பிறப்பு இறப்பு இல்லாதவனும் நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் இறைவனை ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.
சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன். ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களை அளவோடு வைத்தவன். இந்த உலகங்களில் உயிர்கள் பிறக்க வேண்டி உடலை அளவோடு வைத்தவன். அந்த உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தவன். சொல்லப்பட்ட இந்தத் திருமந்திரத்தின் பொருளை வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல முடிகண்டன் என்றயன் பொய்மொழிந் தானே.
விளக்கம்:
தமக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் திருமாலும் வாதிட்டுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு மாபெரும் நெருப்புத் தூணாக நின்று இத்தூணின் அடியையோ அல்லது உச்சியையோ காண்பவரே பெரியவர் என்று அறிவித்தார். பிரம்மன் பறந்து உச்சியைக் கண்டுவிடலாம் என்று நினைத்து அன்னப் பறவையாக பறந்து சென்றார். திருமால் பூமியைக் குடைந்து அடியை கண்டுவிடலாம் என்று நினைத்து பன்றியாக குடைந்து சென்றார். இருவரும் தங்கள் எண்ணப்படி அடியையும் உச்சியையும் காணாமல் பூமியின் மேல் வந்து நின்ற அடியைக் காண முடியவில்லை என்று திருமால் ஒப்புக்கொண்டார். பிரம்மன் உச்சியைக் கண்டுவிட்டேன் என்று பொய் கூறினான்.
உள் விளக்கம்:
இந்தப் பாடலில் திருமூலர் ஒரு புராணக் கதையை சித்தரிப்பது போல இருந்தாலும் இறைவனின் திருவடிகளை கண்டு அவன் திருவடிகளின்கீழ் இருப்பதே பேரின்பம் என்பதை அனுபவத்தில் கண்டு அறிந்த திருமூலர் (பாடல் #82 இல் கூறியபடி) அந்தப் பேரின்பத்தை அனைவரும் அடையும் வழியாகவே திருமந்திரத்தை வழங்கினோம் என்பதையே இங்கு உணர்த்துகிறார்.
காளையும் (இடபம்) மானும் மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவனின் கற்பனையிலிருந்து (எண்ணத்திலிருந்து) தோன்றியதே இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும். அப்படிப்பட்ட இறைவன் என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி அடியவன் என் தலைமேல் தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து ஆகமங்கள் அனைத்தையும் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.
உணர்வினால் அறியப்பட வேண்டிய இறைவனையும் அந்த இறைவனை அறிந்து கொள்ளும் அறிவைக் கொடுக்கும் ஞானத்தையும் உயிருக்குள் ஆன்மாக இருக்கும் இறைவனையும் அந்த ஆன்மாவை அறியவிடாமல் தடுக்கும் மாயையும் அந்த மாயையை ஆளும் சிவத்தையும் இந்த சிவத்திலிருந்து வரும் சக்தியையும் சிவமும் சக்தியும் சேர்ந்த சதாசிவமூர்த்தியையும் தனக்குள்ளே உணர்ந்து இறைவனை அடையும் வழிகளான ஓலி ஓளி தத்துவங்கள் அனைத்தையும் விளக்கி யாம் வழங்கியதே இந்தத் திருமந்திர மாலை.
ஆகம வேதப் பொருளை விளக்கி அருளிய குருநாதன் பரம்பொருள் எனப்படும் உண்மையான ஞானத்தின் ஜோதி வடிவானவன். அளவிடமுடியாத பெருமைகளைக் கொண்டவன். ஆனந்த வடிவானவன். மும்மலங்களையும் அறுக்கும் ஆனந்த நடனத்தை ஆடும் கூத்தன். அப்பேர்பட்ட இறைவன் சொன்ன சொல்லைக் கட்டளையாக ஏற்று அதன்படியே நானும் அரும்பெரும் வளங்கள் நிறைந்த திருக்கயிலாய வழியில் இந்த உலகம் தேடி வந்தேன்.
குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன். அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன். அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன். அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.
விளக்கம்:
இறைவன் வழங்கிய ஆகமங்கள் எவ்வளவு என்று எண்ணமுடியாத அளவு பல கோடிகளாக இருக்க அந்த ஆகமங்களின் அடிப்படை மூலப் பொருளாக வீற்றிருக்கும் இறைவனே உயிர்களின் உடலுக்குள் சூரியனும் சந்திரனும் அழகான ஒளி வீசுவதுபோல உருக்கிய பொன் போன்ற ஒளிக்கதிராக வீசிக்கொண்டு இருக்கின்றான்.
நந்தி எனும் பெயர் கொண்ட இறைவனை எனது நெஞ்சத்துள் வைத்து இரவு பகல் பாராமல் எப்போதும் அவனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓங்கி நிற்கும் ஜோதி வடிவான எம்பெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பேன். எவரும் ஏற்றி வைக்காமல் இயல்பாகவே ஒளிரும் மாபெரும் ஜோதியே நான் வணங்கும் இறைவன் ஆவான்.
இறைவனே குருவாய் நந்தி தேவராக வந்து உண்மைப் பொருளை உபதேசித்து அருள் பெற்று நாதர் என்று பெயர் பெற்றவர்கள் யாரெனில் சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனற்குமாரர் ஆகிய நான்கு பேரும் சிவயோகத்தில் சிறந்து இருந்ததால் சிவயோக மாமுனிவர் என்று பெயர் பெற்றவரும் தில்லையில் வந்து இறைவனின் திருநடனத்தைக் கண்டுகளித்த ஆதிசேஷனின் அவதாரமான பாதி மனித உருவமும் பாதி பாம்பு உருவமும் கொண்ட பதஞ்சலி முனிவரும் தன் இடைவிடாத தவத்திற்காக இறைவனிடமிருந்து புலியின் கால்களைப் பெற்றதால் வியாக்கிரமபாதர் என்று பெயர் பெற்றவரும் திருமூலனாகிய யானும் சேர்ந்து மொத்தம் எட்டு பேர்கள் ஆவார்கள்.