பாடல் #192

பாடல் #192: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறு மதனைப் பெரிதுணர்ந் தாரில்லை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

விளக்கம்:

பட்டு நூலை சிக்கல் எடுத்து கரை வைத்து அழகு கூட்டி கண்ணும் கருத்துமாக நெய்த பட்டாடைகூட நாளாக நாளாக நைந்து ஒரு நாள் கிழிந்து போய்விடும் என்பதை உணராமல் தாம் வாங்கும் பட்டாடை எப்போதும் இருக்கும் என்று எண்ணுகின்றனர் மக்கள். நாட்கள் சென்று கொண்டிருப்பதையும் தமக்கு வயது கூடி கிழப்பருவம் வருகின்றது என்பதையும் கருப்பாக இருந்த கூந்தல் வெள்ளையாக மாறுவதையும் உணர்ந்து கொள்ளாமல் சூரியன் மறைந்து தோன்றுவதற்கு ஒரு நாள் என்று கூறும் உயிர்கள் அது குறிப்பால் தமக்கும் வாழ் நாளைக் குறைத்துக் கொண்டிருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.

பாடல் #193

பாடல் #193: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

விளக்கம்:

ஒரு பானை அரிசி கரண்டி உள்ளது. இந்த மூன்றையும் வைத்து சோறு சமைக்க அடுப்பில் வைத்து அடுப்பினடியில் ஐந்து விறகுகளை வைத்து எரிக்க வேண்டும். விறகுகள் எரிய பதம்பார்த்துச் சமைக்கப்பட்ட அரிசி சோறாக மாறி உடலை வளர்க்கும் உணவாகின்றது. இதுபோலவே அழிகின்ற இந்த உடலுக்குள் அழிவைத்தராத ஒரு அரிசி இருக்கின்றது. எப்படி எனில் தியானத்தின் வழியாக உடம்பாகிய பானையில் இடகலை பிங்கலை என்கின்ற கரண்டியை வைத்து உபயோகித்து மூச்சுக்காற்றாகிய அரிசியை விறகுகளாகிய பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (மலக்காற்று), சமானன் (நிரவுக்காற்று), உதானன் (ஒலிக்காற்று), வியானன் (தொழிற்காற்று) வைத்து சமைத்தால் மூச்சுக்காற்று சுழுமுனை வழியே மேலெழும்பி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதமாகிய சோறாக மாறும் அந்த அமுதமாகிய சோறானது உயிரை வளர்க்கும் உணவு. அந்த உணவைத் தொடர்ந்து உண்டு வருகின்ற உயிரானது அது இருக்கும் உடலுக்குக் கொடுக்கப் பட்ட காலங்கள் முடிந்தபோதும் அழிந்துவிடாமல் தொடர்ந்து மேலும் வாழ்ந்து இறைவனை தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே இருக்கும்.

கருத்து: உடம்பில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலங்கள் முடியும் வரை மட்டுமே உயிர் வாழ்ந்து அது முடிந்ததும் உடல் அழியக்கூடியவை. உடல் அழியாமல் வைத்து இறைவனை அடைய வேண்டுமெனில் மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதம் பெற்று அதைப் பருகி இருக்கும் உடலிலேயே உயிரை வைத்து இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.

பாடல் #194

பாடல் #194: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

இன்புறு வண்டங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்தினுள்நில் லானே.

விளக்கம்:

