மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

29-3-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீகப் பாதையில் இறைவன் திருவடி அடைய நம்முள் இருக்கும் இறைவனின் குரல் எவ்விதம் ஓர் வழிகாட்டியாக உள்ளது?

ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சிந்தனை அதாவது நமது அறிவை உபயோகித்துச் சிந்தித்து அப்பாதையில் செல்ல ஓர் அளவிற்கே இயலும். நமது அறிவினைக் கொண்டு சிந்தித்துச் செல்வது நல்லது தான். ஆனால் அது ஓர் அளவிற்குத்தான் பயன்படும். அதற்கு மேலும் செல்ல வேண்டுமானால் நமக்குள் தோன்றக்கூடிய யுக்தி (Intuition) என்பது தான் கொண்டு போக முடியும். அதாவது யுத்தி என்பது என்னவென்றால் நமக்கு உள்ளே வாழும் தெய்வத்தின் வழிகாட்டுதலே ஆகும். அந்தத் தெய்வத்தின் குரலினைக் கேட்டு அவ்வழியாக இறைவனை அடைய முடியும். அந்தத் தெய்வம் நமக்குள் எப்படிக் குரல் கொடுக்கக்கூடும் என்றால் நாம் இறைவன் மீது வைக்கும் உண்மையான முழுமையான அன்பினாலே ஆகும். ஆகவே இறைவனை அடைய நம் அறிவாற்றலால் ஓரளவிற்கு முடியும் என்றால் நமக்குள் இருக்கும் இறைவனின் வழிகாட்டுதலால் முழுமையாக அடைய முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

01-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது துயரம் எது என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும். ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி. சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும். அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #34

7-1-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சுய உடமைகள் (பொருட்கள்) இருப்பது தேவையற்றதா? அவ்வாறு சுய உடமைகள் இருப்பது தவறாகுமா?

கலிகாலத்தில் உடமைகள் இல்லாமல் வாழ்வது கடினம். இருப்பினும் நாம் ஒரு பொருளை நம் தேவைக்காக என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்பொருள் இருந்தால்தான் நம்மால் இருக்க முடியும் என்று இருக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சொத்துக்கள் இருந்தால் தவறாகாது. சொத்துக்கள் தான் அனைத்தும் என்கின்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. ஏனெனில் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் உடம்பை விட்டுச் செல்லும் போது அனைத்தையும் விட்டு விட்டே செல்ல வேண்டும். ஆத்மாவின் விடுதலைக்கும் ஆத்மாவின் முக்திக்கும் சொத்துக்கள் தேவையற்றது. இந்நிலையில் சொத்துக்களை அனுபவித்துச் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணமே இருக்க வேண்டும். பிற்காலத்தில் இதை விட்டுச் செல்ல வேண்டுமே என்று வருத்தமாக இருக்கக்கூடாது. உடமைகள் இருப்பது தவறில்லை. ஆனால் உடமைகள் இல்லாமல் வாழ முடியும் என்பதை மனதில் வைத்து ஆன்மீகப் பாதையில் சென்றால் எவ்விதத் தவறும் இல்லை. உதாரணமாக ஆன்மீகப் பாதையில் செல்வோர் தொலைபேசி உபயோகிப்பது தொலைக்காட்சி காண்பது தவறாகாது. இருப்பினும் அதனை அனுபவித்து விட்டு அது இல்லாமல் இருக்கும் போது அதனை நினைத்துக் கவலைப்படக்கூடாது என்பதே எமது அறிவுரை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #33

11-12-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: இறைவனின் அருளானது ஏன் அனைவரின் மீதும் விழவில்லை?

இறையருள் அனைவரின் மீதும் சமமாக விழுகிறது. இதை பலர் உணர்வதில்லை. வெளிச்சம் விழும் காலத்தில் நல்ல கண்ணாடி வழியாக சிறப்பாக வெளிச்சம் உண்டாகும். அழுக்காக உள்ள கண்ணாடியில் வெளிச்சம் சிறிது குறைவாக விழும். கறுப்பாக உள்ள கண்ணாடியில் வெளிச்சமே வராது. இவ்விதமே மனிதரின் நிலைமை ஆத்மா எந்த அளவிற்கு சுத்தமாக உள்ளதோ அந்த அளவிற்கே இறைவன் அருளை அவர்களால் உணர முடியும். இறைவனுக்குப் பேதங்கள் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் படைத்தது என்கின்ற போது அனைவரும் அவரின் குழந்தைகள். இத்தகைய நிலையில் ஒருவருக்கு நலம் தருவதும் மற்றவருக்குத் துன்பம் தருவதும் இல்லை. பின் ஏன் சிலருக்கு கடினம் என்றால் அவரவர் கொண்டு வந்த கர்ம மூட்டைகளின் நிலைகளே ஆகும். இந்நிலையில் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் தியானத்தின் வழியாகவும் வழிபாட்டின் வழியாகவும் தயார் செய்து கொண்டால் அருளைப் பெறுவதை உணர்வதையும் உணராமல் இருப்பதையும் பெரும் அளவில் அறிந்து கொள்ள முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #32

