பாடல் #67

பாடல் #67: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரும் ஆமே.

விளக்கம்:

இறைவனே குருவாய் நந்தி தேவராக வந்து உண்மைப் பொருளை உபதேசித்து அருள் பெற்று நாதர் என்று பெயர் பெற்றவர்கள் யாரெனில் சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனற்குமாரர் ஆகிய நான்கு பேரும் சிவயோகத்தில் சிறந்து இருந்ததால் சிவயோக மாமுனிவர் என்று பெயர் பெற்றவரும் தில்லையில் வந்து இறைவனின் திருநடனத்தைக் கண்டுகளித்த ஆதிசேஷனின் அவதாரமான பாதி மனித உருவமும் பாதி பாம்பு உருவமும் கொண்ட பதஞ்சலி முனிவரும் தன் இடைவிடாத தவத்திற்காக இறைவனிடமிருந்து புலியின் கால்களைப் பெற்றதால் வியாக்கிரமபாதர் என்று பெயர் பெற்றவரும் திருமூலனாகிய யானும் சேர்ந்து மொத்தம் எட்டு பேர்கள் ஆவார்கள்.

பாடல் #68

பாடல் #68: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

விளக்கம்:

குருநாதராகிய நந்தியாகிய இறைவனின் அருளினால்தான் யாம் நாதர் என்ற பெயர் பெற்றோம். நந்தியின் அருளினால்தான் இறந்து கிடந்த இடையனாகிய மூலனைக் கண்டு அழுதுகொண்டிருந்த பசுக்களின்மேல் இரக்கம் கொண்டு அவனின் உடலில் புகுந்தோம். நந்தியின் அருள் இல்லாவிட்டால் இந்த நாட்டின் என்ன செய்துவிட முடியும்? நந்தியின் அருளினால்தான் அவர் காட்டிய வழியின் படியே நானும் இருந்தேன்.

பாடல் #69

பாடல் #69: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

விளக்கம்:

இறைவனே குருநாதராக இருந்து அருளிய மந்திரங்களைப் பெற்ற எம்மிடம் சீடர்களாக இருந்து அந்த மந்திரங்களைப் பெற்ற குருவழிமுறையில் வந்தவர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி நாதன், கஞ்ச மலையன் ஆகிய ஏழு பேர்கள். இவர்கள் ஏழு பேரும் என்வழியில் வந்தவர்கள் ஆவார்கள்.

பாடல் #70

பாடல் #70: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

விளக்கம்:

எம்மிடம் சீடராக இருந்து மந்திரம் பெற்ற ஏழு பேர்களில் முதல் நால்வராகிய இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன் ஆகிய நான்கு பேர்களும், திசைக்கு ஒருவராய் நான்கு திசைகளுக்கும் நாதர்களாக இருந்து, குருவிடம் பெற்ற மந்திரத்துடன் அவர்களின் இறையனுபவமும், இறைவனின் அருளும் சேர்த்து பெற்ற அருளையெல்லாம் மற்றவர்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டுமென்று, அவர்கள் நால்வரும் தேவர்களாகவும், மற்றவர்களுக்கு குருநாதர்களாகவும் ஆனார்கள்.

பாடல் #71

பாடல் #71: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

விளக்கம்:

எம்மிடம் சீடர்களாக இருந்த ஏழு பேர்களுக்கும் எம்முள் இருந்து எம்மூலமாக மந்திரங்களை வழங்கியது இறைவனே. அவன் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமையை உடையவன். சூரியனின் ஒளி தோன்றுவதற்கு முன்பிருந்து எப்போதும் மாபெரும் ஒளியாக இருப்பவன் அவன். அவனுடைய பெருமைகளை அவன் அருளின்றி யாரிடமிருந்தும் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே நாம் இறைவன் அருள் பெற்ற குருநாதர்களின் மூலம் இறைவனின் தன்மைகளையும் அவனை அடையும் வழிகளையும் தெரிந்து கொண்டு அவன் அருள் பெற்று அவனை அடையலாம்.

பாடல் #72

பாடல் #72: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

விளக்கம்:

ஏழு கடல்களும் பொங்கியெழுந்து ஏழு மேகங்களும் மும்மாரி மழையைப் பொழிந்து எட்டுத் திசைகளும் நீரால் நிரம்பினாலும் (நீரினால் வரும் ஊழிக்காலப் பேரழிவு வந்தாலும்) பிறப்புக்கு உயர்வைத் தருகின்ற தன்மையுடைய நியமங்களைச் (நல் அறங்கள்) செய்துகொண்டே இருங்கள் என்று அனைத்தையும் பாதுகாத்து அருளுபவனும் சிவப்பான தன்மையுடைய பவளம் போன்ற மேனியை உடையவனும் குளிர்கொண்ட மேகம் போன்ற தன்மையுடைய விரிந்த சடையை உடையவனுமான இறைவன் தன் திருவடியைப் பணிந்து தொழுத நான்கு சனகாதி முனிவர்களுக்கும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) அருளினான்.