இனிமையான தேனைச் சுவைக்க ஆசைகொண்ட வண்டுகள் அந்த இனிமையான தேனைத் தன் மகரந்தத்திற்குள் வைத்திருக்கும் தேன் இன மலர்களை அவற்றின் வாசனையின் மூலம் கண்டு பிடித்து அவற்றின் மேல் போய் உட்கார்ந்து அதன் மகரந்தத்திற்கு உள்ளிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பம் அடையும். அதுபோலவே உடலுக்குள் உயிராக நிற்கும் இறைவனை அறிய விரும்பாமல் உலகத்து ஆசைகளை அனுபவிக்க ஆசைப்படும் உயிர்கள் அந்த ஆசைகளை அனுபவிக்கும் வழிகளைத் தேடிச் சென்று வினைக் காரியங்களை செய்து அனுபவித்து சிற்றின்பம் அடையும். பகலில் காட்சிகளைக் காட்டும் சூரிய ஒளியாகவும் இரவில் காட்சிகளைக் காட்டும் சந்திர ஒளியாகவும் பகலிலும் இரவிலும் காட்சிகளைக் காணும் கண்ணின் ஒளியாகவும் இருக்கின்ற இறைவன், உலக இன்பத்தில் திளைத்திருக்க விரும்பும் உயிர்கள் காணும் காட்சியில் இருப்பானே தவிர அவர்களின் உணர்வுகளில் இருக்க மாட்டான்.

பாடல் #195

பாடல் #195: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லாருக்கே.

விளக்கம்:

உலகத்து உயிர்கள் மீண்டும் உலகத்தில் மனிதராக பிறக்கவேண்டும் என்றாலே அதற்கு பல நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும். மீண்டும் உலகில் மனிதராகப் பிறக்க வேண்டுமானால் பல நல்ல காரியங்களைச் செய்து மற்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். இந்தப் பிறவியே போதும் இனிமேல் பிறவி வேண்டாம் இறைவனை அடைந்து முக்தி பெற வேண்டும் என்றால் அதற்கு இறைவனை நாடி அவனை எண்ணத்தில் எப்போதும் வைத்துப் போற்றி வழிபடுங்கள். நல்ல அறங்களைச் செய்து இந்த பிறவியில் சிறந்த மனிதப் பிறப்பை எடுத்தவர்களுக்கு இந்த இரண்டு விதிகளைத் தவிர மிகவும் சிறப்பாக சொல்வதற்கு வேறு விதிகள் இல்லை.

பாடல் #196

பாடல் #196: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக்கொ டுஉண்மின் தலைப்பட்ட போதே.

விளக்கம்:

பொய்யும் புரட்டும் பேசி அறவழிகளை அழிக்காதீர்கள். பொறாமையும் கோபமும் கொண்டு பிறரின் பொருட்களைப் பிடுங்கிக் கொள்ளாமல் இருங்கள். எண்ணமும் செயலும் சிறப்புடையவராக மாறி வாழ்வு சிறந்திருக்கும் போது உணவு உண்ணும்போது யாராவது வந்து பசிக்கிறது என்றால் ஒரு கைப்பிடி அளவாவது உணவை அவருக்கு அளித்தபின் உண்ணுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால் உடல் அழிந்து உயிர் பிரிந்தாலும் இறைவனை அடைந்து பேரின்பம் அடையலாம்.

பாடல் #177

பாடல் #177: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.

விளக்கம்:

தினமும் காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் விழுந்து மறைந்து விடுவதைக் கண்டும் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளாத உயிர்கள் கண்கள் இருந்தும் உண்மையைக் காணாத குருடர்களே. பசுமாடு ஈன்ற குழந்தையாக மண்ணில் வந்த கன்றுக்குட்டியும் சில நாட்களில் எருதாக மாறுவதும் பின்னர் அது முதுமையடைந்து இறந்து விழுவதையும் கண்டுகொண்ட பிறகும் தமக்கும் அதுபோல ஒரு நாள் இளமை நீங்கி முதுமை வந்துவிடும் என்கின்ற உண்மையை உணராத மூடர்களாக உலகத்து உயிர்கள் இருப்பது மிகவும் வியப்புக்கு உரியதே.

பாடல் #178

பாடல் #178: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்தறிவா ரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடருமறி யாரே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்து பல ஆண்டுகள் உலகத்தில் கழித்தாலும் இறைவனைப் பற்றிக்கொண்டு அவனைத் தமது ஆன்மாவிற்குள் புகுந்து உணர்ந்து அறிபவர்கள் யாரும் இல்லை. எரிகின்ற தீபச் சுடரை எத்தனை காலங்கள் தூண்டு கோலால் திரிநூலை நீட்டி நீட்டி எரிய வைத்தாலும் திரிநூல் தீர்ந்தபின் விளக்கு அணைந்து போகும் என்கின்ற உண்மையை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். திரி போன்ற உடலின் உள்ளே தீபம் போல் இருக்கும் உயிர் பிறந்து வளர வளர எரியும் தீபத்தின் திரிநூல் தீர்ந்துவிடுவதுபோல உடலும் இளமை மாறி முதுமை கூடி ஒரு நாள் அழிந்து போய்விடும்.

