பாடல் #1146

பாடல் #1146: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

இருந்தனள் தன்முக மாறொடு நாலாய்ப்
பரந்தனள் வாயுத் திசைதிசை தோறுங்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேற லதோமுக மம்பே.

விளக்கம்:

பாடல் #1145 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் அனைத்து சக்கரங்களிலும் வீற்றிருக்கும் இறைவியானவள் பத்து திசைகளையும் காக்கின்ற தனது பத்து முகங்களையும் சாதகரது உடலிலுள்ள பத்து விதமான வாயுக்களுடன் சேர்ந்து அனைத்து திசைகளுக்கும் பரவிச் செல்கிறாள். அப்படி பரவிச் சென்ற சக்தியானது ஒருமுகமாக குவிந்து முத்திலிருந்து வெளிவரும் பிரகாசம் போல சாதகரின் முகத்திலிருந்து ஒளி வீசி வெளிப்படுகின்றது. இந்த நிலையை அடைந்த சாதகருக்கு அமிழ்தம் போன்ற பேரின்பத்தை தரும் இறைவனது கீழ் நோக்கும் முகம் விரைவாகக் கிடைக்கப் பெற்று பாடல் #523 இல் உள்ளபடி தமது உடலும் இந்த அண்டமும் வேறு வேறு இல்லை என்கிற நிலையை சாதகர் அடைவார்.

குறிப்பு:

இறைவனது கீழ் நோக்கும் அதோமுகம் பற்றிய விவரங்களை திருமந்திரம் இரண்டாம் தந்திரத்திலுள்ள 20 ஆவதான “அதோமுக தரிசனம்” தலைப்பில் காணவும்.

பாடல் #1147

பாடல் #1147: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அம்பன்ன கண்ணி யரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செ யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

விளக்கம்:

அம்பைப் போன்ற கூர்மையான கண்களையும் என்றும் மாறாத இளமையுடனும் இறைவனோடு சேர்ந்து இருக்கும் மனோன்மணி எனும் பெயருடனும் கொம்பைப் போல மெலிந்து வளைந்த இடையுடனும் வாசனை மிக்க மலர்களைச் சூடிய கூந்தலுடனும் இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள் முழுவதும் பரவி உலாவிக் கொண்டே இருக்கின்ற போது சாதகரின் உடலானது தூய்மையான தங்கத்தால் செய்ததைப் போல மாறி அவருக்குள்ளிருந்து நறுமணம் திரண்டு நாள் தோறும் வீசிக்கொண்டே இருக்கும். இப்படி சாதகம் செய்து வீற்றிருக்கின்ற சாதகரை அன்போடு பார்த்துக் கொண்டே இறைவியும் அவருடன் விரும்பி வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1148

பாடல் #1148: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமு மண்ட முழுதுஞ்செம் மாந்து
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

விளக்கம்:

பாடல் #1147 இல் உள்ளபடி சாதகருக்குள் விரும்பி வீற்றிருக்கும் மிகப் பெரும் தெய்வமாகிய இறைவியே நான்கு வேதங்களும் புகழ்ந்து சொல்லுகின்ற மாபெரும் சக்தியாக இருக்கின்றாள். இறைவன் இறைவி சாதகரின் ஆன்மா ஆகிய மூன்று ஜோதிகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நிற்கின்ற பூரண சக்தியாக அனைத்து திசைகளும் அவளுடைய அழகிய ஆடையாகவும் பூமியையும் கடந்து நிற்கின்ற திருவடிகளையும் கொண்டு நிற்கும் அவளை வேதங்களோடு அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களும் சிறப்பாக போற்றி வணங்குகின்றன.

பாடல் #1149

பாடல் #1149: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

புனையவல் லாள்புவ னத்திர யங்கள்
வனையவல் லாளண்ட கோடிக ளுள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே.

