பாடல் #1685: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
தவத்திடை நின்றவர் தாமுண்ணுங் கன்மஞ்
சிவத்திடை நின்றது தேவ ரறியார்
தவத்திடை நின்றறி யாதவ ரெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தவததிடை நினறவர தாமுணணுங கனமஞ
சிவததிடை நினறது தெவ ரறியார
தவததிடை நினறறி யாதவ ரெலலாம
பவததிடை நினறதொர பாடது வாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்து இடை நின்றது தேவர் அறியார்
தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்
பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே.
பதப்பொருள்:
தவத்து (இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற) இடை (வழியில்) நின்றவர் (நிற்கின்ற தவசிகள்) தாம் (தாங்கள்) உண்ணும் (அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய) கன்மம் (கர்மங்கள் அனைத்தும்)
சிவத்து (அதை உருவாக்கிய இறைவன்) இடை (இடத்திலேயே) நின்றது (சென்று சேர்ந்து விடுவதை) தேவர் (தேவர்களும்) அறியார் (அறிய மாட்டார்கள்)
தவத்து (தவத்தின்) இடை (வழியில்) நின்று (நின்று) அறியாதவர் (இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள்) எல்லாம் (எல்லாரும்)
பவத்து (பிறவி எனும்) இடை (கட்டுக்குள் அகப்பட்டு) நின்றது (நின்றது) ஓர் (ஒரு) பாடு (முடிவில்லாத வினைகளை) அது (அனுபவிக்கும் நிலையிலேயே) ஆமே (இருக்கின்றார்கள்).
விளக்கம்:
இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற வழியில் நிற்கின்ற தவசிகள் தாங்கள் அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய கர்மங்கள் அனைத்தும் அதை உருவாக்கிய இறைவன் இடத்திலேயே சென்று சேர்ந்து விடுவதை தேவர்களும் அறிய மாட்டார்கள். தவத்தின் வழியில் நின்று இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் பிறவி எனும் கட்டுக்குள் அகப்பட்டு நின்றது ஒரு முடிவில்லாத வினைகளை அனுபவிக்கும் நிலையிலேயே இருக்கின்றார்கள்.