பாடல் #1501

பாடல் #1501: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

திருமன்னுஞ் சற்புத்திர மார்க சரிதை
யுருமன்னி வாழு முலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூப்பத் தொழுது
விருமன்னு நாடோறு மின்புற் றிருந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருமனனுஞ சறபுததிர மாரக சரிதை
யுருமனனி வாழு முலகததீர கெணமின
கருமனனு பாசங கைகூபபத தொழுது
விருமனனு நாடொறு மினபுற றிருநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு மன்னும் சற் புத்திர மார்க சரிதை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கரு மன்னு பாசம் கை கூப்ப தொழுது
இரு மன்னு நாள் தோறும் இன்பு உற்று இருந்தே.

பதப்பொருள்:

திரு (இறை சக்தியானது ஆன்மாவிற்குள்) மன்னும் (நிலை பெற்று இருக்கும்) சற் (இறைவனை தந்தையாக பாவித்து) புத்திர (தம்மை மகனாக பாவிக்கின்ற) மார்க (வழி முறையே) சரிதை (இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழிமுறையை சொல்லுகிறேன்)
உரு (உடல் இருக்கும் வரை) மன்னி (நிலை பெற்று) வாழும் (வாழுகின்ற) உலகத்தீர் (உலகத்தவர்களே) கேண்மின் (கேளுங்கள்)
கரு (கருவிலேயே) மன்னு (நிலை பெற்று வருகின்ற) பாசம் (பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு) கை (இரண்டு கைகளையும்) கூப்ப (ஒன்றாக கூப்பி) தொழுது (இறைவனை தொழுது வணங்கி)
இரு (இறைவனை நினைத்துக் கொண்டே இருப்பதில்) மன்னு (நிலை பெற்று) நாள் (தினம்) தோறும் (தோறும்) இன்பு (அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை) உற்று (அனுபவித்துக் கொண்டே) இருந்தே (இருங்கள்).

விளக்கம்:

இறை சக்தியானது ஆன்மாவிற்குள் நிலை பெற்று இருக்கும் இறைவனை தந்தையாக பாவித்து தம்மை மகனாக பாவிக்கின்ற வழி முறையே இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழி முறையை சொல்லுகிறேன் உடல் இருக்கும் வரை நிலை பெற்று வாழுகின்ற உலகத்தவர்களே கேளுங்கள். கருவிலேயே நிலை பெற்று வருகின்ற பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு அவனை இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி தொழுது வணங்கி அவனை நினைத்துக் கொண்டே இருப்பதில் நிலை பெற்று தினம் தோறும் அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

பாடல் #1488

பாடல் #1488: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

சன்மார்கந் தானே சகமார்க மானது
மன்மார்க மாமுத்தி சித்திக்கும் வைப்பதாம்
பின்மார்க மாவது பேராப் பிறந்திறந்
துன்மார்க ஞானத் துறுதியு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரகந தானெ சகமாரக மானது
மனமாரக மாமுததி சிததிககும வைபபதாம
பினமாரக மாவது பெராப பிறநதிறந
துனமாரக ஞானத துறுதியு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்கம் தானே சக மார்கம் ஆனது
மன் மார்கம் ஆம் முத்தி சித்திக்கும் வைப்பது ஆம்
பின் மார்கம் ஆவது பேரா பிறந்து இறந்து
உன் மார்க ஞானத்து உறுதியும் ஆமே.

பதப்பொருள்:

சன் (உண்மை) மார்கம் (வழியில் ஞானம் பெற்ற சாதகர்களுக்கு) தானே (தானாகவே) சக (இறைவன் தோழமையுடன்) மார்கம் (வழிகாட்டும்) ஆனது (நெறி முறையாக சக மார்கம் [தோழமை வழிமுறை] இருக்கின்றது)
மன் (இதுவே எப்போதும் நிலைத்து நிற்கின்ற) மார்கம் (வழியாக) ஆம் (இருந்து) முத்தி (முக்தி பேறு அடைவதற்கும்) சித்திக்கும் (நினைப்பதை எல்லாம்) வைப்பது (செயல்பட வைப்பது) ஆம் (ஆகவும் இருக்கின்றது)
பின் (இதற்கு நேர் எதிரான) மார்கம் (வழியில்) ஆவது (செல்பவர்கள்) பேரா (இடைவிடாமல்) பிறந்து (பிறவி எடுத்து) இறந்து (இறந்து மீண்டும் மீண்டும்)
உன் (மனம் செல்லுகின்ற) மார்க (வழியில் செல்லும் போதும் இறைவன் தோழமையுடன் மறைந்து இருந்து) ஞானத்து (ஒரு காலத்தில் உண்மை ஞானம்) உறுதியும் (உறுதியாக கிடைக்கும் படி) ஆமே (அருளுவார்).

விளக்கம்:

உண்மை வழியில் ஞானம் பெற்ற சாதகர்களுக்கு தானாகவே இறைவன் தோழமையுடன் வழிகாட்டும் நெறி முறையாக சக மார்கம் [தோழமை வழிமுறை] இருக்கின்றது. இதுவே எப்போதும் நிலைத்து நிற்கின்ற வழியாக இருந்து முக்தி பேறு அடைவதற்கும் நினைப்பதை எல்லாம் செயல்பட வைப்பது ஆகவும் இருக்கின்றது. இதற்கு நேர் எதிரான வழியில் செல்பவர்கள் இடைவிடாமல் பிறவி எடுத்து இறந்து மீண்டும் மீண்டும் மனம் செல்லுகின்ற வழியில் செல்லும் போதும் இறைவன் தோழமையுடன் மறைந்து இருந்து ஒரு காலத்தில் உண்மை ஞானம் உறுதியாக கிடைக்கும் படி அருளுவார்.

கருத்து:

உண்மை வழியில் ஞானம் பெற்றவர்களுக்கு இறைவன் தோழமையாக அருகிலேயே இருந்து நினைப்பது அனைத்தையும் செயல் படுத்துகின்றார். எந்த வழிமுறையையும் பின் பற்றாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தாலும் இறைவன் தோழமையாக மறைந்து இருந்து வழிகாட்டி ஒரு காலத்தில் ஞானம் பெறும் படி அருளுவார்.

பாடல் #1489

பாடல் #1489: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

மருவுந் துவாதெச மார்கமு மில்லார்
குருவுஞ் சிவனுஞ் சமையமுங் கூடார்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகு
முருவுங் கிளையு மொருங்கிழப் போரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மருவுந துவாதெச மாரகமு மிலலார
குருவுஞ சிவனுஞ சமையமுங கூடார
வெருவுந திருமகள வீடடிலலை யாகு
முருவுங கிளையு மொருஙகிழப பொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மருவும் துவாதெச மார்கமும் இல்லார்
குருவும் சிவனும் சமையமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்போரே.

பதப்பொருள்:

மருவும் (தியானத்தின் மூலம்) துவாதெச (தலைக்கு மேலே பன்னிரண்டு அங்குல தூரத்தில் இருக்கின்ற துவாதச வெளியில் இருக்கின்ற இறைவனை அறிகின்ற) மார்கமும் (யோக வழிமுறையை) இல்லார் (அறிந்து கொள்ளாதவர்களும்)
குருவும் (குருவின் மூலம் ஞானத்தை பெறாதவர்களும்) சிவனும் (இறைவன் மேல் பக்தி செய்யாதவர்களும்) சமையமும் (இறைவனை வழிபடும் தமது குல வழக்கத்தை) கூடார் (கைவிடுபவர்களும்)
வெருவும் (ஆகிய இவர்களுடன் சேர்ந்து இருப்பது வீண் என்று) திருமகள் (லட்சுமி தேவியும்) வீட்டு (அவர்களை விட்டு) இல்லை (வேண்டாம் என்று) ஆகும் (விலகி விடுவாள்)
உருவும் (அவர்களின் உடலும்) கிளையும் (உடலைச் சுற்றி இருக்கின்ற நன்மைகளும்) ஒருங்கு (அழிந்து) இழப்போரே (இழந்து விடுவார்கள்).