13-11-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பொதுவாக அனைத்தும் கர்மவிதிப்படி நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இத்தகைய கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியுமா?

உறுதியாக மாற்றிவிட முடியும். ஏன் என்றால் கர்ம விதிகள் இறைவனால் மாற்ற முடியாவிட்டால் இறைவனை விட கர்மவிதி பெரிதாகும் அல்லவா? இறைவனே பெரியவன். ஆகையால் கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியும். இத்தகைய நிலையில் சில விஷேச நாட்களில் உலக நன்மைக்காக இறைவன் கர்ம நிலைகளை மாற்றிவிட இயலும். மேலும் பொதுவாக அவரவர் தன் கர்ம விதிகளை தீர்த்தல் வேண்டும் என விதியும் உண்டு. இது மனதினால், உடலால், துயரத்தால், தவத்தால், வழிபாட்டால் எனப் பல வகையில் தீர்த்திட முடியும். நல் எண்ணம் படைத்தோர் இதனை தியானவழி பூஜை வழிகளில் தீர்த்திடுகின்றனர். இவ்விதம் இருந்த போதிலும் அவரவர் செய்த கர்மத்திற்கு ஏற்றார் போல் மன வேதனைகளும் உடல் வேதனைகளும் அவர்களைத் தொடரும். காரணம் அவரவர் தம் சுமைகளை பிறக்கும் பொழுது கொண்டு வருவதே. இது மட்டுமல்லாது அக்குறைகளை தீர்த்திட முயற்சிக்காமல் மேலும் சில கர்ம வினைகளை சேர்ப்பதே மனிதனின் நிலைக்குக் காரணம். தீவிரமான வழிபாடு தியான முறைகள் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பதோடு எதிர்பார்ப்பற்ற நிலையில் வாழ்வதும் எளிதாக கர்ம நிலைகளை மாற்றி இறைவனின் பாதம் அடைய வழி வகுக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #31

17-10-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மிக பாதையில் தடைகள் பல வருகின்றதே இறைவனை நாடத் தடைகள் ஏன் வருகின்றது?

தடைகள் என்பது பொதுவாக அனைத்திலும் வரக்கூடியது என்பதை அறிதல் வேண்டும். தடை என்றால் அத்தடைகளை மீற வேண்டும் என்பதே பொருள். தடை ஒன்று இருந்தால் அதைச் சுற்றிச் செல்லலாம். அதன் மீது தாவிச் செல்லலாம் இல்லை மாற்று வழியாகச் செல்லலாம். தடைகளை நாம் தாண்டிச் செல்ல நம் ஆன்மிக வளர்ச்சி பெருமளவில் வளரும் என்பது இதற்குப் பொருள். தடைகள் இல்லையேல் ஆன்மிகப் பாதையில் சாதனை புரியும் வாய்ப்புக்கள் கிடைக்காது என்ற ஓர் நிலையும் உள்ளது. போராடிச் செல்வதே எப்பொழுதும் நலம். அவ்விதம் போராட்டம் நடத்தும் காலங்களில் நாம் நம்முடைய குறைகளையும் நிறைகளையும் தானாக அறிவோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் செல்வதும் உண்டு. இது மட்டும் இல்லாமல் தடைகளை வெல்ல பெரியோர்களை நாடுவோம். இவ்வழியில் பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதற்காகத்தான் தடைகளை நம் வாழ்க்கையில் பலவகைகளாக அனைவரும் காண்கிறோம். குறிப்பாக ஆன்மிகப் பாதையில் தடைகள் ஓர் தடையல்ல ஓர் பிரசாதமாக காணுதல் வேண்டும். ஏனெனில் நாம் அத்தடைகளைத் தாண்டி மேலே செல்லும் போது ஆண்டவன் ஆனந்தம் கொள்கிறான். ஆனந்தத்தின் பூரிப்பால் அவன் அருள் புரிகின்றான். அந்த அருளை நாமும் பெற மேலும் மேலும் மேன்மைகள் உண்டாகும் என்பதே பொருளாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #30

