பாடல் #1508

பாடல் #1508: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சமயங் கிரிதையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமயங கிரிதையிற றனமனங கொயில
சமய மனுமுறை தானெ விசெடஞ
சமயதது மூலந தனைததெறன மூனறாஞ
சமயாபி டெகந தானாஞ சமாதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமயம் கிரிதையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனை தேறல் மூன்று ஆம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் எனப்படுவது) கிரிதையில் (கிரியையில்) தன் (தன்) மனம் (மனதையே) கோயில் (இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) மனு (மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட) முறை (வழி முறைகளாக இருப்பது) தானே (தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின்) விசேடம் (விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும்)
சமயத்து (அந்த சமயத்தின்) மூலம் (மூலமே) தனை (தாம் யாராக இருக்கின்றோம்) தேறல் (என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது) மூன்று (சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான) ஆம் (நிலைகளை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) அபிடேகம் (அபிஷேகம்) தான் (என்பது தானே) ஆம் (இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த) சமாதியே (ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்).

விளக்கம்:

சமயம் எனப்படுவது கிரியையில் தன் மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும். சமயத்தில் மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வழி முறைகளாக இருப்பது தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின் விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும். அந்த சமயத்தின் மூலமே தாம் யாராக இருக்கின்றோம் என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான நிலைகளை அடைவது ஆகும். சமயத்தில் அபிஷேகம் என்பது தானே இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்.

கருத்து:

  1. மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மானசீகமாக அமைத்து சரியை முறையை பின்பற்றுவது இறைவன் இருக்கின்ற உலகத்தையே சார்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.
  2. மனதுக்குள் இருக்கின்ற இறைவனுக்கு பூஜைகளும் மந்திர உச்சாடனங்களும் செய்து கிரியை முறையை பின்பற்றுவது இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
  3. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவே இறைவன் என்று அறிந்து கொண்டு அவனையே தியானம் செய்கின்ற யோக முறையை பின்பற்றுவது இறைவனுடைய உருவத்திலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
  4. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவாகிய இறைவனை உணர்கின்ற ஞான முறையை அடைவது இறைவனுடனே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.

குறிப்பு:

இந்தப் பாடலில் வருகின்ற சமயம் என்பது என்னவென்றால் தாங்கள் எந்த மதத்தை சார்ந்து எந்த வழிமுறையை பின் பற்றினாலும் அதற்கு என்று வகுத்துக் கொடுக்கப் பட்ட விதிமுறைகளே சமயம் என்று அழைக்கப் படுகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.