பாடல் #427: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)
நித்தசங் காரங் கருஇடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்கு
உய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.
விளக்கம்:
உலகத்தில் பிறவி எடுக்க தாய் வயிற்றில் கருவாகப் பிறந்த அனைத்து உயிர்களுமே தங்களின் வினைப் பயனாகிய துன்பங்களையும் சேர்த்துக் கொண்டுதான் பிறக்கின்றன. இறைவனது கருணையினால் அந்த துன்பங்கள் சிறிது நேரமாவது நீங்கித் தம்மை மறந்து உயிர்கள் இருக்கும் தூக்க நிலை தினமும் நிகழும் நித்த சங்காரமாகும். உடலை விட்டு உயிர் பிரிந்து ஆன்மா மட்டுமே இருக்கின்ற நிலை சுத்த சங்காரமாகும் ஸ்தூல உடலும் சூட்சும உடலும் பிரிந்து இருக்கும் கனவு நிலையில் ஆன்மா மாயையிலேயே மூழ்கி கேவலப்பட்டு இருக்கின்ற நிலை வைத்த சங்காரமாகும். வினைகளையெல்லாம் தீர்த்துவிட்ட உயிர் ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சூட்சும உடலும் அழிந்து தனித்தன்மையோடு இருந்த ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே இரண்டறக் கலந்துவிடும் போது நான் எனும் தனித்தன்மை முற்றிலும் அழிந்து சிவமாக மாறும் நிலை உய்த்த சங்காரமாகும்.