவன் இருக்கின்ற) மனமே (தனது மனதினால்) தொழுமின் (தொழுது வந்தால்) துணை (தனக்கு சரிசமமாக எதுவும்) இலி (இல்லாதவனாகிய)
தன்னையும் (இறைவன்) அங்கே (மனதிற்குள்) தலை (வெளிப்பட்டு அவனை உணர்வதற்கான வழியில்) படல் (செல்ல) ஆமே (வைப்பான்).

விளக்கம்:

எப்போதும் நிலையாக இருக்கின்ற ஒருவனாகிய இறைவன் நினைக்கும் வடிவமாகவே கலந்து மனதின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கின்றான். இப்படி இறைவன் இருப்பதை எடுத்துக் கூறினால் அறியாமையில் மூழ்கி அறிவுக் குறைபாடினால் ஏழைகளாக இருக்கின்ற மனிதர்கள் இகழ்ந்து சிரிப்பார்கள். இவ்வாறு எண்ணத்திற்கு ஏற்றபடி தம்மோடு பொருந்தி இருக்கின்ற இறைவனை தமது மனதினால் தொழுது வந்தால் தனக்கு சரிசமமாக எதுவும் இல்லாதவனாகிய இறைவன் தங்களின் மனதிற்குள் வெளிப்பட்டு அவனை உணர்வதற்கான வழியில் செல்ல வைப்பான்.

பாடல் #1556

பாடல் #1556: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே யுதையமுற்
றாங்கார மற்று மமைவது கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமையத்து நின்றொழிந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓஙகாரத துளளொளிக குளளெ யுதையமுற
றாஙகார மறறு மமைவது கைகூடார
சாஙகால முனனார பிறவாமை சாரவுறார
நீஙகாச சமையதது நினறொழிந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே உதையம் உற்று
ஆங்காரம் அற்றும் அமைவது கை கூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வு உறார்
நீங்கா சமையத்து நின்று ஒழிந்தார்களே.

பதப்பொருள்:

ஓங்காரத்து (பிரணவ மந்திரமான ஓங்காரத்தின்) உள் (சத்தத்திற்கு உள்ளே இருக்கின்ற) ஒளிக்கு (ஒளி வடிவான இறைவனே) உள்ளே (சாதகருக்குள்ளும்) உதையம் (ஜோதியாக வெளிப்படுவதை) உற்று (மனதை ஒரு முகப்படுத்தி உணர்வதன் மூலம்)
ஆங்காரம் (அகங்காரத்தை) அற்றும் (அழித்து) அமைவது (இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை) கை (பெற்று அடைய) கூடார் (முடியாதவர்கள்)
சாங்காலம் (தாம் இறக்கும் காலம் ஒன்று வரும் என்பதை) உன்னார் (நினைக்காதவர்கள் ஆதலால்) பிறவாமை (இனி எப்போதும் பிறக்காமல் இருக்கின்ற பெரும் நிலையை) சார்வு (சார்ந்து இருக்கின்ற வழி முறைகளில்) உறார் (செல்லாமல்)
நீங்கா (எப்போதும் தாம் கடைபிடிக்கின்ற வழியே சிறந்தது ஓயாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்ற) சமையத்து (சமயங்களின் கொள்கைகளின்) நின்று (வழியில் நின்று) ஒழிந்தார்களே (இறந்து அழிந்து போகின்றார்கள்).

விளக்கம்:

பிரணவ மந்திரமான ஓங்காரத்தின் சத்தத்திற்கு உள்ளே இருக்கின்ற ஒளி வடிவான இறைவனே சாதகருக்குள்ளும் ஜோதியாக வெளிப்படுவதை மனதை ஒரு முகப்படுத்தி உணர்வதன் மூலம் அகங்காரத்தை அழித்து இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை பெற்று அடைய முடியாதவர்கள் தாம் இறக்கும் காலம் ஒன்று வரும் என்பதை நினைக்காமல் இருக்கின்றார்கள். ஆதலால், இனி எப்போதும் பிறக்காமல் இருக்கின்ற பெரும் நிலையை சார்ந்து இருக்கின்ற வழி முறைகளில் செல்லாமல் எப்போதும் தாம் கடைபிடிக்கின்ற வழியே சிறந்தது என்று ஓயாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்ற சமயங்களின் கொள்கைகளின் வழியில் நின்று இறந்து அழிந்து போகின்றார்கள்.

பாடல் #1544

பாடல் #1544: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

பரிசறி வானவர் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேரிற் றிகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ண
னரிதவன் வைத்த வரனெறி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பரிசறி வானவர பணபன பகலொன
பெரிசறி வானவர பெரிற றிகழுந
துரிசற நீநினை தூயமணி வணண
னரிதவன வைதத வரனெறி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பரிசு அறி வானவர் பண்பன் பகலோன்
பெரிசு அறி வானவர் பேரில் திகழும்
துரிசு அற நீ நினை தூய் மணி வண்ணன்
அரிது அவன் வைத்த அரன் நெறி தானே.

