அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #44

2-2-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வேள்விகள் என்பதெல்லாம் வெறும் செலவினம் தானே? அப்பொருள்கள யாவும் நல்வழிக்கு உபயோகப் படுத்தலாமே?

வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் வீணாவதில்லை. ஆண்டவனுக்கு நாம் கொடுக்கும் பொருட்கள் அனைத்தும் அவருக்கு எதுவும் தேவையில்லை என்கின்ற போதிலும் நாம் நமது திருப்திக்கென சிறிது அளிக்கின்றோம். உதாரணமாக ஒன்று கூறினால் விடை எளிதாக புரியும். விவசாயி ஒருவன் தானியங்களை விதைக்கும் காலத்தில் அது ஏன் தூவுகின்றான் அது வெறும் செலவு தானே மக்கள் பட்டினியாக இருக்க இவ்விதைகள் உதவுமே என எண்ணினால் அது தவறாகும். விதைகள் விதைத்தால் தான் உணவு உண்டாகும் என்பதை உணருதல் வேண்டும். இவ்விதமே நாம் சிறிதாக வேள்வியில் அளிக்கும் பொருட்கள் இறைவனின் அருள் பெறுவதற்கு உதவுகிறது. இத்தகைய அருளால் பல நன்மைகள் உண்டாகிறது. பெறும் நன்மைகள் உண்டாகின்றது. உதாரணமாக நல்ல மழை விளைவாக தானியங்கள் அமைதியின் விளைவாக பொருளாதார முன்னேற்றங்கள் என்பதெல்லாம் கிடைக்கக்கூடும். வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் சிறிதே கிடைக்கும் இறையருள் பெரிதே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #43

5-1-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறைவன் மட்டும் தான் சத்தியம் (உண்மை) என்றும் மற்ற அனைத்தும் அசத்யம் அநித்யம் (உண்மை இல்லாதது) என்கின்றதை பெரியோர்கள் கூறியுள்ளனர். அவ்விதமிருக்க வேதங்களும் அநித்யம் அசத்யம் என்றும் எடுத்தல் வேண்டுமா?

வேதங்கள் இறைவனின் கீழ்நோக்கும் முகமான ஐந்தாம் முகத்திலிருந்து வெளிவந்தாக கருதப்படுகின்றது. தெய்வத்தின் வாக்கு தெய்வம் போல் என்றும் நித்யமாகவே இருக்கும் என்கின்றதால் வேதங்களும் நித்யமானதே. அசத்யமாக இருப்பதை வைத்து சத்யத்தை உணருதல் இயலும். இதற்கு உதாரணமாக தூக்கத்தில் கனவில் ஓர் காட்சி காண அதில் புலி ஒன்று நம்மை விரட்டுவதாக கண்டு கொண்டால் அந்நேரத்தில் அக்காட்சியானது முழுமையாக உண்மையாகவே தோற்றம் அளிக்கும். நமக்கு பயம் தோன்றி சட்டென்று எழுந்து ஒடத் தோன்றும் முழித்தால் அது கனவு என உணருவோம். இருப்பினும் அக்காலத்தில் நடைபெற்றது நமக்கு உண்மையாகவே தோன்றியது அல்லவா? இவ்விதம் இங்கிருக்கும் பொய்யான உலகத்தில் காணும் தோற்றங்கள் அனைத்தும் சட்டென்று நாம் முழிக்கும் போது இவையாவும் உண்மையல்ல உண்மையென்பது ஆண்டவன் ஒன்றே என்கின்ற ஓர் நிலை உண்டாகும். இருக்கும் போது அதுவே உண்மையாக தோன்றும் மறைந்த பின் இவையாவும் இல்லை என்றும் நித்யமானது இறைவன் ஒன்றே என நாம் கூறுவோம். இந்நிலையில் வேதங்கள் இறைவனின் வாக்கு என்கின்றதால் அதிலிருந்து நாம் கற்க வேண்டியதை அனைத்தும் கற்று இறைவனை அடைந்தால் பின்பு அது ஒன்றே சத்தியமாகிறது இதற்கே நமது முயற்சிகள் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #42

9-12-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மார்கழி மாதத்தில் நல்காரியங்கள் செய்யாதது ஏன்? அதனை ஏன் பீடை மாதம் என்று அழைக்கின்றனர்?

