பாடல் #1076

பாடல் #1076: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமு மாதியு மாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1075 இல் உள்ளபடி பதினான்கு கலைகளாகவும் இருக்கின்ற வயிரவியானவள் தான் செய்கின்ற செயல்களில் முதல் நடு கடைசி என்ற மூன்று நிலைகளிலும் பதினான்கு விதமான செயல்களையும் செய்து கொண்டு கடைசியான செயலையே முதலாகவும் ஆரம்பித்து எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றாள். இவளின் மந்திரத்தை செபிக்கும் சாதகர்களின் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலிருந்து வெளிப்பட்டு எழும்பும் மாபெரும் சக்தியாகவும் அச்சக்தியில் ஆதியாகவும் அந்தமாகவும் நிற்கின்றாள்.

பாடல் #1077

பாடல் #1077: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆகின்ற மூவரு மங்கே யடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோருக்கே.

விளக்கம்:

பாடல் #1076 இல் உள்ளபடி ஆதியும் அந்தமுமாகி நிற்கின்ற வயிரவி மந்திரத்தில் பிரம்மன் விஷ்ணு உருத்திரன் ஆகிய மூன்று தேவர்களும் அடங்கி இருக்கின்றனர். முக்தி எனும் பெரும்பயன் பெறுவதற்கு மூன்று தேவர்களும் அடங்கி இருக்கும் வயிரவி மந்திரத்தை பஞ்சபூதங்களால் ஆன அழியக்கூடிய உலகத்தைச் சார்ந்து இருக்கின்ற வாழ்க்கை முறையை விரும்பாமல் சாதகம் செய்கின்ற சாதகர்களாகவும் அவர்கள் செய்கின்ற சாதகமாகவும் செய்யப்படுகின்ற நோக்கமாகவும் இருந்து புண்ணியத்தை வயிரவி அருளுகின்றாள்.

பாடல் #1078

பாடல் #1078: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்க ளிருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் றென்னனும் ஆமே.

விளக்கம்:

பாடல் #1077 இல் உள்ளபடி வயிரவியிடம் புண்ணித்தைப் பெற்று குருவாக இருப்பவர்கள் இறைவனின் தன்மையில் இருந்து வயிரவி மந்திரத்தையும் அதைச் சொல்லும் முறையையும் அருளுவார். குரு சொன்ன முறைப்படி வயிரவி மந்திரத்தை எண்ணத்தில் வைத்து இருபத்தேழு நாட்களும் சூரிய கலை சந்திர கலை ஆகியவற்றின் மூலம் உள்ளிழுத்த மூச்சுக்காற்றால் மூலாதாரத்தில் இருக்கும் அக்னியை வளர்த்து அதை முழுவதுமாக ஆராய்ந்து அதன்படி தொடர்ந்து சிறிதும் மாறாத சிந்தனையுடன் மானசீகமாக செபித்து சாதகம் செய்து வருபவர்களின் சிந்தனையில் பேரழகுடைய சிவபெருமான் வந்து வீற்றிருப்பான்.

கருத்து: குரு கூறிய முறைப்படி வயிரவி மந்திரத்தை சாதகம் செய்யும் போது நொடிப் பொழுது நேரம் கூட இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்பவர்களின் சிந்தனையில் இறைவன் வந்து வீற்றிருப்பான்.

பாடல் #1079

பாடல் #1079: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

தென்னன் றிருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியுள பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி யந்தம் பகவனோ
டுன்னுந் திரிபுரை யோதிநின் றானுக்கே.

விளக்கம்:

திருக்கயிலாய மலையில் உலகங்கள் யாவும் போற்றி வணங்கும் மாபெரும் குருவாகவும் அனைத்திற்கும் காவலனாகவும் வீற்றிருக்கும் பேரழகுடைய சிவபெருமானுடன் திரிபுரை சக்தியாகிய அம்மையும் சேர்ந்து இருக்கின்றாள். அது போலவே வயிரவி மந்திரத்தை இடைவிடாது செபித்து வரும் சாதகர்களின் உள்ளத்தையே கயிலாய மலையாகக் கொண்டு இறைவன் வந்து வீற்றிருக்கும் போது அவனுடனே ஒன்றாகக் கலந்து திரிபுரையும் வந்து வீற்றிருப்பாள்.