விளக்கம்:

பாடல் #1148 இல் உள்ளபடி மூன்று ஜோதிகளையும் ஒன்றாக சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள் மேலுலகம் பூலோகம் கீழுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்குள்ளும் கலந்து நின்று கோடிக்கணக்கான அண்ட சராசரங்களையும் அதற்குள் பல உயிர்களையும் உருவாக்கும் வல்லமை பெற்றவள். உயிர்களையும் படைத்து அந்த உயிர்களுக்கு அண்டத்தில் இருக்கும் இறைவனது பேரொளியை காட்டி அருளி உயிர்களுக்கு அந்த ஜோதியை அடையும் வழியையும் அருளுகின்றாள். இவை அனைத்தையும் செய்யும் வல்லமை பெற்ற இறைவியையே யானும் போற்றி வணங்குகின்றேன்.

பாடல் #1150

பாடல் #1150: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

போற்றியென் றாள்புவ னாபதி யம்மையென்
ஆற்றலுள் நிற்கு மருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கொள்பைந் தொடியே.

விளக்கம்:

பாடல் #1149 இல் உள்ளபடி அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவளும் உலகங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்றவளும் யான் போற்றி வணங்குகின்றவளும் அரியதான தவங்களை செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற என்றும் இளமை ஆற்றலுடன் இருப்பவளுமாகிய இறைவியை போற்றி வணங்குகின்ற உயிர்களின் ஆற்றலுக்குள் வந்து வீற்றிருந்து அவர்களின் முகத்தில் இருக்கும் நெற்றிக்குள் அழகிய ஆபரணங்களை சூடிக்கொண்டு வீற்றிருந்து அவர்களின் அகங்காரத்தை அடக்கி விட்டு பசுமையான கொடியாக இருந்து அவர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கிறாள்.

கருத்து:

உலகங்கள் அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற எமது இறைவியை போற்றி வணங்குகின்ற சாதகர்களின் நெற்றிக்குள் நீல ஜோதியாக அமர்ந்து அவர்களின் அகங்காரத்தை அடக்கி மரணமில்லா பெருவாழ்வை அளித்து ஆட்கொண்டு அருளுகின்றாள்.

பாடல் #1151

பாடல் #1151: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை யேன்றேன்
றடியார் வினைகெடுத் தாதியு மாமே.

விளக்கம்:

பாடல் #1150 இல் உள்ளபடி சாதகர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கின்ற பசுமையான கொடி போன்ற இறைவியைப் பற்றிக் கொண்டவர்களின் உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்ற அமிழ்தத்தை ஊறச் செய்து அருளுகின்ற பேரழகியான இறைவி திரிபுரை சக்தி எனும் வடிவத்தில் என்றும் இளமையுடன் இருக்கின்றாள். பலவிதமான பயத்தைக் கொடுக்கின்ற தீமையான கொடிய வினைகளை அழித்து அருள வேண்டும் என்று இறைவியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு சரணடைபவர்களை தாங்கிக் கொண்டு தமது அடியார்களான அவர்களின் தீமையான கொடிய வினைகளை முழுவதுமாக அழித்து அருளுகின்ற ஆதிப் பரம்பொருளாக இறைவி இருக்கின்றாள்.

பாடல் #1152

பாடல் #1152: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போதத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.

விளக்கம்:

மென்மையான இசையைப் போல ஒலி வடிவத்தில் இருக்கும் பேரழகுடைய இறைவி அகண்ட பரகாயத்தில் மென்மையான கொடி போல ஒளி வடிவத்தில் பரவி இருக்கின்றாள். பேரழகுடைய இறைவி கூட்டுப் பிரார்த்தனையில் பலவகையாகப் போற்றி வணங்கும் பக்தர்களின் பக்குவத்திற்கு ஏற்ப பயன்களை அருளுகின்ற பசுமையான கொடி போன்றவள். தமது அடியவர்களுக்குள் இருக்கும் பேரழகுடைய மாயையாகிய சக்தியை வெளியேற்றி துரத்திவிட்டு அருளாற்றலில் வல்லமை பொருந்திய பேரழகுடைய இறைவி அவர்களின் மனதிற்குள் புகுந்து அருளோடு வீற்றிருப்பாள்.

பாடல் #1153

பாடல் #1153: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

தாவித்த வப்பொருள் தான்அவ னெம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொருள் தாமது தானே.

