பாடல் #301: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)
தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்துஅவர் ஓங்கிநின் றாரே.
விளக்கம்:
தேவர்களின் தலைவனாக இருப்பவனும் அனைத்திலும் மேலானவனுமான இறைவனை ஒருவரும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ளுவதில்லை. இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பின் அவரை அடைய அவரின் நாமத்தை சொல்லுங்கள். இறைவனை அறிந்த குருவிடம் அவரைப்பற்றி கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள். இறைவனை நாமங்களை ஒருவர் ஓதி உணர்ந்து விட்டால் அவர் இறைவனின் அடியார்களின் மத்தியில் உயர்ந்து நிற்பார்.