விளக்கம்:

தியானத்தின் மூலம் தலைக்கு மேலே பன்னிரண்டு அங்குல தூரத்தில் இருக்கின்ற துவாதச வெளியில் இருக்கின்ற இறைவனை அறிகின்ற யோக வழிமுறையை அறிந்து கொள்ளாதவர்களும் குருவின் மூலம் ஞானத்தை பெறாதவர்களும் இறைவன் மேல் பக்தி செய்யாதவர்களும் இறைவனை வழிபடும் தமது குல வழக்கத்தை கைவிடுபவர்களும் ஆகிய இவர்களுடன் சேர்ந்து இருப்பது வீண் என்று லட்சுமி தேவியும் அவர்களை விட்டு வேண்டாம் என்று விலகி விடுவாள். அவர்களின் உடலும் உடலைச் சுற்றி இருக்கின்ற நன்மைகளும் அழிந்து இழந்து விடுவார்கள்.

கருத்து:

உயர்ந்த மனித பிறவி என்பது இறைவனை அறிந்து கொண்டு அவனை அடைவதற்காக அருளப்பட்டது. இதில் இறைவனை அடையும் வழிகளாக பக்தி கர்மம் யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளை தோழமையுடன் உடனிருந்து இறைவன் அருளியிருந்தும் இது எதையுமே பின்பற்றாமல் ஆசையின் வழியில் செல்பவர்களை விட்டு தோழமையுடன் இருந்த இறைவன் விலகி நிற்பதால் அவர்களின் உயர்ந்த பிறவிக்கான நன்மைகள் அழிந்து போய் அடுத்த பிறவியில் கீழ் நிலை பிறவிக்கு சென்று விடுவார்கள்.

பாடல் #1490

பாடல் #1490: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

யோகமு மாதியி னுள்ளே யகலிடம்
யோக சமாதியி னுள்ளே யுளரொளி
யோக சமாதியி னுள்ளே யுளசத்தி
யோக சமாதி யுகந்தவர் சித்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகமு மாதியி னுளளெ யகலிடம
யொக சமாதியி னுளளெ யுளரொளி
யொக சமாதியி னுளளெ யுளசததி
யொக சமாதி யுகநதவர சிததரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகமும் ஆதியின் உள்ளே அகல் இடம்
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோக சமாதியின் உள்ளே உள சத்தி
யோக சமாதி உகந்தவர் சித்தரே.

பதப்பொருள்:

யோகமும் (யோகம் என்று அறியப் படுகின்ற சாதனையானது) ஆதியின் (ஆதியாக இருக்கின்ற இறைவனின்) உள்ளே (உள்ளேயே அடங்கி) அகல் (அண்ட சராசரங்கள்) இடம் (அனைத்திலும் இறைவனோடு இடம் பெற்று இருக்கின்றது)
யோக (அந்த யோகத்தில்) சமாதியின் (ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில்) உள்ளே (சாதகருக்கு உள்ளே) உளர் (என்றும் நிலைபெற்று இருக்கின்ற) ஒளி (ஒளியாக இறைவன் இருக்கின்றான்)
யோக (யோகத்தில்) சமாதியின் (ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில்) உள்ளே (சாதகருக்கு உள்ளே) உள (இருக்கின்ற) சத்தி (இறைவனின் சக்தியை)
யோக (யோகத்தில்) சமாதியின் (ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில்) உகந்தவர் (இருந்து கொண்டே அனுபவித்துக் கொண்டு பேரின்பத்திலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களே) சித்தரே (சித்தர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

யோகம் என்று அறியப் படுகின்ற சாதனையானது ஆதியாக இருக்கின்ற இறைவனின் உள்ளேயே அடங்கி அண்ட சராசரங்கள் அனைத்திலும் இறைவனோடு இடம் பெற்று இருக்கின்றது. அந்த யோகத்தில் ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில் சாதகருக்கு உள்ளே என்றும் நிலைபெற்று இருக்கின்ற ஒளியாக இறைவன் இருக்கின்றான். அந்த ஒளியாகிய இறைவனின் சக்தியை சமாதி நிலையில் இருந்து கொண்டே அனுபவித்துக் கொண்டு பேரின்பத்திலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களே சித்தர்கள் ஆவார்கள்.

