பாடல் #313

பாடல் #313: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கில்லேன் வினைத்துயர் ஆக்கு மயலானேன்
கல்லேன் அரன்நெறி அறியா தகையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

விளக்கம்:

சிவநெறியைக் கல்லாமல் இறைவுணர்வை அறிய ஆற்றல் இல்லாத உயிர்கள் மாயையில் மயங்கி வினைப் பயனால் கிடக்கும் துன்பங்களை மேலும் மேலும் உருவாக்கி அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள். உலகத்தில் இருக்கும் அனைத்து பொருள்களையும் கொடுத்து அப்பொருளாகவே இருக்கும் இறைவன் தனக்குள்ளும் இருக்கின்றான் என்று தெரியாமல் நாட்களை வீணாகக் கழித்துக்கொண்டு உலக இன்பங்களிலேயே இருந்து ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.

பாடல் #314

பாடல் #314: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

நில்லாது சீவன் நிலையன்றுஎன் றெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லாத வினைத்துயர் போகஞ்செய் வாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தை கற்றவர்கள் உயிரோடு கூடிய உடல் என்றும் நிலையானது இல்லை என்று உணர்ந்து தம்மால் முடிந்த அளவு அற வழியிலும் தவ வழியிலும் சென்று இறைவனை அடைய முயற்சிக்கின்றனர். உண்மையான ஞானத்தை கற்றுக்கொள்ளாத உயிரோடு கூடிய உடல் உலக வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டு கொடுமையான வினையின் பயனால் வரும் துன்பங்களையே அனுபவித்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்குகின்றனர்.

பாடல் #315

பாடல் #315: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணிலி எழுதி இளைத்துவிட் டாரே.

விளக்கம்:

வானவெளியில் உள்ளே இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும் இறைவன் அவர்களின் கண்களுக்குள்ளும் இருந்து காட்சியைக் காட்டுபவனாகவும் கலந்து அருள் செய்கின்றான். அந்த இறைவனை வழிபட்டு பேரின்பத்தை அனுபவிக்காமல் உலக வாழ்க்கையையே பெரிதானது என்று மதித்துக்கொண்டு இறைவனைப்பற்றி வீண் விளக்கங்கள் எழுதி வீண் பொழுதை கழிக்கின்றனர்.

பாடல் #316

பாடல் #316: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கணக்கறிந் தார்க்கன்றிக் காணஒண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

விளக்கம்:

இறைவனை அடையும் வழிகளை நன்றாக அறிந்து அதனை செயல் படுத்துபவர்களைத் தவிர வேறு யாருக்கும் இறைவனது திருக்காட்சியை காணமுடியாது உணரமுடியாது. இறைவனை அடையும் வழிகளை நன்றாக அறிந்து அதனை செயல் படுத்தி இறைவனது திருக்காட்சியை பார்த்து உணர்ந்தவர்களே உண்மை ஞானத்தைக் கற்று அறிந்தவர்கள் ஆவார்கள்.

குறிப்பு : கணக்கு அறிந்தவர்கள் என்றால் கணக்கை இப்படி போட்டால் பதில் கிடைத்து விடும் என்று எண்ணுபவர்கள் மட்டும் இல்லை. அந்த கணக்கை எழுதி சரியான பதிலை தருபவர்களே கணக்கை அறிந்தவர்கள் ஆவார்கள். அது போல இறைவனை அடையும் வழிகளை தெரிந்தவர்கள் மட்டும் ஞானம் அடைந்தவர்கள் இல்லை. அந்த வழிகளை பயன்படுத்தி இறைவனை கண்டு உணர்ந்தவர்களே ஞானம் அடைந்தவர்கள் ஆவார்கள்.

பாடல் #317

பாடல் #317: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்துஅறி யாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்களை சென்று பார்ப்பது நமக்கு நல்லது இல்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்டே ஆகவேண்டும் என்கிற கடமையும் நமக்கு இல்லை. உண்மையான ஞானத்தை கற்று அறியாத மூடர்களுக்கு தம்மைப் போலவே கற்று அறியாத மற்ற மூடர்களை நல்லவர்கள் என்று சொல்வார்கள். கல்லாத மூடர்க்கு எந்த கருத்தையும் அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.

