பாடல் #961

பாடல் #961: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

விளக்கம்:

பாடல் #960 இல் உள்ளபடி ஒலியும் ஒளியும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து சாதகரின் மனதிற்குள் ஒருநிலைப்பட்டால் மனம் இருக்கும் புருவ மத்திக்கு மேலிருக்கும் உச்சந்தலையில் அமிர்தம் ஊறும். அந்த அமிர்தம் ஊறும் இடத்திலிருந்து உருவாகும் மந்திரமானது சாதகருக்குள் வேள்வியாக இருக்கும்.

குறிப்பு:

இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள மந்திரம் ‘ஓம் நமசிவாய’ ஆகும். இதன் குறிப்பு பாடல் #962 இல் உள்ளது.

பாடல் #962

பாடல் #962: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெற லாமே.

விளக்கம்:

பாடல் #961 இல் உள்ளபடி சாதகருக்குள் வேள்வியாக இருக்கும் ‘ஓம் நமசிவாய’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை செபிக்கும் முறை அறிந்தவர்கள் கூட அந்த ஆறு எழுத்துக்களும் ஒரு எழுத்திலேயே அடங்கியிருப்பதை அறிந்து அதை ஓதி உணராமல் இருக்கின்றார்கள். இந்த ஆறெழுத்துக்களும் அடங்கியிருக்கும் ‘ஓம்’ எனும் ஓரெழுத்தை மட்டும் வேறு எழுத்துக்கள் எதுவும் துணையின்றி ஓதி உணரக்கூடியவர்களுக்கு அந்த ஓரெழுத்தே உயிருக்குள் இருக்கும் இறைவனை உணர வைக்கும்.

குறிப்பு: ‘ஓம் நமசிவாய’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை பல கோடி முறை செபிக்கும் சாதகர்கள் அந்த ஆறெழுத்து மந்திரத்தை ஒரேழுத்து மந்திரமாக உணர்வார்கள்.

பாடல் #963

பாடல் #963: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

விளக்கம்:

பாடல் #962 இல் உள்ளபடி ‘ஓம்’ எனும் ஓரெழுத்தாக ஓதி உணரக்கூடியவர்களுக்கு அதன் உயிர்க்கலைகளாக மொத்தம் 15 எழுத்துக்கள் இருப்பதை உணர முடியும். இந்த 15 எழுத்துக்கள் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்து மந்திரமும் அதன் ஆதார எழுத்துக்களாகிய அ, இ, உ, எ, ஒ (பாடல் #927) ஆகிய ஐந்து எழுத்துக்களும் அதன் பீஜங்களாகிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் (பாடல் #912) ஆகிய ஐந்து எழுத்துக்களும் ஆகும். இந்த 15 எழுத்துக்களே மாற்றி மாற்றி எழுதப்பட்டு திருவம்பலச் சக்கரத்தில் மொத்தம் 51 எழுத்துக்களாக இருக்கின்றது (பாடல் #924). இந்த 15 எழுத்துக்களில் அ, உ இரண்டும் ஆதி எழுத்துக்களாகும். மீதியுள்ள 13 எழுத்துக்களும் சோதி எழுத்துக்களாகும். இந்த சோதி எழுத்துக்களை பீஜங்களாக்கி அவற்றின் ஒலியை உடலுக்குள் பரவச் செய்து இதன் தத்துவத்தை உணரலாம்.

பாடல் #964

பாடல் #964: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலை பதினாறு கலையதாங்
கந்தர வாகரங் காலுடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் உள்ள ஒளியைச் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒலியை எழுப்பினால் அதிலிருந்து வெளிப்படும் சக்தியானது 16 கலைகளாகப் பிரிந்து திருவம்பலச் சக்கரத்தின் தலை (மேல் பகுதி), உடல் (நடுப் பகுதி), கால் (கீழ்ப் பகுதி) என்று பல அங்கங்கங்களாக செயலாற்றுகின்றது. எப்போதும் முடிவில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சக்தி மயமே திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் 51 எழுத்துக்களாக இருக்கின்றது.

பாடல் #965

பாடல் #965: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஐம்ப தெழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத்து ஆமே.

விளக்கம்:

பாடல் #964 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவிலுள்ள கட்டத்தில் இருக்கும் ஐம்பது எழுத்துக்களுக்குள் அனைத்து வேதங்களும் ஆகமங்களும் அடங்கியுள்ளன. இதனை அறிந்து கொண்ட சாதகர்கள் ஐம்பது எழுத்துக்களும் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்குள் அடங்கிவிடுவதை உணரலாம்.

குறிப்பு: பாடல் #912 இல் உள்ளபடி உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் சாதகர்கள் திருவம்பலச் சக்கரத்திலுள்ள ஐம்பது எழுத்துக்களின் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #966

பாடல் #966: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

பாடல் #965 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தில் உணர்ந்த ஐந்தெழுத்து ‘நமசிவாய’ எனும் மந்திரத்தின் மூலம் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் இறைவன் படைத்தான். இந்த பஞ்ச பூதங்களையும் ஆதார சக்தியாக வைத்து பல அண்ட சராசரங்களையும் இறைவன் படைத்தான். ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலம் படைத்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் காக்கின்றான் இறைவன். ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலம் படைத்துக் காத்த அனைத்துமே தாமே என்பதை காட்டி நின்றான்.

பாடல் #967

பாடல் #967: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

விளக்கம்:

வினைகளில் வீழ்ந்து கிடப்பவர்கள் யாராலும் உருவாக்கப்படாத இறைவனின் திருநாமமாகிய ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தை முறைப்படி மனம் சோர்வடையாமல் ஓதிக்கொண்டிருந்தால் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் வினைகள் மற்றும் அவற்றால் உண்டாகும் துன்பங்களையும் நீக்கி அருளுவான் விரிந்த சடையணிந்த இறைவன்.

பாடல் #968

பாடல் #968: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்துஅஞ்சு மாகிநின் றானே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தை முறையாக சாதகம் செய்யும் சாதகர்கள் உண்ணும் அமிர்தமாகவும் அவர்கள் வாழும் அழிவில்லாத காலமாகவும் இசைக்கின்ற இசையாகவும், அதிலிருக்கும் கேள்வியாகவும் பாடுகின்ற பாடல்களாகவும் வாணுலகத் தேவர்களும் விரும்பி தொழுகின்ற திருவடிகளாகவும் எண்ணிலடங்காத எழுத்துக்களின் மூலமாகவும் இருப்பது ஐந்து எழுத்து ‘நமசிவாய’ எனும் மந்திரமே ஆகும்.

பாடல் #969

பாடல் #969: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஐந்தின் பெருமை அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமை யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு ஆமே.

விளக்கம்:

பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகம் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆற்றலினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைவன் இருக்கும் ஆலயங்கள் அனைத்தும் ‘நமசிவாய’ மந்திரமாகவே இருக்கின்றது. இந்த ஐந்து எழுத்து மந்திரத்தின் பெருமையே அறநெறி தவறாமல் வாழுகின்றவர்கள் வாழ்க்கைப் பாதையாக இருந்து அந்த வழியில் செல்பவர்களை என்றும் இளமையுடன் வைத்திருக்கின்றது.