பாடல் #1491

பாடல் #1491: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

யோகமும் போகமும் யோகியர் காகுமாம்
யோக சிவரூப முற்றிடு முள்ளத்தோர்
யோகம் புவியிற் புருடாதி சித்தியா
மாக மிரண்டு மழியாத யோகிக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகமும பொகமும யொகியர காகுமாம
யொக சிவரூப முறறிடு முளளததொர
யொகம புவியிற புருடாதி சிததியா
மாக மிரணடு மழியாத யொகிககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகமும் போகமும் யோகியர்கு ஆகும் ஆம்
யோக சிவ ரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
யோகம் புவியில் புருட ஆதி சித்தி ஆம்
ஆகம் இரண்டும் அழியாத யோகிக்கே.

பதப்பொருள்:

யோகமும் (யோகமும்) போகமும் (அதனால் கிடைக்கின்ற பேரின்பமும்) யோகியர்கு (யோக சாதனை புரிகின்ற யோகியர்களுக்கே) ஆகும் (அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு) ஆம் (கிடைக்கும்)
யோக (யோகத்தில்) சிவ (இறைவனின்) ரூபம் (ஒளி உருவத்தை) உற்றிடும் (தமக்குள்ளே தரிசிக்கின்ற) உள்ளத்து (யோகியர்களின் உள்ளத்திற்குள்) ஓர் (என்றும் இடைவிடாத இறை சிந்தனையாக இருக்கின்ற ஒரு)
யோகம் (யோகமே) புவியில் (இந்த உலகத்தில் இருக்கின்ற) புருட (யோகியர்களின் ஆன்மாவிற்கு) ஆதி (ஆதியாகிய பரமாத்மாவின்) சித்தி (அருள் சக்தியாக) ஆம் (கிடைக்கும்)
ஆகம் (அந்த அருள் சக்தியால் உடல் மனம்) இரண்டும் (ஆகிய இரண்டும்) அழியாத (என்றும் அழியாமல்) யோகிக்கே (இருக்கின்ற நிலையை யோகியர்கள் பெறுவார்கள்).

விளக்கம்:

யோகமும் அதனால் கிடைக்கின்ற பேரின்பமும் யோக சாதனை புரிகின்ற யோகியர்களுக்கே அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு கிடைக்கும். யோகத்தில் இறைவனின் ஒளி உருவத்தை தமக்குள்ளே தரிசிக்கின்ற யோகியர்களின் உள்ளத்திற்குள் என்றும் இடைவிடாத இறை சிந்தனையாக இருக்கின்ற ஒரு யோகமே இந்த உலகத்தில் இருக்கின்ற யோகியர்களின் ஆன்மாவிற்கு ஆதியாகிய பரமாத்மாவின் அருள் சக்தியாக கிடைக்கும். அந்த அருள் சக்தியால் உடல் மனம் ஆகிய இரண்டும் என்றும் அழியாமல் இருக்கின்ற நிலையை யோகியர்கள் பெறுவார்கள்.

பாடல் #1492

பாடல் #1492: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்சக மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதார சொதனை யானாடி சுததிகள்
மெதாதி யீரெண கலநதது விணணொளி
போதா லயததுப புலனகர ணமபுநதி
சாதா ரணஙகெட லாஞசக மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதை ஆதி ஈர் எண் கலந்தது விண் ஒளி
போத ஆலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடல் ஆம் சக மார்கமே.

