பாடல் #357: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.
விளக்கம்:
பாடல் #356 ல் உள்ளபடி அனைவரின் பிழைகளை மன்னித்து எங்கும் ஒளிமயமாகி வியாபித்து இருக்கும் சிவபெருமானை வானவர்கள் வணங்க அழுக்குகளையெல்லாம் எரித்து எதையும் தூய்மையாக்கும் அக்கினி தக்கன் யாகத்தில் கலந்து கொண்டு தூய்மை கெட்டதால் தன் குற்றம் நீங்க சிவனின் திருவடிகளை பற்றிக்கொள்ள சிவனும் அன்போடு அக்னிக்கு அருள் செய்ய ஓடிவந்தான்.
உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு அந்த தவறில் அணுவாய் கலந்திருக்கும் இறைவனின் திருவடிகளை நினைத்து உள்ளத்தில் பற்றிக்கொள்ள இறைவன் அன்போடு அவர்களுக்கு அருள் செய்ய ஒடிவருவான்.