பாடல் #1767: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)
ஆதிபர தெய்வ மண்டத்து நற்றெய்வஞ்
சோதி யடியார் துடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வ நின்மல னெம்மிறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆதிபர தெயவ மணடதது நறறெயவஞ
சொதி யடியார துடரும பெருநதெயவம
நீதியுள மாதெயவ நினமல னெமமிறை
பாதியுள மனனும பராசததி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆதி பர தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதி உள் மா தெய்வம் நின் மலன் எம் இறை
பாதி உள் மன்னும் பரா சத்தி ஆமே.
பதப்பொருள்:
ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பர (பரம்பொருளாகிய) தெய்வம் (இறைவன்) அண்டத்து (அண்டங்களுக்கு எல்லாம்) நல் (நன்மை செய்கின்ற) தெய்வம் (இறைவன்)
சோதி (தமக்குள் சோதி வடிவாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொண்ட) அடியார் (அடியவர்களை) தொடரும் (எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கின்ற) பெரும் (மாபெரும்) தெய்வம் (இறைவன்)
நீதி (தர்மங்கள் அனைத்திற்கும்) உள் (மூலப் பொருளாக இருக்கின்ற) மா (மாபெரும்) தெய்வம் (இறைவன்) நின் (இப்படி எந்தவிதமான) மலன் (குற்றங்களும் குறைகளும் இல்லாத தூய்மையான) எம் (எமது) இறை (இறைவன்)
பாதி (அவனுடைய திருமேனியில் சரிபாதியாக) உள் (உள்ளே) மன்னும் (எப்போதும் நிலைபெற்று சேர்ந்தே இருக்கின்ற) பரா (அசையும் சக்தியாகிய) சத்தி (இறைவியோடு) ஆமே (சேர்ந்தே இருக்கின்றான்).
விளக்கம்:
ஆதியிலிருந்தே இருக்கின்ற பரம்பொருளாகிய இறைவன், அண்டங்களுக்கு எல்லாம் நன்மை செய்கின்ற இறைவன், தமக்குள் சோதி வடிவாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொண்ட அடியவர்களை எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கின்ற மாபெரும் இறைவன், தர்மங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக இருக்கின்ற மாபெரும் இறைவன், இப்படி எந்தவிதமான குற்றங்களும் குறைகளும் இல்லாத தூய்மையான எமது இறைவன் தனது திருமேனியில் சரிபாதியாக உள்ளே எப்போதும் நிலைபெற்று சேர்ந்தே இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவியோடு ஞான இலிங்கமாக இருக்கின்றான்.
அருமையான பதிவு