பதப்பொருள்:

ஆதார (சாதனைகளின் மூலம் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும்) சோதனையால் (ஆராய்ச்சி செய்து அதன் வழியாக) நாடி (உடலுக்குள் இருக்கின்ற நாடிகளை) சுத்திகள் (சுத்தம் செய்து)
மேதை (உடல் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற மேதைக் கலை) ஆதி (முதலாகிய) ஈர் (இரண்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு கலைகளோடு) கலந்தது (கலந்தது) விண் (விண்ணில் இருக்கின்ற) ஒளி (ஒளி வடிவமான இறை சக்தியானது)
போத (அறிவின்) ஆலயத்து (ஆலயமாக இருக்கின்ற உடலுக்குள் இருக்கின்ற) புலன் (ஐந்து புலன்களும்) கரணம் (நான்கு கரணங்களும்) புந்தி (புத்தியும்)
சாதாரணம் (தங்களின் இயல்பான செயல்களை) கெடல் (இழந்து இறை நிலையை) ஆம் (பெறுவதே) சக (இறைவனோடு தோழமையாக இருக்கின்ற) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

சாதனைகளின் மூலம் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் ஆராய்ச்சி செய்து அதன் வழியாக உடலுக்குள் இருக்கின்ற நாடிகளை சுத்தம் செய்து உடல் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற மேதைக் கலை முதலாகிய பதினாறு கலைகளோடு விண்ணில் இருக்கின்ற ஒளி வடிவமான இறை சக்தியானது கலந்தது. அதன் பிறகு அறிவின் ஆலயமாக இருக்கின்ற உடலுக்குள் இருக்கின்ற ஐந்து புலன்களும் நான்கு கரணங்களும் புத்தியும் தங்களின் இயல்பான செயல்களை இழந்து இறை நிலையை பெறுவதே இறைவனோடு தோழமையாக இருக்கின்ற வழி முறையாகும்.

உயிர்களின் உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற பதினாறு கலைகள்:

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

ஐந்து புலன்கள்:

  1. கண் – பார்த்தல்
  2. காது – கேட்டல்
  3. மூக்கு – நுகர்தல்
  4. வாய் – பேசுதல்
  5. தோல் – தொடுதல்

நான்கு அந்தக்கரணங்கள்:

  1. மனம்
  2. புத்தி
  3. சித்தம்
  4. அகங்காரம்

பாடல் #1493

பாடல் #1493: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

பிணங்கி நிற்கின்றவை யெந்தையும் பின்னை
யணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருது மொருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிணஙகி நிறகினறவை யெநதையும பினனை
யணஙகி யெறிவ னயிரமன வாளாற
கணமபதி னெடடுங கருது மொருவன
வணஙகவல லானசிநதை வநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிணங்கி நிற்கின்றவை எந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே.

பதப்பொருள்:

பிணங்கி (ஒன்றோடு ஒன்று பிணைந்து) நிற்கின்றவை (தோழமையுடன் நிற்கின்றவையாகிய) எந்தையும் (எமது தந்தையாகிய இறைவனும்) பின்னை (அதனை அறிந்து கொள்ளாமல் இருக்கின்ற உயிரும்)
அணங்கி (அந்த உயிரை வருத்தக் கூடிய கர்மங்களையும்) எறிவன் (அறுத்து எறிகின்றான் இறைவன்) அயிர் (நுண்ணியமான) மன (மனம் என்கின்ற) வாளால் (கூர்மையான வாளைக் கொண்டு அவனருளால்)
கணம் (தேவ கணங்களாகிய) பதினெட்டும் (பதினெட்டு வகையான கணங்களாலும்) கருதும் (எப்போதும் எண்ணப் படுகின்ற) ஒருவன் (ஒருவனாகிய இறைவனை)
வணங்க (தமக்குள்ளேயே அறிந்து வணங்கும்) வல்லான் (வல்லமை பெற்ற சாதகரின்) சிந்தை (சிந்தைக்குள்) வந்து (அந்த இறைவன் தோழமையுடன் வந்து) நின்றானே (நின்று அருளுகின்றான்).