கருத்து : உடல் என்றும் இளமையுடன் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து உயிர் பிரிந்து போவதற்குள் இருக்கும் காலத்தில் என்றும் நிலைத்திருக்கும் இறைவனைத் தமக்குள் உணர்ந்து அவனுடன் பேரின்பத்தில் இணைந்து எப்போதும் நிலைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாடல் #179

பாடல் #179: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துஉற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்து வளர வளர உடலும் தேய்ந்து இளமை மாறி முதுமை வந்து ஒரு நாள் இறந்தும் போகின்ற இயற்கையின் விதிகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு அறிந்துகொண்ட பின்பு பாய்ந்து வரும் கங்கையைத் தன் திருமுடியில் சூடிக்கொண்டிருக்கும் இறைவனே என்றும் நிரந்தரமானவன் என்பதை உணர்ந்து அவனைச் சென்று அடையத் தேவையான பல அரிய தவங்களையும் தியானங்களையும் குருநாதர் மூலம் கற்றுக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி அந்த அரிய செயல்களை உயிர் உடலில் இருக்கும்போதே செய்து இறைவனைச் சென்றடையுங்கள்.

பாடல் #180

பாடல் #180: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தனே.

விளக்கம்:

ஆண்களின் உடல் முன்பு இளமையாக இருந்த காலங்களில் மென்மையான இயல்புடைய பெண்கள் கரும்பை உடைத்து அதன் அடிக்கரும்பிலிருந்து எடுக்கும் சாறு போன்ற இனிப்பாக நினைத்து விரும்பினார்கள். பூக்களின் அரும்பு போன்ற மென்மையான மார்புகளும் ஆலமரத்தின் இலை போன்ற இடையையும் உடைய இந்தப் பெண்களுக்கு இப்போது வயதாகி வலுவிழந்து சுருங்கி இருக்கும் ஆண்களின் உடம்பு எட்டிக் காய் போல கசக்கிறது. அவர்களுக்கு முன்பு கரும்புச் சாறு போல இனித்ததும் இன்று எட்டிக் காய் போல கசப்பதும் ஒரே உடல்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கருத்து : நிலையில்லாத இந்த இளமையான உடலில் கிடைக்கும் சிற்றின்பத்தில் மூழ்கிவிடாமல் என்றும் நிரந்தரமான இறைவனால் கிடைக்கும் பேரின்பத்திலேயே மூழ்கி இருங்கள்.

பாடல் #181

பாடல் #181: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

விளக்கம்:

குழந்தை இளைஞன் வயோதிகன் என்று காலம் கழியக் கழிய உடல் மாறுவதைக் கண்டும் அதன் உண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் உலகத்தவர்கள். உலகத்தையும் தாண்டி அண்டங்கள் அனைத்திலும் கலந்து இருப்பவனும் அதிலே தோன்றுபவை அனைத்தையும் ஒரு நாள் அழித்து ஆட்கொள்பவனுமான இறைவனின் திருவடிகளின் கீழே எத்தனைக் காலங்கள் ஆனாலும் கிடந்து இருப்பதையே நான் விரும்புகின்றேன்.

கருத்து: உயிர்களின் உடல் காலம் செல்லச் செல்ல மாறி அழியக்கூடியது. அப்படி அழியும் உடலின் ஆசை வைக்காமல் என்றும் அழியாமல் எங்கும் வியாபித்து இருக்கும் இறைவனின் திருவடிகளில் சென்றடைந்து பேரின்பத்தில் கிடப்பதன் மேல் ஆசை வைக்க வேண்டும்.