பாடல் #1518: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)
மருட்டிப் புணர்ந்து மயக்கமு நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
யருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மருடடிப புணரநது மயககமு நீககி
வெருடடி வினையறுத தினபம விளைததுக
குருடடினை நீககிக குணமபல காடடி
யருடடிகழ ஞான மதுபுரிந தாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தாளே.
பதப்பொருள்:
மருட்டி (சாதகர்கள் தன்னை நினைந்து உருகும் படி செய்து) புணர்ந்து (அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து) மயக்கமும் (மாயையாகிய மயக்கத்தை) நீக்கி (நீக்கி விட்டு)
வெருட்டி (விரைவாக நீங்கிச் செல்லும் படி மிரட்டி) வினை (வினைகளை) அறுத்து (அறுத்து விட்டு) இன்பம் (பேரின்பத்தை) விளைத்து (அனுபவிக்கும் படி செய்து)
குருட்டினை (மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாத குருட்டுத் தன்மையை) நீக்கி (நீக்கி விட்டு) குணம் (இறைவனின் தன்மைகளை) பல (பல விதங்களில்) காட்டி (கண்டு உணரும் படி செய்து)
அருள் (பேரருள்) திகழ் (திகழ்கின்ற) ஞானம் (உண்மை ஞானத்தை) அது (சாதகர்கள் அடையும் படி) புரிந்தாளே (செய்து அருளுகின்றாள் இறை சக்தி).
விளக்கம்:
சாதகர்கள் தன்னை நினைந்து உருகும் படி செய்து அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து மாயையாகிய மயக்கத்தை நீக்கி விட்டு விரைவாக நீங்கிச் செல்லும் படி மிரட்டி வினைகளை அறுத்து விட்டு பேரின்பத்தை அனுபவிக்கும் படி செய்து மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாத குருட்டுத் தன்மையை நீக்கி விட்டு இறைவனின் தன்மைகளை பல விதங்களில் கண்டு உணரும் படி செய்து பேரருள் திகழ்கின்ற உண்மை ஞானத்தை சாதகர்கள் அடையும் படி செய்து அருளுகின்றாள் இறை சக்தி.