விளக்கம்:

தமது ஆன்மாவோடு ஒன்றாக பிணைந்து தோழமையுடன் நிற்கின்ற எமது தந்தையாகிய இறைவனை அறிந்து கொள்ளாமல் இருக்கின்ற உயிரும் அந்த உயிரை வருத்தக் கூடிய கர்மங்களையும் உயிரின் நுண்ணியமான மனம் என்கின்ற கூர்மையான வாளைக் கொண்டு தமது அருளால் அறுத்து எறிகின்றான் இறைவன். பதினெட்டு வகையான தேவ கணங்களாலும் எப்போதும் எண்ணப் படுகின்ற ஒருவனாகிய இறைவனை தமக்குள்ளேயே அறிந்து வணங்கும் வல்லமை பெற்ற சாதகரின் சிந்தைக்குள் அந்த இறைவன் தோழமையுடன் வந்து நின்று அருளுகின்றான்.

18 விதமான தேவ கணங்கள்:

  1. சுரர் – உலக இயக்கத்திற்கு உதவும் தேவ லோகத்து தேவர்கள்.
  2. சித்தர் – இறை நிலையில் இருப்பவர்கள்.
  3. அசுரர் – அசுரர்கள்.
  4. தைத்தியர் – அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்கள்.
  5. கருடர் – கருடர்கள்.
  6. கின்னரர் – நடனம் ஆடுவதில் வல்லவர்கள்.
  7. நிருதர் – அரக்கர்கள்.
  8. கிம்புருடர் – யாளி என்று அழைக்கப்படும் சிங்க முகமும் மனித உருவமும் கொண்ட கணங்கள்.
  9. காந்தர்வர் – கந்தவர்கள் (தேவர்களுக்கு அடுத்த நிலை).
  10. இயக்கர் – யட்சர்கள்.
  11. விஞ்சையர் – கலைகளில் பெரும் ஞானம் உடையவர்கள்.
  12. பூதர் – சிவனுக்கு சேவர்களாக இருக்கும் பூத கணங்கள்.
  13. பிசாசர் – கொடூரமான கோபக் குணத்துடன் வடிவமற்றவர்கள்.
  14. அந்தரர் – சுவர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்கள்.
  15. யோகர் – ரிஷிகளும் முனிவர்களும்.
  16. உரகர் – நாகர்கள்.
  17. ஆகாய வாசர் – விண்ணுலக வாசிகள்.
  18. விண்மீன் நிறைகணம் – நட்சத்திர மண்டலங்களில் நிறைந்திருக்கும் கணங்கள்.

பாடல் #1494

பாடல் #1494: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மை யினாகு
முளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வளஙகனி யொககும வளநிறத தாரககும
வளஙகனி யொபபதொர வாயமை யினாகு
முளஙகனிந துளள முகநதிருப பாரககுப
பழஙகனிந துளளெ பகுநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையின் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்கு
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே.

பதப்பொருள்:

வளம் (செழுமையாக பழுத்த) கனி (பழத்தை) ஒக்கும் (போலவே) வள (செழுமையாக) நிறத்தார்க்கும் (பிரகாசிக்கின்ற தேஜஸான உடலை பெற்று இருக்கின்ற அடியவர்களுக்கு)
வளம் (அவர்களுடைய தேகம் செழுமை பொருந்திய) கனி (பழுத்த பழத்தைப்) ஒப்பது (போல இருப்பதற்கு காரணம்) ஓர் (அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தவறாமல் கடைபிடித்த ஒரு) வாய்மையின் (வாய்மை எனும் தர்மத்தினால்) ஆகும் (ஆகும்)
உளம் (அந்த அடியவர்களது உள்ளமானது) கனிந்து (இறைவன் மேல் கொண்ட தூய்மையான அன்பினால் கனிந்து இருப்பதனாலும்) உள்ளம் (உள்ளத்தில்) உகந்து (அவர்கள் கடைபிடித்து வந்த தர்மத்தின் பயனாலும் எப்போதும் இன்பத்தோடு) இருப்பார்க்கு (இருக்கின்றவர்களுக்கு)
பழம் (நன்றாக பழுத்த பழத்திற்குள்) கனிந்து (கனிந்து இருக்கும் சுவை போலவே) உள்ளே (அவர்களின் பழுத்த பழம் போன்ற உள்ளுக்குள்) பகுந்து (சுவை போல சேர்ந்து தோழமையுடன்) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