பாடல் #1080

பாடல் #1080: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஓதிய நந்தி யுணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போத மிருபத் தெழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

விளக்கம்:

பாடல் #1079 இல் உள்ளபடி சாதகர்களின் உள்ளத்திற்குள் திரிபுரையோடு ஒன்றாகக் கலந்து வீற்றிருக்கும் இறைவனின் திருவருளால் தமக்குள்ளே அவரை குருவாக உணரலாம். அப்படி குருவாக உணர்ந்த இறைவனே தருமத்தின் படி தகுதியானவர்களுக்கு வேதங்களில் உள்ள முறையில் வயிரவி மந்திரத்தையும் அதை சாதகம் செய்யும் முறையையும் அருளுகின்றார். அவர் அருளிய முறையின் படி இருபத்தேழு நாட்கள் வயிரவி மந்திரத்தை சாதகம் செய்தால் அதன் சக்தி பெருகிக் கொண்டே இருந்து வயிரவியானவள் சூலம் தாங்கிய சோதி வடிவாக வந்து சாதகரை ஆட்கொள்வாள்.

பாடல் #1081

பாடல் #1081: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

சூலங் கபாலங்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரமுள நாகபா சாங்குசம்
மாலங் கயனறி யாத வடிவுக்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

விளக்கம்:

பாடல் #1080 இல் உள்ளபடி சோதி வடிவாக வந்து ஆட்கொள்கின்ற வயிரவியானவள் சூலி என்கிற பெயருடன் நான்கு கரங்களில் முறையே சூலம், கபாலம், நாக பாசாணம், அங்குசம் ஆகியவைகளை ஏந்திக்கொண்ட உருவமாக அருளுகின்றாள். இவள் திருமாலும் பிரம்மனும் அறிய முடியாத அடிமுடி காணாத பெரும் உருவமாக அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கின்றாள்.

கருத்து: வயிரவி என்பவள் சூலி என்கிற பெயருடன் இருப்பதை இப்பாடலில் உருவகிக்கலாம். அவளுடைய கைகளில் உள்ள சூலம் அடியவர்களை காப்பதையும், கபாலம் அடியவர்களின் பிறவிகளாகத் தொடரும் வினைகளை அறுப்பதையும், நாக பாசாணம் பிறவியோடு வரும் பந்தபாசங்களை அறுப்பதையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது.

பாடல் #1082

பாடல் #1082: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லிய லொப்பது காணுந் திருமேனி
பல்லிய லாடையும் பன்மணி தானே.

விளக்கம்:

பாடல் #1081 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கின்ற வயிரவி மென்மையான கொடி போன்ற இடையைக் கொண்டும், விஷம் போன்ற கடினத் தன்மையின் உருவமாகவும், கிளிமூக்கு போன்ற சிவந்த நிறமுள்ள இதழ்களைக் கொண்டும், அழகிய ஆபரணங்களை அணிந்து கொண்டும், நீலக்கல்லைப் போன்ற நீல நிறம் கொண்ட திருமேனியையும், பலவிதமான ஆடைகளை அணிந்து கொண்டும், பலவிதமான நவரத்தினங்களை சூடிக்கொண்டும் இருக்கின்றாள்.

கருத்து:

வயிரவியின் திருமேனியை இப்பாடலில் உருவகிக்கலாம். மெல்லியல் என்பது மென்மையான தன்மையைக் குறிக்கும். வஞ்சி என்பது சாதகர்களை சோதித்து அவர்களை மேன்மைப் படுத்தும் தன்மையைக் குறிக்கும். விடமி கலைஞானி என்பது உயிர்களின் வினைகளுக்கேற்ப வஞ்சித்தலும் தண்டித்தலும் செய்யும் தன்மையைக் குறிக்கும். கிஞ்சுக நிறம் என்பது சாதகர்கள் மேல் அன்பைப் பொழியும் தன்மையைக் குறிக்கும். சேயிழை, பல்லியல் ஆடை, பன்மணி ஆகிய அனைத்தும் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு இருப்பதைக் குறிக்கும். நீல நிறத்தைக் கொண்ட திருமேனி என்பது மழை போல வரங்களை அள்ளித் தருகின்ற தன்மையைக் குறிக்கும்.