20-9-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாம் வியர்வை சிந்தி உழைப்பால் கிடைக்கும் பொருளை உணவாக எடுத்துக் கொண்டால் அனைத்து தீயவைகளும் நல்வழியில் செல்லும். மற்றவர்கள் உழைப்பில் வாழ எண்ணுபவன் பெரும் மடங்கு கர்மாக்களை ஏற்றுக் கொள்கிறான். இக்காலத்தில் மற்றவர்கள் உழைப்பில் வாழ்வது ஓர் சாதாரண நிலை ஆகி விட்டது. அலுவலகங்களில் சம்பளம் கிடைக்கும் அளவிற்கு எந்த அளவிற்கு குறைவாக வேலை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு குறைவாக வேலை செய்கின்றனர். அது மட்டுமில்லாது வேகமாக வேலை செய்தால் அதிக சம்பளம் எப்படி பெறுவது என்று எண்ணுகின்றனர். பொதுவாக அவரவர் பணிகள் அவரவர்கள் செய்திட நலமாகும். இக்கால நிலையில் தன்னுடைய துணிகளைத் தானாகவே சுத்தம் செய்து தேய்த்து வைப்பது என்பது ஆகாத நிலையாக இருக்கிறது. இருப்பினும் உணவு சாப்பிட்ட பின்பு நாம் உண்ட பாத்திரத்தை நாமாகவே சுத்தம் செய்து வைக்கலாமே? இதில் தடை ஏதும் இல்லையே?

இவ்விதம் சிறு சிறு பணிகள் நாம் இயன்ற அளவிற்கு செய்து மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்தால் சர்வ நலமும் உண்டாகும். மேலும் நாம் உழைப்பால் தான் வளர முடியும் என்பதையும் இங்கு கூறுகிறோம். உழைப்பு இல்லையென்றால் வளர்ச்சி இல்லை என்பது பொது விதியாகின்றது. உழைக்காமல் இப்பொழுது வரை நன்றாகவே வாழ்ந்து வருகின்றேன் எனப் பலரும் கூறக்கூடும் இது சீராகாது. ஏனெனில் உழைப்பை உடல் உழைப்பு என்றும் மன உழைப்பு என்றும் பிரித்திட முடியும். மன உழைப்பின் காரணமாகப் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். பின்பு மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் சாப்பிடுவதும் இல்லையென்றால் இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் கோபத்தில் ஆடுவதையும் காண்கின்றோம். தாமதமாகத் தூங்காமல் உணவு உண்ட பின் ஒரு மணி நேரம் கழித்துத் தூங்கி அதிகாலை எழுந்து காரியங்கள் செய்தால் ஆரோக்கியம் தானாக உண்டாகும். அனைவரும் பிராணாயாமம் செய்து வர உடல் நோய்கள் நீங்கி அனைவருக்கும் நலம் என்று கூறுகிறோம். இவ்வார்த்தையின் பொருளில் இருந்து நீங்கள் அனைத்தும் உணரலாம். பிராணாயாமம் என்பது பிராணத்தை உள் சேகரிக்கும் முறை என்று அர்த்தம் ஆகின்றது. இப்பூத உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பே இந்தப் பிராணன்தான் என அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில் பிராணத்துடன் பிராணன் உள் செல்வதையும் வெளி செல்வதையும் கூர்ந்து கவனித்துத் தியான முறையாக மாற்றிக் கொண்டால் விரைவில் நலன்கள் அனைத்தும் காணலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #29

23-8-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: நாமஸ்மரணம் (இறைவனின் நாமங்களை நினைத்து உச்சரித்து தியானிப்பது) என்பது எக்காலத்திலும் செய்யக் கூடியதா?

நாமஸ்மரணனத்திற்கு எவ்வித கால ஒதுக்கீடும் இல்லை என்றும் சதா நாமமாகவும் சதா மந்திரமாகவும் (எப்பொழுதும்) கூறக்கூடியது. இது எங்கும் எந்த வேலை செய்யும் காலத்திலும் கூறக்கூடியது என்றும் இங்கு எடுத்துரைப்போம். இதற்கு எவ்வித விதி விலக்கும் இல்லை.

கேள்வி: நாம் ஆலயத்திற்கு இறைவனிடம் செல்லும் காலத்தில் நம்மை மனதாலும், உடம்பாலும், தூய்மையாக்கிக் கொண்டு செல்லுதல் வேண்டுமா? இது கட்டாயமா?