மார்கழி மாதமானது பீடை மாதம் அல்ல அது பீடம் மாதம் என்று கூறுதல் வேண்டும் தெய்வங்கள் குறிப்பாக சக்தியை பீடத்தில் அமர்த்தி வழிபடும் காலம் மார்கழி மாதம் என்பதை உணர்தல் வேண்டும். மார்கழி மாதத்தில் தெய்வ காரியத்தை தவிர வேறு காரியம் செய்யக்கூடாது என பெரியோர்கள் கருதினர். அதற்காக நல்காரியங்கள் செய்யாதீர்கள் மற்ற காரியங்கள் யாதும் செய்யாதீர்கள் தெய்வ வழிபாட்டில் மட்டும் அமருங்கள் என்றால் மனிதன் கேட்க மாட்டான். இத்தகைய நிலையில் பீடம் என்பது சிறிதாக மாறி பீடை மாதமாக மாறி விட்டது இது ஒன்றே இதற்கான விளக்கம் தெய்வ நல்காரியங்கள் தெய்வ காரியங்கள் செய்யும் காலம் என்பதால் மற்ற காரியங்கள் செய்யாதீர் என்பதே இதற்கு விளக்கமாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகவே இக்காலம் மண்டல காலம் என அழைக்கப்பட்டும் ஐயப்பன் வழிபாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் அக்காலத்தில் தெய்வ காரியங்கள் தெய்வ நல்காரியங்கள் எடுத்துச் செய்வீர்களாக.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

18-9-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

செல்வத்தை சேர்ப்பது தவறானதா?

சேர்ப்பது என்பது எப்பொழுதும் அளவிற்கு மீறியதையே குறிக்கின்றது. கலியுகத்தில் செல்வம் தேவையானது தான் இருப்பினும் நமது தேவைக்கு வேண்டுமானதை வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக கையில் நிலைத்து விட்டால் புத்தி துர்புத்தியாக மாறுவது எளிதாகின்றது. அவ்விதம் அதிகம் நீயும் சம்பாதித்தால் நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் உழைக்க வேண்டாம் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாம் கூறவில்லை. தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு மற்றதை நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். இக்காலத்தில் பொறுப்புகள் அதிகமாகின்றது குடும்ப செலவுகள் பெரிதாகின்றது மேலும் தூரம் சென்று பணிபுரிய வாகனங்கள் தேவைப்படுகின்றது. இருக்க ஓர் இடம் தேவைப்படுகின்றது. இவையாவும் பூர்த்தி செய்த பின்பு சிறிது குழந்தைகளுக்கு எடுத்து வைப்பது உண்டு இதுவும் நியாயமானதே. இதற்கும் மேலாக சொத்துக்கள் சேகரித்து வைத்து நகைகள் வைத்து எப்பொழுது திருடன் வருவான் என பயம் கண்டு வாழ வேண்டாம். தேவைக்கு வேண்டியதை வைத்துக் கொள்ள வேண்டும் நல் காரியங்கள் செய்வதற்கு பல உண்டு இல்லாதோர் பலர் இருக்க குறிப்பாக தவிக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நலன் கொடுங்கள் மேலும் அன்னதானங்கள் இவையாவும் நலம் தருபவை என்கின்ற போதிலும் நிரந்தரமாக ஒருவருக்கு உண்ண வசதி செய்தால் அது மிகவும் சிறப்பாகின்றது. கல்வி தானம் ஒருவருக்கு தேவையான கல்விகள் பூர்த்தி செய்ய உதவினால் அதுவும் சிறப்பானது நம் குழுந்தைகள் இருக்க ஒரிரு குழந்தைகளை படிக்க வைப்போம் உணவு நன்றாக உண்ண வைப்போம் என்கின்ற மனப்பான்மை வளர்த்தால் உம்மை உறுதியாக தெய்வம் வாழ்த்தும் தன் அருகில் சேர்க்கும்.

Gurunathar Message On Ashwini Pooja #40

Gurunathar’s Divine Message Ashwini Pooja 18-07-2006

‘’I heard a good question and decided to give an explanation in this manner. The question is about our concept of ‘I and mine , our sense of identity. The question is ‘If I is equated to ego or arrogance how should we behave in our normal day to day life?’.’’
Guruji explains: when we speak about ourselves we say, ’’This is my name, this is what I do etc., whatever our identity or profession might be. How can we live in this world without such an identity? We cannot do so. ‘’Then how should we live?’’, is the question.
Gurunathar says: “There is no defect in the concept or word ‘I’. It is when our personalities or attitudes influence this concept that the flaws begin to exist. When we put ourselves on par with others we should not think ourselves superior to them. This would be wrong and become the beginning of arrogance. If we are able to recognize the presence of God in other living beings and realize their level of divinity there is no room for the growth of arrogance. Hence there is nothing wrong in our acknowledging our individual identities. For instance when I came with Lord Ganesha, it would not have been wrong to say “you are Vinayakar. I am Moolan”, because I am fully aware of His state of divinity and strength when I mention my identity.
I am superior-others are all inferior.
I am special-others are ordinary.
I am rich-others are poor.
I am a great scholar-others are ignorant.
To think in all these ways causes the growth of arrogance. It is not wrong to maintain our identity. It is the attitudes we adopt that make the difference.’’
(Extract from Gurunathar’s divine message given to and read by Guruji Shri.K.V.Narayanan)

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #39

28-6-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

இறைவனின் நாமத்தை தொடர்ந்து கூறுவதன் பலன் என்ன?

