பாடல் #1680

பாடல் #1680: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

குருட்டினை நீங்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீங்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குருடடினை நீஙகுங குருவினைக கொளளார
குருடடினை நீஙகாக குருவினைக கொளவர
குருடுங குருடுங குருடடாடட மாடிக
குருடுங குருடுங குழிவிழு மாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குருட்டினை நீங்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீங்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழும் ஆறே.

பதப்பொருள்:

குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கும் (விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட) குருவினை (உண்மை குருவினை) கொள்ளார் (தேடி அடையாதவர்கள்)
குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கா (தம்மை விட்டு இன்னமும் நீங்காத) குருவினை (பொய்யான குருவிடமே) கொள்வர் (சென்று சிக்கிக் கொள்கிறார்கள்)
குருடும் (இது ஒரு குருடனும்) குருடும் (இன்னொரு குருடனும்) குருட்டு (சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல்) ஆட்டம் (தடுமாறி) ஆடி (ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி)
குருடும் (இந்த குருடனும்) குருடும் (அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும்) குழி (சேர்ந்து பிறவிக் குழியில்) விழும் (மீண்டும் மீண்டும் விழுவதற்கே) ஆறே (வழியாகவே இருக்கும்).

விளக்கம்:

மாயையாகிய இருள் விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட உண்மை குருவினை தேடி அடையாதவர்கள் மாயையாகிய இருள் தம்மை விட்டு இன்னமும் நீங்காத பொய்யான குருவிடமே சென்று சிக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு குருடனும் இன்னொரு குருடனும் சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல் தடுமாறி ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி இந்த குருடனும் அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும் சேர்ந்து பிறவிக் குழியில் மீண்டும் மீண்டும் விழுவதற்கான வழியாகவே இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.