விளக்கம்:

பாடல் #1152 இல் உள்ளபடி சாதகருக்குள் புகுந்து வீற்றிருக்கும் இறைவியானவள் தானே இறைவனாகவும் இருக்கின்றாள். அசையா சக்தியாகிய இறைவன் தன்னுடைய அம்சமாகவே உலகங்கள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று எண்ணிய போதே அவனுடன் சேர்ந்து அசையும் சக்தியாக இருந்த இறைவியும் மேலிருக்கும் 7 உலகங்களையும் கீழிருக்கும் 7 உலகங்களையும் அவனோடு சேர்ந்து உருவாக்கினாள். அது மட்டுமின்றி இந்த 14 உலகங்களில் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும் இறைவனின் அம்சமாக இறைவியே இருக்கின்றாள்.

மேல் ஏழு உலகங்கள்

  1. சத்ய லோகம்
  2. தப லோகம்
  3. ஜன லோகம்
  4. மகர லோகம்
  5. சுவர் லோகம்
  6. புவர் லோகம்
  7. பூலோகம்

கீழ் ஏழு உலகங்கள்

  1. அதல லோகம்
  2. விதல லோகம்
  3. சுதல லோகம்
  4. தலாதல லோகம்
  5. மகாதல லோகம்
  6. ரசாதல லோகம்
  7. பாதாள லோகம்

பாடல் #1154

பாடல் #1154: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அதுஇது வென்பா ரவளை யறியார்
கதிவர நின்றதோர் காரணங் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது வுன்னார்கள் தேர்ந்தறி யாரே.

விளக்கம்:

இறைவி இதுவாக இருக்கிறாள் அதுவாக இருக்கிறாள் என்று சொல்பவர்கள் இறைவியை பற்றி எதுவும் அறியாமல் இருக்கிறார்கள். இறைவியாக இருக்கும் முக்தியை அடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நிற்பதற்கு ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். பேரின்ப மயக்கத்தை கொடுக்கும் வாசனை மிக்க மலர்களைத் தன் கூந்தலில் சூடியிருக்கும் மாபெரும் தெய்வமாகிய இறைவி இறைவனுடன் சேர்ந்து பூரண சக்தியாக இருக்கும் மாபெரும் நிலையை எண்ணிப் பார்க்காமலும் அதைத் தமக்குள்ளேயே ஆரய்ந்து அறிந்து கொள்ளாமலும் இருக்கின்றார்கள்.

பாடல் #1075

பாடல் #1075: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பன்னிரண் டாங்கலை யாதி வயிரவி
தன்னி லகாரமு மாயையுங் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ்
சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.

விளக்கம்:

பன்னிரண்டு கலைகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வயிரவியானவள் தனக்குள் அகாரக் கலையையும் (படைத்தல்) மாயைக் கலையையும் (மறைத்தல்) சேர்த்து பதினான்கு கலைகளாகவும் அதனோடு ஆதியும் அந்தமும் சேரும் போது பதினாறு கலைகளாக முடியும். இந்த பதினாறு கலைகளை சொல்கின்ற நிலையில் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. வயிரவியாக இருக்கும் இந்த மந்திரத்தை ஓதுங்கள்.

கருத்து: வயிரவியானவள் பன்னிரண்டு விதமான சூட்சுமமான செயல்களை செய்கின்றாள். அவள் இயக்கம் பெற்று உலக செயல்களுக்காக படைத்தல் மற்றும் மறைத்தலுக்கான காரியத்தை செய்யும் போது பதினான்கு செயல்களை செய்கின்றாள். இந்த செயல்களை எடுத்து ஒலிவடிவமாக சொல்லும் போதும் ஒளிவடிவமாக எழுதும் போதும் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்தை ஓதுங்கள்.

குறிப்பு: இந்த வயிரவி மந்திரத்தை எப்படி பெற்றுத் தெரிந்து கொள்வது என்பதை பின்வரும் பாடல்களின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். வயிரவி மந்திரத்தை குருவிடமிருந்து மந்திர தீட்சையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.