பாடல் #356: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேஅவ ராகிய காரணம்
அப்பரி சேஅங்கி யுள்நாளும் உள்ளிட்டு
அப்பரி சேஆகி அலர்ந்திருந் தானே.
விளக்கம்:
தக்கன் செய்த யாகத்தில் அவிர்பாகத்தைப் பரிசாகப் பெற்ற பிரம்மன் திருமால் மற்றும் அனைத்து தேவர்களும் இறைவனே தாமாக இருக்கும் காரணத்தை அறிந்து தமது அறியாமையால் பிழை செய்துவிட்டோமே என்று வருந்தி அவனது திருவருளை வேண்டி நின்றனர். அக்கினிதேவனும் தமக்குள் தீயாகவும் ஒளியாகவும் வெப்பமாகவும் என்னாளும் இருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்து அவனது திருவருளை வேண்டி நின்றான். அவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவனும் அனைவரின் பிழைகளை மன்னித்து ஒளிமயமாகி எங்கும் வியாபித்து இருந்தான்.
உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளிலும் அணுவாய் கலந்திருக்கும் இறைவன் உயிர்கள் தன் தவறை உணரும் போது அவர்களை மன்னித்து அருள்செய்வான்.