பதப்பொருள்:

பரிசு (கிடைப்பதற்கு மேலான பரிசு அவனே) அறி (என்று அறிந்து கொண்ட) வானவர் (தேவர்களுக்கு) பண்பன் (பெருங் கருணையோடு அருளுபவனும்) பகலோன் (பிரகாசமான சூரியனைப் போல் வெளிச்சத்தை கொடுத்து வழிகாட்டுபவனும்)
பெரிசு (அடையக் கூடிய அனைத்தையும் விட பெரியதானவன் அவனே) அறி (என்று அறிந்து கொண்ட) வானவர் (தேவர்கள்) பேரில் (அழைக்கின்ற பலவிதமான பெயர்களிலும்) திகழும் (அப்படியே திகழ்பவனும் ஆகிய இறைவனை)
துரிசு (ஒரு குற்றமும்) அற (இல்லாமல்) நீ (சாதகர்கள்) நினை (நினைத்து வழிபட்டால்) தூய் (தூய்மையான) மணி ( மாணிக்கத்தில் நுழைகின்ற வெளிச்சம் அப்படியே எதிரொலிப்பது போல) வண்ணன் (அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற தன்மையைக் கொடுத்து அருளுவது)
அரிது (கிடைப்பதற்கு மிகவும் அரியதானது) அவன் (அவன்) வைத்த (வகுத்து கொடுத்த) அரன் (சாதகர்களை காத்து அருளுகின்ற இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறைகளே) தானே (ஆகும்).

விளக்கம்:

கிடைப்பதற்கு மேலான பரிசு அவனே என்று அறிந்து கொண்ட தேவர்களுக்கு பெருங் கருணையோடு அருளுபவனும் பிரகாசமான சூரியனைப் போல் வெளிச்சத்தை கொடுத்து வழிகாட்டுபவனும் அடையக் கூடிய அனைத்தையும் விட பெரியதானவன் அவனே என்று அறிந்து கொண்ட தேவர்கள் அழைக்கின்ற பலவிதமான பெயர்களிலும் அப்படியே திகழ்பவனும் ஆகிய இறைவனை ஒரு குற்றமும் இல்லாமல் சாதகர்கள் நினைத்து வழிபட்டால் தூய்மையான மாணிக்கத்தில் நுழைகின்ற வெளிச்சம் அப்படியே எதிரொலிப்பது போல அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற தன்மையைக் கொடுத்து வழி காட்டி அருளுகின்றான். சாதகர்களை காத்து அருளுகின்ற இறைவனை அடைகின்ற வழி முறைகளே கிடைப்பதற்கு மிகவும் அரியதாக அவன் வகுத்து கொடுத்த அருளிய அந்த வழி முறைகள் ஆகும்.

பாடல் #1545

பாடல் #1545: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆன சமைய மதுவிது நன்றெனு
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமி
னூனங் கடந்த வுருவது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆன சமைய மதுவிது நனறெனு
மாய மனிதர மயகக மதுவொழி
கானங கடநத கடவுளை நாடுமி
னூனங கடநத வுருவது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆன சமையம் அது இது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடுமின்
ஊனம் கடந்த உரு அது ஆமே.

பதப்பொருள்:

ஆன (பலரால் சொல்லப்படுவதான) சமையம் (சமயங்களில்) அது (அதுவும்) இது (இதுவும்) நன்று (நல்லது என்று) எனும் (பல விதமான சமயங்களைப் பற்றி)
மாய (மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கின்ற) மனிதர் (மனிதர்கள்) மயக்கம் (தங்களை மயக்கி விட முயற்சி செய்வார்கள்) அது (அதில்) ஒழி (சென்று மயங்குவதை ஒழித்து விட்டு)
கானம் (நாதங்களை) கடந்த (கடந்து நிற்கின்ற) கடவுளை (இறைவனை) நாடுமின் (தேடுங்கள்)
ஊனம் (அவ்வாறு தேடினால் அழிவை) கடந்த (கடந்து நிற்கின்ற) உரு (என்றும் அழியாத உருவமாகிய) அது (இறைவனை) ஆமே (காணலாம்).

விளக்கம்:

பலரால் சொல்லப்படுவதான சமயங்களில் அதுவும் இதுவும் நல்லது என்று பல விதமான சமயங்களைப் பற்றி மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கின்ற மனிதர்கள் தங்களை மயக்கி விட முயற்சி செய்வார்கள். அதில் சென்று மயங்குவதை ஒழித்து விட்டு நாதங்களை கடந்து நிற்கின்ற இறைவனை தேடுங்கள். அவ்வாறு தேடினால் அழிவை கடந்து நிற்கின்ற என்றும் அழியாத உருவமாகிய இறைவனை காணலாம்.

