பாடல் #1013

பாடல் #1013: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

நமவது வாசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற வாதி நாடுவது அன்றாஞ்
சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

விளக்கம்:

உயிர்களின் ஆன்மா தன் ஆசைகளினால் நான் எனும் அகங்கார மாயையோடு பல பிறவி எடுக்கிறது. ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தாமாகவே மறைந்து இருக்கின்றான். சாதகர்கள் பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ளபடி அருச்சினை செய்து நான் எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும் போது அன்றே எண்ணங்களே அற்ற நிலையை பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறாகும்.

பாடல் #1014

பாடல் #1014: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

தெளிவரு நாளிற் சிவஅமு தூறும்
ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங்
ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.

விளக்கம்:

பாடல் #1013 இல் உள்ளபடி உண்மையான வீடுபெற்றை பெற்ற சாதகரின் உடலுக்குள் சிவ அமுது ஊறி தலை உச்சிக்குச் சென்றவுடன் பேரொளி தோன்றி உடலை சுற்றியுள்ள எட்டு தத்துவங்களும் விலகும். அப்படி தோன்றிய பேரொளியை ஒலியாகவும் ஒளியாகவும் தரிசித்தால் பரவெளியில் வீற்றிருக்கும் இறைவன் தமக்குள்ளிருந்து வெளிப்படுவான்.

எட்டு தத்துவங்கள்:

பாடல் #460 இல் உள்ளபடி உயிர்கள் உருவாகும் போது அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வினைப் பயன்களால் வரும் கன்மத்துடன் (மும்மலங்களில் ஒன்று) மாயேயம் என்கிற அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் (காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை) சேர்ந்து மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே எட்டு தத்துவங்களாகும்.