பாடல் #1835

பாடல் #1835: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

கழிப்படு தண்கடல் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மட்டறி வார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வாருச்சி மேவிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கழிபபடு தணகடல கெளவை யுடைதது
வழிபபடு வாரமலர மடடறி வாரகள
பழிபபடு வாரபலரும பழி வீழ
வெளிபபடு வாருசசி மெவிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கழி படு தண் கடல் கௌவை உடைத்து
வழி படுவார் மலர் மட்டு அறிவார்கள்
பழி படுவார் பலரும் பழி வீழ
வெளி படுவார் உச்சி மேவி நின்றானே.

பதப்பொருள்:

கழி (உப்புத்) படு (தன்மை கொண்ட) தண் (குளிர்ந்த நீருடைய) கடல் (கடலின்) கௌவை (ஓசை மிக்க அலைகளை) உடைத்து (அடக்கி வைத்து)
வழி (இறைவனை தொழுது வழி) படுவார் (படுகின்றவர்கள்) மலர் (தாம் பூஜை செய்கின்ற மலர்களின்) மட்டு (நறுமணத்தை) அறிவார்கள் (அறிவார்கள்)
பழி (எவர் எந்த பழி சுமத்தினாலும்) படுவார் (அதனால் பாதிக்கப் படாமல் இறைவனை மட்டுமே கதியென்று வாழுகின்ற) பலரும் (பல அடியவர்கள்) பழி (தங்கள் மீது மற்றவர்கள் விட்ட பழிகள்) வீழ (வெற்றுப் பேச்சுகளாக வீழ்ந்து போக)
வெளி (உள்ளுக்குள் இருந்து சிவம் வெளிப்) படுவார் (படுவதை அறிவார்கள்) உச்சி (அவர்களின் உள்ளிருந்து அண்ட சராசரங்கள் அனைத்தின் எல்லை வரை) மேவி (பரந்து விரிந்து) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

உப்புத் தன்மை கொண்ட குளிர்ந்த நீருள்ள கடலில் ஓசை மிக்க அலைகள் இல்லாதது போலவே ஐம்புலன்களால் வருகின்ற உணர்வுகளை அடக்கி வைத்து இறைவனை பூஜை செய்து வழிபடுகின்ற அடியவர்கள் தாம் பூஜை செய்கின்ற மலர்களின் நறுமணத்தை அறிவார்கள். அந்த நறுமணத்தின் பலனால் மனம் ஒடுங்கி இறைவன் மேல் மட்டும் எண்ணம் இலயித்து இருக்கும். அந்த நிலையில் எவர் எந்த பழி சுமத்தினாலும் அதனால் பாதிக்கப் படாமல் இறைவன் மட்டுமே கதியென்று வாழுகின்ற அடியவர்களின் மேல் சுமத்திய பழிகள் அனைத்தும் பொய்யாக விழுந்து போகும். அப்போது அந்த அடியவர்களுக்குள் இருந்து வெளிப்பட்ட சிவமானது அண்ட சராசரங்களின் எல்லை வரை பரந்து விரிந்து நிற்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.