பாடல் #1083

பாடல் #1083: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தாள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

விளக்கம்:

பாடல் #1082 இல் உள்ளபடி பலவிதமான நவரத்தினங்களை சூடிக்கொண்டு இருக்கின்ற வயிரவியின் திருமுடியானது கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கின்றது. அவளின் காதுகளில் மணியோசையை எழுப்பும் அழகிய குண்டலங்களை அணிந்திருக்கின்றாள். அவளின் கண்கள் அழகிய மானின் கண்களைப் போல இருக்கின்றது. சிறந்த மணிகளைப் போல பிரகாசிக்கும் சூரியனையும் சந்திரனையும் அவளின் இரு கண்களாக வைத்திருக்கின்றாள். அவளின் திருமுகம் அக்னியில் உருக்கும் தங்கம் போல் ஜொலித்துக் கொண்டு பேரானந்தத்தில் இருக்கின்றாள்.

கருத்து:

கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கும் திருமுடி என்பது அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பதைக் குறிக்கின்றது. மணியோசை எழுப்பும் குண்டலங்கள் என்பது உயிர்களுக்குள் இருக்கும் ஓங்கார நாதத்தை எழுப்புவதைக் குறிக்கின்றது. மானைப் போன்ற கண்கள் என்பது எப்போது தன்னை வந்து சரணடைவார்கள் என்று சாதகர்களைத் தேடுவதைக் குறிக்கின்றது. சூரிய சந்திர நயனத்தாள் என்பது தன்னை வந்து சரணடைய முயற்சி செய்யும் சாதகர்களுக்கு வழிகாட்டும் சோதியாக இருப்பதைக் குறிக்கின்றது. பொன்மணி வன்னி என்பது ஒளிவிடும் நெருப்புச் சுடர்போல எங்கும் நிறைந்து தன்னை நினைப்பவர்களின் மனதை மகிழ்ச்சியில் நிரப்புவதைக் குறிக்கின்றது.

பாடல் #1084

பாடல் #1084: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பூரித்த பூவித ழெட்டினுக் குள்ளேயோர்
ஆரியத் தாளுண்டங் கோரெண்மர் கன்னியர்
பாரித்த பெண்க ளறுபத்து நால்வருஞ்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

விளக்கம்:

பாடல் #1083 இல் உள்ளபடி பேரானந்தத்தில் பூரித்து இருக்கின்ற வயிரவியின் பூப்போன்ற இதழ்களிலிருந்து (வாயிலிருந்து) எட்டுவிதமான கன்னியர்கள் தோன்றி எட்டு திசைகளுக்கும் ஒவ்வொருவராக இருக்கின்றார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் எட்டுவிதமான கலைகள் தோன்றி அந்தந்த கலைகளுக்கான தேவியர்களாக மொத்தம் 64 கலைகளுக்கு 64 தேவியர்களாக இருக்கின்றார்கள். வயிரவி மந்திரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்கள் வயிரவியின் அம்சமான 64 தேவியர்களின் தரிசனத்தை கண்பார்கள்.

பாடல் #1085

பாடல் #1085: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோ டெண்டிசை தாங்கு மருட்செல்வி
புண்டரி கத்தினுள்ளும் பூசனை யாளே.

விளக்கம்:

பாடல் #1084 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த வயிரவி தனது நான்கு கைகளிலும் சிலம்பு வளையல் சங்கு சக்கரம் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு இருக்கின்றாள். அவள் இருக்கும் எட்டுத் திசைகளிலும் யோகம் செய்த யோகியர்களுக்கு இறைவியான பராசக்தியின் உருவமாக அண்டசராசரங்களையும் அதிலிருக்கும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டு இருக்கும் அருள் வடிவாக அவர்களின் நெஞ்சத்தாமரைக்குள் வீற்றிருந்து அவர்களின் பூஜையை ஏற்றுக் கொள்பவளாக இருக்கின்றாள்.

கருத்து: வயிரவி மந்திரத்தை சாதகம் செய்து 64 கலைகளுக்கான தேவியர்களை சாதகர்கள் தரிசித்தனர். அதன் பிறகு எட்டு திசைகளிலும் இருக்கும் 64 தேவியர்களுக்கும் இறைவியான பராசக்தியை யோகம் செய்தால் அவள் அருள் வடிவாக யோகியர்களின் உள்ளத்திற்குள் வந்து வீற்றிருப்பாள். இவளே யோகியர்கள் செய்கின்ற பூஜையை ஏற்றுக்கொள்பவளாக இருக்கின்றாள். யோகியர்கள் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை அடுத்த பாடலில் அருளுகின்றார்.