பாடல் #1546

பாடல் #1546: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அன்னெறி நாடி யமரர் முனிவருஞ்
சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றபின்
முன்னெறி நாடி முதல்வ னருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அனனெறி நாடி யமரர முனிவருஞ
செனனெறி கணடார சிவனெனப பெறறபின
முனனெறி நாடி முதலவ னருளிலார
செனனெறி செலலார திகைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அந் நெறி நாடி அமரர் முனிவரும்
செல் நெறி கண்டார் சிவன் என பெற்ற பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

அந் (இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறையை) நாடி (தேடி) அமரர் (அமரர்களும்) முனிவரும் (முனிவர்களும்)
செல் (தாங்கள் செல்ல வேண்டிய) நெறி (வழி முறையை) கண்டார் (கண்டு கொண்டு அதிலேயே சிறிதும் மாறாமல் சென்று) சிவன் (சிவம்) என (என்கின்ற பரம் பொருளை) பெற்ற (பெற்று அடைந்தார்கள்) பின் (ஆனால் அவர்கள் சென்ற வழி முறையை அறியாத மற்றவர்களோ தமக்கு பின்னாலும்)
முன் (முன்னாலும் இருக்கின்ற) நெறி (வழி முறைகள் என்று பலவாறாக) நாடி (தேடி அலைந்து எந்த வழியையும் நிலையாக கடை பிடிக்காததால்) முதல்வன் (அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனின்) அருள் (திருவருளை) இலார் (இல்லாதவர்களாக அவர்கள் ஆகி விடுகிறார்கள்)
செல் (அமரர்களும் முனிவர்களும் சென்று அடைந்த) நெறி (வழி முறையில்) செல்லார் (செல்லாமல்) திகைக்கின்ற (எந்த வழியில் சென்று அடைவது என்று அறியாத மாயையில் திகைத்துக் கொண்டே) ஆறே (அலைகின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழி முறையை தேடி அமரர்களும் முனிவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய வழி முறையை கண்டு கொண்டு அதிலேயே சிறிதும் மாறாமல் சென்று சிவம் என்கின்ற பரம் பொருளை பெற்று அடைந்தார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழி முறையை அறியாத மற்றவர்களோ தமக்கு பின்னாலும் முன்னாலும் இருக்கின்ற வழி முறைகள் என்று பலவாறாக தேடி அலைந்து எந்த வழியையும் நிலையாக கடை பிடிக்காததால் அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனின் திருவருளை இல்லாதவர்களாக அவர்கள் ஆகி விடுகிறார்கள். அமரர்களும் முனிவர்களும் சென்று அடைந்த வழி முறையில் செல்லாமல் எந்த வழியில் சென்று அடைவது என்று அறியாத மாயையில் திகைத்துக் கொண்டே அலைகின்றார்கள்.

பாடல் #1547

பாடல் #1547: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உறுமா றறிவது முண்ணின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்று மில்லை
யறுமா றதுவான தங்கியு ளாங்கே
யிறுமா றறிகில ரேழைக டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறுமா றறிவது முணணினற சொதி
பெறுமா றறியிற பிணககொனறு மிலலை
யறுமா றதுவான தஙகியு ளாஙகெ
யிறுமா றறிகில ரேழைக டாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆனது அங்கி உள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.

பதப்பொருள்:

உறும் (இறைவனை அடைகின்ற) ஆறு (வழி முறையை) அறிவதும் (அறிந்து கொள்வதும் அதன் மூலம்) உள் (தமக்கு உள்ளே) நின்ற (நிற்கின்ற) சோதி (ஜோதியாகிய இறைவனை)
பெறும் (பெறுகின்ற) ஆறு (வழி முறையை) அறியில் (அறிந்து கொண்டால்) பிணக்கு (குழப்பமானது) ஒன்றும் (என்று ஒன்றும்) இல்லை (இல்லாமல் போய்விடும்)
அறும் (அப்போது இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் அறுக்கின்ற) ஆறு (வழியாக) அது (அதுவே) ஆனது (ஆகிவிடும்) அங்கி (நன்மை செய்கின்ற ஜோதியாக) உள் (உள்ளே) ஆங்கே (இருக்கின்ற இறைவனை அடைந்து)
இறும் (தான் எனும் அகங்காரத்தை நீக்குகின்ற) ஆறு (வழி முறையை) அறிகிலர் (அறியாதவர்கள்) ஏழைகள் (மாயையில் சிக்கிக் கொண்டு இறைவனின் அருளைப் பெறாத ஏழைகளாகவே) தாமே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழி முறையை அறிந்து கொள்வதும் அதன் மூலம் தமக்கு உள்ளே நிற்கின்ற ஜோதியாகிய இறைவனை பெறுகின்ற வழி முறையை அறிந்து கொண்டால் குழப்பமானது என்று ஒன்றும் இல்லாமல் போய்விடும். அப்போது இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் அறுக்கின்ற வழியாக அதுவே ஆகிவிடும். இதை கடை பிடித்து நன்மை செய்கின்ற ஜோதியாக உள்ளே இருக்கின்ற இறைவனை அடைந்து தான் எனும் அகங்காரத்தை நீக்குகின்ற வழி முறையை அறியாதவர்கள் மாயையில் சிக்கிக் கொண்டு இறைவனின் அருளைப் பெறாத ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.