பாடல் #318

பாடல் #318: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் திரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

விளக்கம்:

அற நூல்களையும் வேதங்களையும் கற்று சிவஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத தீயகுணமுடையவர்கள் தமது ஐம்புலன்கள் வழியாக உள்ள ஆசைகளையும் உலக வாழ்க்கையையும் பற்றிக்கொண்டு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால் வரும் மாசையும் அகற்றாத மூடர்கள் மற்றும் பல திசைகளிலும் உள்ள கற்றறிந்து உண்மை ஞானம் அடைந்தவர்களை உணரும் அறிவில்லாதவர்கள் இறைவனை அடையும் வழி தெரியாதவர்களே. அற நூல்களையும், வேதங்களையும் கற்று அதன் வழியில் இறைவனின் மேல் அன்போடு இருப்பவர்களே இறைவனை அடையும் வழி தெரிந்தவர்கள்.

பாடல் #319

பாடல் #319: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வுஅறி யாரே.

விளக்கம்:

பிறப்பு இறப்பு இல்லாத தேவர்களுக்கு இறைவனாகவும் அண்டங்கள் முழுவதும் பரவி ஜோதியாக ஆதியிலிருந்தே இருக்கும் இறைவனை உணர்ந்த அடியவர்கள் இறைவன் கூறிய வழியிலையே தொடர்ந்து சென்று இறுதியில் அடையும் பெருந்தெய்வமாக இருக்கும் இறைவனை உலகக் கல்வியை படித்து உணர்ந்து விடமுடியும் என்று கூறுபவர்கள் தமக்குள் ஜோதி வடிவாக நின்றுகொண்டு தம்மை வழி நடத்துபவனும் உயிரை உடலோடு தொடர்ந்து வைத்திருப்பவனும் அவனே எனும் உண்மை அறியாதவர்கள் ஆவார்கள்.

பாடல் #300

பாடல் #300: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (தெளிவான கேள்வி கேட்டு மனத்தை அடக்கியிருத்தல்)

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

விளக்கம் :

அறநூல்கள் சொல்லும் உண்மைகளைக் கேட்டும் பாடல் # 224ல் உள்ளபடி இருக்கும் அந்தணர்களின் அறிவுரைகளைக் கேட்டும் பாவங்கள் இவை என கூறும் நீதிநூல்கள் கூறுவதை கேட்டும் தேவர்களின் வழிபாட்டு கூறிய மந்திரங்களைக்கேட்டும் இறைவனைப்பற்றி சொல்லாத பிற நூல்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களைக் கேட்டும், பொன் போன்ற ஈசனின் திருமேனியாக இருக்கும் அவன் நாமத்தையும் அதன் தன்மைகளையும் கேட்டு அதன் படி நடந்தால் சிவகதி அடையலாம்.

பாடல் #301

பாடல் #301: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்துஅவர் ஓங்கிநின் றாரே.

விளக்கம்:

தேவர்களின் தலைவனாக இருப்பவனும் அனைத்திலும் மேலானவனுமான இறைவனை ஒருவரும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ளுவதில்லை. இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பின் அவரை அடைய அவரின் நாமத்தை சொல்லுங்கள். இறைவனை அறிந்த குருவிடம் அவரைப்பற்றி கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள். இறைவனை நாமங்களை ஒருவர் ஓதி உணர்ந்து விட்டால் அவர் இறைவனின் அடியார்களின் மத்தியில் உயர்ந்து நிற்பார்.

பாடல் #302

பாடல் #302: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரன்பணி யால்
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

விளக்கம்:

குருநாதராக இருந்து இறைவன் வழங்கிய சிவ ஆகமங்களை கேட்டு உணர்ந்தால் அதன் மூலம் திருமால் இறைவனின் ஆணை பெற்று காக்கும் தொழிலை புரிவதையும் பிரம்மன் இறைவனின் ஆணை பெற்று படைக்கும் தொழிலை புரிவதையும் உருத்திரன் இறைவனின் ஆணை பெற்று அழிக்கும் தொழிலை புரிவதையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து உணர்ந்தபின் இறைவனிடம் சிவபணி வேண்டும் என்று எவர் ஒருவர் கேட்டுப் பெறுகிறாரோ அவரே அடுத்து தேவர்களாக மாறி என்றும் அழியாத இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சிவபணி புரியலாம்.

குறிப்பு : அனைத்து தேவர்களும் சிவனடியாராக இருந்து இறைவனிடம் சிவபணி கேட்டு பெற்று தேவர்களாக நின்று அருள் புரிபவர்கள் தான்.