இறைவனும் நாமமும் வேறல்ல தெய்வ நாமத்தை நாம் முதலில் வசப்படுத்துகின்றோம். இதனை குருவிடம் பெற்றும் இல்லையெல் நாமாக நாடியும் இவ்வாக்குகளை ஓதிக்கொண்டே இருக்கின்றோம். நல்வழியில் சிரத்தையுடன் இவ்விதம் செய்துவர பின்பு அந்நாமம் நம்மை வசப்படுத்துகின்றது. இவ்விதம் இருக்கும் போது தெய்வம் நம்மை வசப்படுத்தியதாக கண்டு கொள்ளலாம். இதுவே நாம மந்திரத்தின் விஷேசமாகும்.

இவ்வுலகில் சிறந்த மந்திரம் எது?

ராமநாமம் ஆகும் இதிலும் குறிப்பாக சிறப்பான அதிர்ச்சிகள் உருவாக்குவது ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்கின்ற மந்திரமாகும். இதன் முன் ஓர் ஓம் சேர்த்தல் வேண்டும். அப்பொழுதே இம்மந்திரம் முழுமையாகிறது இது பெரும் அமைதியை அளிக்கவல்ல மந்திரம் மட்டுமல்லாது தொடர்ச்சியாக சிரத்தையுடன் ஜெபிக்க முக்தியை அளிக்க வல்லது. இதனை நன்கு உணர்தல் வேண்டும். சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் ஜெபித்து வர அவர்களை இது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும். ஏற்கனவே நல்நிலையில் இருக்கின்றவர் பெருமுக்திக்கு சிவநாமம் கூறுவது நலம். இதன் பொருள் என்னவென்றால் ஹரிதனிலிருந்து ஹரனுக்கு சென்று ஹரன்தனிலிருந்து பரம்பொருளில் கலத்தல் வேண்டும் என்பதாகும். இதற்கு காரணம் உண்டு ஹரி என்பவர் காக்க வல்லவர் சாதாரண லௌகீக காரியங்கள் என்பதை தொட்டு அனைத்தும் அவர் சிரத்தையாக கூர்ந்து கவனிக்கிறார். இவ்விதம் இருக்க செல்வங்கள் கொடுப்பதும் அவனே சுக வாழ்வது அளிப்பவனும் அவனே முக்தியை அளிப்பது ருத்திரன் என்றும் முதன்மையில் ஓர் முக்திநிலைக்கு ஹரி அழைத்துச் செல்ல ஹரன் அங்கிருந்து பெருமுக்திக்கும் பிறவி இல்லா நிலைக்கும் அழைத்துச் செல்வான் என்பதே பொருளாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

4-5-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

காலமதன் முக்கியத்துவம் இங்கும் உணர்த்திட உள்ளோம்
காலத்தில் அனைத்தும் நடத்துதல் வேண்டும் என்றும்
காலமே அனைத்திற்கும் விதி என்றும்
காலமே பிறப்பிற்கும் இறப்பிற்கும் மத்தியத்தில் நிற்பதென்றும்
காலமே அனைத்திலும் முக்கியத்துவம் காண்பது என்பேன்
காலமதில் முக்கியம் என்றிட்ட போதிலும்
காலமதை எவரும் பொருட்படுத்துவதில்லை
காலத்தில் ஓர் இடம் செல்ல வேண்டுமென்றால்
காலத்திற்குள் செல்லுதல் வேண்டும்
காலம் கடந்து செல்லுதல் பெருமையென்ற நிலை நவீன நிலையாக உள்ளது
காலம் தவிர்த்து செல்லுதல் தவிர்த்தல் வேண்டும் நீங்களும்
காலத்தின் முக்கியத்துவத்தை பொதுவாக கூறினோம்
காலத்தின் முக்கியத்துவம் ஆன்மீக நிலையில் கூறிட
காலமது சென்றிட்டால் ஞானமும் சென்றிடுமே
காலமது சென்றிட்டால் பிராப்தங்கள் விலகிடுமே
காலமது சென்றிட்டால் கிடைக்கக்கூடிய பாக்கியமும் விலகிடுமே
காலமதன் முக்கியத்துவம் பூஜை, விதிகள் என்கின்ற வகைகளில் பார்த்தால்
காலத்தில் வராதோர் பயனற்ற நிலையும் காண்பரே
காலம் காலம் காலம் காலம் ஒன்றே காக்கும் ஏனெனில்
காலமும் சிவனும் ஒன்றே
காலத்திற்கும் மதிப்பினை கொடுக்காவிட்டால்
சிவனை அவமதிக்கும் நிலையும் காண்போம்.

