பாடல் #352: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.
விளக்கம்:
தேவர்கள் எல்லாம் தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி இறைவனை விரும்பிச்சென்று இறைவா நமசிவாய என்று திருவடி பணிந்து கும்பிட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் துயரங்களைத் தீர்த்தான்.
உட்கருத்து: தனக்குள் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தை உணர்ந்த உயிர்களுக்கு படைக்கும் பிரம்மாவின் தொழிலையும் காக்கும் திருமாலின் தொழிலையும் அளித்து அந்த உயிருக்கு தேவர்கள் என்னும் தகுதியை அளிக்கும் இறைவன் (இதனை திருமந்திர பாடல் எண் #349 மூலம் அறியலாம்) அவர்கள் உணர்ந்த லிங்க தத்துவத்தை இறைவா நமசிவாய என்று வழிபட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரித்து பிறவா நிலையை அந்த உயிருக்கு அளிப்பார். லிங்க வடிவின் தத்துவமும் இறைவனும் ஒன்றே என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்.