பாடல் #1519: ஐந்தாம் தந்திரம் – 18. மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை)
கன்னித் துறைபடிந் தாடிய வாடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லைத் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கனனித துறைபடிந தாடிய வாடவர
கனனித துறைபடிந தாடுங கருததிலர
கனனித துறைபடிந தாடுங கருததுணடெல
பினனைப பிறவி பிறிதிலலைத தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கன்னி துறை படிந்து ஆடிய ஆடவர்
கன்னி துறை படிந்து ஆடும் கருத்து இலர்
கன்னி துறை படிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னை பிறவி பிறிது இல்லை தானே.
பதப்பொருள்:
கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடித்து) ஆடிய (அதன் படியே நடக்கின்ற) ஆடவர் (சாதகர்கள்)
கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடிப்பதின் மூலம்) கருத்து (பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம்) இலர் (இல்லாதவராக இருக்கின்றார்கள்)
கன்னி (அருள் சக்தி) துறை (வருகின்ற வழியின்) படிந்து (முறையை கடைபிடித்து) ஆடும் (அதன் படியே நடந்து பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை பெறுகின்ற) கருத்து (ஞானத்தை தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள்) உண்டேல் (அறிந்து கொண்டு விட்டால்)
பின்னை (இனி பிறக்க வேண்டிய) பிறவி (பிறவி என்று) பிறிது (வேறு எதுவும் அவர்களுக்கு) இல்லை (இல்லாமல்) தானே (போய் விடும்).
விளக்கம்:
அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடக்கின்ற சாதகர்கள் அந்த முறையை கடைபிடிப்பதின் மூலம் பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம் இல்லாதவராக இருக்கின்றார்கள். அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடந்து பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை பெறுகின்ற ஞானத்தை தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள் அறிந்து கொண்டு விட்டால் இனி பிறக்க வேண்டிய பிறவி என்று வேறு எதுவும் அவர்களுக்கு இல்லாமல் போய் விடும்.