பாடல் #354: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (வேள்வியின் தத்துவம்)
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லாதானும் அருள்புரிந் தானே.
விளக்கம்:
தக்கன் யாகத்தையும் அதைச் செய்ய முற்பட்டவர்களையும் அதை ஏற்றுக்கொண்ட தேவர்களையும் இறைவனின் பைரவ அவதாரமான வீரபத்திரர் அளித்த தண்டனையை கண்டு யாகத்தீயில் இருந்து எழுந்து வந்த திருமால் இறைவனே தவறு செய்தவன் இவனல்ல உலகினில் பிறந்த சதியின் மேல் வைத்த பாசத்தாலும் கொண்ட பந்தத்தாலும் அறிவிழந்து இவன் செய்த யாகத்தின் அவிர்பாகத்தை ஏற்றுக்கொண்ட நாங்களே பெரும் தவறு செய்தவர்கள் எம்மை மன்னித்து அருளுங்கள் என்று கூறி இறைவனின் திருவடிகளில் விழுந்து தொழ என்றுமே இறப்பில்லாத இறைவனும் அவர்களுக்கு அருள் புரிந்தான்.
உட்கருத்து: மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி பந்த பாசத்தினால் செயல்களை செய்தால் அந்த செயல் இறையருள் இல்லாமல் பூர்த்தியாகாமல் இருக்கும் அதை உணர்ந்து உயிர்கள் பந்த பாசத்தில் இருந்து விடுபட்டு இறையருளுடன் செய்யும் போது இறைவன் அந்த உயிருக்கு அருள் செய்வான்.