செழுமையாக பழுத்த பழத்தை போலவே செழுமையாக பிரகாசிக்கின்ற தேஜஸான உடலை பெற்று இருக்கின்ற அடியவர்களுக்கு அவர்களுடைய தேகம் செழுமை பொருந்திய பழுத்த பழத்தைப் போல இருப்பதற்கு காரணம் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தவறாமல் கடைபிடித்த ஒரு வாய்மை எனும் தர்மத்தினால் ஆகும். அந்த அடியவர்களது உள்ளமானது இறைவன் மேல் கொண்ட தூய்மையான அன்பினால் கனிந்து இருப்பதனாலும் அவர்கள் கடைபிடித்து வந்த தர்மத்தின் பயனாலும் எப்போதும் இன்பத்தோடு இருக்கின்றார்கள். நன்றாக பழுத்த பழத்திற்குள் கனிந்து இருக்கும் சுவை போலவே அவர்களின் பழுத்த பழம் போன்ற உள்ளுக்குள் சுவை போல சேர்ந்து தோழமையுடன் நிற்கின்றான் இறைவன்.

கருத்து:

எந்த மார்க்கத்தையும் கடை பிடிக்காவிட்டாலும் சத்தியத்தையும் தர்மத்தையும் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் கடை பிடித்து வந்தால் அவர்களுக்குள் தோழமையுடன் இறைவன் எப்போதும் சேர்ந்து இருப்பான்.

பாடல் #1487

பாடல் #1487: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

மார்கஞ்சன் மார்கிகட் கட்ட வகுப்பது
மார்கஞ்சன் மார்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்கஞ்சன் மார்க மெனுநெறிவை காதோர்
மார்கஞ்சன் மார்க மதிசித்த யோகமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாரகஞசன மாரகிகட கடட வகுபபது
மாரகஞசன மாரகமெ யனறிமற றொனறிலலை
மாரகஞசன மாரக மெனுநெறிவை காதொர
மாரகஞசன மாரக மதிசிதத யொகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மார்கம் சன் மார்கிகள் கட்ட வகுப்பது
மார்கம் சன் மார்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்கம் சன் மார்கம் எனும் நெறிவை காத்தோர்
மார்கம் சன் மார்கம் அதி சித்த யோகமே.

பதப்பொருள்:

மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கிகள் (வழி முறையை கடைபிடிப்பவர்கள்) கட்ட (முறைப்படி கட்டமைத்து) வகுப்பது (வகுத்து வைத்த நெறி முறைகள்)
மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கமே (வழி முறையே) அன்றி (அல்லாமல்) மற்று (வேறு) ஒன்று (ஒன்றும்) இல்லை (இல்லை)
மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கம் (வழி முறை) எனும் (என்று சொல்லப்படும்) நெறிவை (நெறி முறையை வகுத்து வைத்த முறைப்படி) காத்தோர் (தவறாமல் காத்து கடை பிடிப்பவர்களுக்கு)
மார்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய) சன் (உண்மை) மார்கம் (வழி முறையே) அதி (மிகவும் உயர்ந்த) சித்த (சித்தத்தை / எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின் மேல் வைத்து) யோகமே (செய்கின்ற யோகமாக உண்மை வழியே இருக்கின்றது).

விளக்கம்:

தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய உண்மை வழி முறையை கடைபிடிப்பவர்கள் முறைப்படி கட்டமைத்து வகுத்து வைத்த நெறி முறைகள் அல்லாமல் வேறு ஒரு வழி முறைகளும் இல்லை. உண்மை வழி முறை என்று சொல்லப்படும் அந்த நெறி முறைகளை வகுத்து வைத்த முறைப்படி தவறாமல் காத்து கடை பிடிப்பவர்களுக்கு எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின் மேல் வைத்து செய்கின்ற மிகவும் உயர்ந்த யோகமாக அந்த உண்மை வழியே இருக்கின்றது.