பொதுவாக இறை நாட்டம் செல்லும் போது ஆலயம் பூஜை அறை செல்லும் போது உடலை சுத்தப் படுத்துவதோடு மன நிலையையும் சுத்தமாக வைத்துக் கொண்டு செல்லுதல் வேண்டும் என்பது நலம் தருவதாகும். இருப்பினும் இறை பாதையில் செல்ல நாம் முதன்மையில் உடலை தூய்மையாக்கிச் செல்லுதல் வேண்டும் என்பது விதியில்லை. ஏனெனில் நாம் எவ்விதம் இருக்கின்றோமோ அந்நிலையில் சரணடைவதே முக்கியமாகும். இவ்விதம் தாயே அப்பனே என்று சரணடைந்து விட்டால் அவர்கள் நம்மை சுத்தப்படுத்தி அனுப்புவார்கள். ஓர் குழந்தையை தாய் சுத்தப் படுத்துவது கடமை என்கின்றபோது இறைவன் உலகத்திலுள்ள எல்லா தாயையும் விட மேன்மையானவன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #28

27-7-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: முற்பிறவியில் சென்றது இப்பிறவியில் பாதிப்பது ஏன்? முற்பிறவியில் சென்றதை மறந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்களே அவ்வாறு மறந்தால் முற்பிறவியில் நாம் செய்த கர்மா குறையும் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது உண்மையா?

அன்பரே நன்றாக சிந்திக்க வேண்டும். அன்று விதைத்தது இன்று பயிராக நிற்கின்றது. விதைத்தது மறந்து நின்றால் பயிரானது இறையருள் இருந்தால் வளர்ந்து நிற்கும் இறையருள் இல்லையேல் காய்ந்து போகும். சென்ற பிறவியே இப்பிறவியையும் வரும் பிறவியையும் முடிவு செய்யும். வினையைத் தாங்கும் சக்தி நம்முடன் இருத்தல் வேண்டும். அந்த வினையைத் தாங்கும் சக்தியைப் பெற இறைவன் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். இப்பிறவியில் முன்பிறவியை நாம் மறந்து விடுகின்றோம். இப்போது நடப்பது முற்பிறவியின் வினையாலே என உணர்ந்தால் இறைவன் அருளால் அனைத்தும் சமமாகும். இறப்பதும் பிறப்பதும் இறைவன் விதியே. கர்மவிதியால் அவ்விதிப்படி நம் வாழ்வு முறை அமைகிறது. கர்மத்தை இறைவன் மாற்ற முடியாது என்பது பொது விதி. இருப்பினும் இறைவனின் அருளை முழுமையாகப் பெற்றால் இறைவன் அவ்வாறு நினைத்தால் உங்கள் விதியை மாற்ற முடியும். இந்த உணர்வோடு இறைவன் திருவடியை நாடுங்கள் இந்த உணர்வோடு சரணடையுங்கள். இந்த உணர்வோடு திருவடி பணிந்திட நல்வழி நல்மார்க்கம் நல்மாற்றம் உண்டு.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #27

2-6-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிறவிதனை அறுக்கும் திறனை அளிக்க வல்லான் ஒருவனே அவனும் எம்பிரான் ஒருவனே என்றும் அனைவருக்கும் எடுத்துரைத்தோமே. இதற்குரிய வழிகளை எம்பிரான் அருளால் திருமந்திரத்தில் உரைத்துள்ளோம். இதனைக் கைப்பற்றியோர் இஜ்ஜென்மத்திற்குள்ளாகவே பிறவி இல்லா நிலை அடையக்கூடும். சீவன் (உயிர்) முக்தர்களாக நிலவக்கூடும் என்றும் கூறுவோமே.

நாகரீக காலங்களில் இவையாவும் இயலுமோ? என ஓர் வினாவும் கேட்டோம். உறுதியாக இயலும் என்பது மட்டுமல்லாது இந்நகரில் பலப்பல ஜீவன் முக்தர்கள் நடமாடுகின்றனர் என்பதும் மட்டுமல்லாது பலர் அவதாரம் எடுத்தும் நடமாடுகின்றனர். இவையாவும் கலி முடியும் முன்னதாக வாசியை கைப்பற்றுகின்றோரையும் சிவநெறியைக் கடைபிடிக்கின்றோரையும் கலிதனின் கொடுமையிலிருந்து மீட்கவே பிரளயத்திலிருந்து காக்கவே என்றும் இங்கு எடுத்துரைத்தோமே.