ஓர் நாள் ஊதியம் சென்று விடும் என்றால் காலத்திற்குள் வேலை செய்யும் இடத்திற்கு ஒடுவதை அனைவரும் காண்கிறோம். இருப்பினும் தெய்வத்தை காக்க வைப்பது சகஜ நிலை ஆயிற்று இவ்விதம் இருப்பது ஆன்மீக நிலைக்கும் சீரானதல்ல.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

7-4-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மந்திரத்திற்கும் பலன் உண்டு என பலரும் அறிந்ததே இறைவனின் நாமம் தனியென கூறினால் அதற்கு என்ன பலன்?

இறைவனும் அவன் நாமமும் தனியல்ல என்றும் இறைவனே நாமம் நாமமே இறைவனும் என்பதே விதியாகும். அவன் நாமத்தை எப்பொழுதும் கூறிக்கொண்டே இருக்க அவனே அருகில் இருக்கும் நிலையும் உண்டு. மந்திரங்கள் தந்திரங்கள் என்பதெல்லாம் அவசியமற்றதாகும் வெறும் நாமம் ஒன்றே ஜபித்து வர அதிலிருந்து மாறாமல் இருந்தால் இறைவனை நாம் அங்கு சென்று வழிபட்ட பலன் உண்டாகி முக்திக்கும் வழி தானென உண்டாகும். பின்பு மந்திரம் தந்திரம் எல்லாம் என்பதெல்லாம் எதற்கு? மனசிரத்தை மனம் ஓர்நிலைப் படுத்தவே அனைத்தும் மாற்றாக சில காரியங்கள் சாதித்தல் வேண்டுமென்றால் இதற்கு மந்திரங்கள் தேவையானது இறைவனை அடைதல் வேண்டும் என ஓர் நோக்கம் மட்டும் நிலைத்திருந்தால் தெய்வ நாமம் சதா (எப்பொழுதும்) உரைப்பது மட்டுமின்றி சதா தெய்வ எண்ணத்துடன் வாழ்வதே போதுமானது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

11-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது துயரம் எது என நாம் சிந்தித்தல் வேண்டும் சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும் ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும் அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

12-2-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகம் இல்லை தெய்வத்தை நாடி செல்லும் காலங்ளில் உடலை அடக்க வேண்டுமா?

ஆம் அடக்க வேண்டியது உடலே என்றும் கூற இயலும். ஏனெனில் உணர்ச்சிகள் பொதுவாக ருசி கண்கள் வழியே காணுதல் காது வழி கேட்டல் ஸ்பரிசம் (தொடு உணர்ச்சி) உணர்வுகள் அனைத்தும் அடக்குதல் வேண்டும். இருப்பினும் இவையாவும் அடங்குவதற்கு எது உபயோகம் என சிந்தித்தால் மனமே என நன்கு உணர்தல் வேண்டும். மனமதை முழுமையாக அடக்குதல் வேண்டும். ஓர் பொருள் உட்கொள்ள தகாது என உணர்ந்தும் நாக்கின் ருசிக்கு அடிமையாகி அதை சாப்பிடுகின்றோம். அதன் விளைவுகளை அனுபவிக்கின்றோம் குறிப்பாக கொழுப்பு சக்தி அதிகமா இருக்கும் நபர் இதை நன்கு உணர்வார். வேண்டாம் என மனம் கூறிய பின்பும் மீறி ருசிக்கு அடிமையாகி சாப்பிடுகின்றனர். மனதில் திடமிருந்தால் இது நேரிட்டிருக்காது இந்நிலை காண மனதை உறுதிப்படுத்த வேண்டும். மனதை திடப்படுத்த வேண்டும் மனம் நம் வசம் இருத்தல் வேண்டும் நம் மனம் கட்டுக்குள் அடங்கி விட்டால் உடல் நம் கட்டுக்குள் அடங்கி விடும்.